Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர்.

இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது.

ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற்றும் திறன் படைத்தவர் என்பதற்கு இன்றைய ஆட்டமும் உதாரணமாக அமைந்தது.

அவர் இன்றைய ஆட்டத்தில் 153 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 208 ரன்களை குவித்தார். இதில் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் மூன்றாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்துகிறார். இலங்கைக்கு எதிராக அவர் அடிக்கும் இரண்டாவது இரட்டை சதம்.

ரித்திகாவின் பல்வேறு முகபாவனைகள்…

பவுண்டரிகள், சிக்ஸர்கள் மூலம் மட்டுமே அவர் 124 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், ஒரு நாள் அரங்கில் 150 ரன்களுக்கு மேல் 5 முறை குவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் 209 ரன்கள், 264 ரன்கள் எடுத்துள்ளார்.

பொதுவாகவே ரோஹித் ஷர்மா, முதல் 100 ரன்களை எடுப்பதற்கு கணிசமான பந்துகளை அவர் சந்திக்கிறார். அவர் இரட்டை சதம் அடித்த போட்டிகளில் எல்லாம் 101வது ரன் முதல் 200வது ரன்னை எடுப்பதற்கு சராசரியாக 6 ஓவர்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.

முதல்முறையாக அவர் இரட்டை சதம் அடித்தபோது இரண்டாவது சதத்திற்கு 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். இரண்டாவது முறையாக அவர் இரட்டை சதம் அடித்தபோது 101 முதல் 200வது ரன்னை எட்டுவதற்கு 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறார். இன்றைய போட்டியில் 101வது ரன்னில் இருந்து அடுத்த 35 பந்துகளில் அவர் 200 ரன்களைக் கடந்துவிட்டார்.

மனைவிக்கு ரோஹித் ஷர்மா அனுப்பும் பறக்கும் முத்தம்…

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 7 முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் முதன்முதலாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சத கணக்கை துவக்கினார். அவர் 200 ரன்கள் குவித்து இருந்தார். அவருடைய சாதனையை மற்றொரு இந்திய வீரரான ஷேவாக் 219 ரன்கள் எடுத்து தகர்த்தார்.

அதன் பின்னர், கிறிஸ் கெயில் 215 (வெஸ்ட் இண்டீஸ்) மார்டின் கப்தில் 237 ரன் (நியூஸிலாந்து) எடுத்து இருந்தனர். இவர்களுடன் ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்தது இதுவரை முறியடிக்கப்படவில்லை.

ரோஹித் ஷர்மா கடைசியாக எதிர்கொண்ட 27 பந்துகளில் மட்டும் 92 ரன்களை விளாசியுள்ளார். இதில் 11 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும். பேட்டில் படும் பந்துகள் ஒவ்வொன்றும் அந்தரத்தில் சிக்ஸர்களாக பறக்கும்போது மைதானமே ஆர்ப்பரித்தது.

ரசிகர்கள் ஒருபுறம் துள்ளிக்குதித்தாலும், கேலரியில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் காதல் மனைவியான ரித்திகா சாஜ்டே கொஞ்சம் பதற்றமாகவே காணப்பட்டார். சதத்தைக் கடந்து இரட்டை சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் ஒருமுறை ரன் அவுட் ஆக இருந்தார்.

அதைப்பார்த்த ரித்திகாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அவர் அவுட் ஆகிவிடக்கூடாது என்ற பதற்றமும், ஆர்ப்பரிப்பும் அவரிடம் இருந்தது. இரட்டை சதம் அடித்தபோதுகூட அவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கவில்லை.

மாறாக அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. கண்கள் ஆரம்பத்தில் இருந்தே பனித்து இருந்தன.

இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியை கேலரியில் இருந்த தன் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அளித்து பகிர்ந்து கொண்டார். கடந்த 2015ம் ஆண்டில் இதே நாளில்தான் ரோஹித் ஷர்மாவும், ரித்திகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இலங்கையுடனான முதல் போட்டியில் இந்தியா தோற்றதையும், இரணடாவது போட்டியில் பதிலடி கொடுத்ததையும் கிண்டலடித்து ரசிகர்கள் வெளியிட்ட மீம்ஸ்…

அவர்களின் இரண்டாவது திருமண நாளுக்கு இதைவிட மிகச்சிறந் பரிசை ரோஹித் தந்திருக்க முடியாது.

ரோஹித்தின் ஆட்டம் ஒருபுறம் இருக்க, ரித்திகாவின் முக பாவனைகளை கேமராக்கள் அடிக்கடி காட்டிக்கொண்டே இருந்தன. அதையும் ரசிகர்கள் பார்த்து உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.

ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக இரட்டை சதமடித்த ரோஹித் ஷர்மாவை இலங்கை வீரர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.