Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை இலங்கை வெறும் 112 ரன்களில் வாரிச்சுருட்டி, அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கும், கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியிலும் ரோஹித் ஷர்மா இருந்தார்.

இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டு இருந்தது.

முந்தைய ஆட்டத்தில் ஆடிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரரான ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மைதானத்தில் பனிப்பொழிவும் இருந்தது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது உகந்ததாக இருக்கும் என்று இலங்கை கேப்டன் கருதியிருக்கக் கூடும்.

அவருடைய முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த பின்னர் உணர்ந்திருப்பார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவானும், ரோஹித் ஷர்மாவும் துவக்கம் முதலே அடித்து ஆடினர். ஷிகர் தவான் 67 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 115 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடினார்.

அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர், இந்த போட்டியில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை எடுத்தார். அவர் 70 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அதன்பின், விக்கெட் கீப்பர் டோனி, ரோஹித் ஷர்மாவுடன் இணைந்தார்.

ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக் கோட்டிற்கு விரட்டி ரன் குவித்து வந்த ரோஹித் ஷர்மா, அபாரமாக ஆடி சதம் அடித்தார். சதத்தைக் கடந்தவுடன் அவருடைய ஆட்டத்தில் அனல் பறந்தது. சிக்சரும், பவுண்டரிகளுமாக பறந்து கொண்டே இருந்தது.

அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, 153 பந்துகளில் 208 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும், ஒரு நாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

டோனி தன் பங்கிற்கு 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் சொற்ப ரன்களில், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா 208 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 392 ரன்கள் குவித்தது.

அடுத்து, 393 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடினார். அவர், 111 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களே குவிக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது.

முந்தைய போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்த அபார வெற்றியின் மூலம் இலங்கைக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இரட்டை சதமடித்த ரோஹித் ஷர்மாக, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 17ம் தேதி, விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.