மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
நாடு முழுவதும் பதினெட்டாவது
மக்களவை தேர்தல்
ஏழு கட்டங்களாக நடந்தது.
முதல்கட்டமாக தமிழகம், புதுவையில்
உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும்
கடந்த ஏப். 19ம் தேதி
தேர்தல் நடத்தப்பட்டது.
ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதையடுத்து, மின்னணு வாக்கு
இயந்திரங்களில் பதிவான வாக்குகள்
எண்ணும் பணிகள் தொடங்கின.
26 சுற்றுகள் வரை வாக்குகள்
எண்ணப்பட்டன.
தொடக்கத்தில் இருந்தே
ஒவ்வொரு சுற்றிலும்
திமுக கூட்டணி முன்னிலையில்
இருந்தது.
தமிழகத்தில் உள்ள
39 தொகுதிகள் மற்றும்
புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி
என மொத்தமுள்ள 40 மக்களவை
தொகுதிகளிலும் திமுக கூட்டணி
வேட்பாளர்கள் அமோக
வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் திமுக போட்டியிட்ட
21 தொகுதிகள், காங்கிரஸ் 9,
மார்க்சிஸ்ட் கம்யூ., 2, இந்திய கம்யூ., 2,
விசிக 2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1,
மதிமுக 1, கொமதேக 1 ஆகிய
39 தொகுதிகளிலும்
திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
அதேபோல புதுச்சேரியில் உள்ள
ஒரு தொகுதியில் காங்கிரஸ்
வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி 40 இடங்களையும் வாரிச்சுருட்டிய நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த
தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன்
விஜய பிரபாகரன் விருதுநகர்
தொகுதியில் போட்டியிட்டார்.
தொடர்ந்து பல சுற்றுகளில் அவர்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட
கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.
கடைசி சுற்றுகளில் முன்னிலை பெற்ற
காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் சொற்ப
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தர்மபுரியில் பாஜக கூட்டணியில்
இடம்பெற்று இருந்த பாமக சார்பில்
அக்கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி
சவுமியா போட்டியிட்டார்.
அவர் திமுக வேட்பாளர் மணிக்கு
கடும் போட்டி அளித்தார்.
பாஜக கூட்டணி சார்பில் இந்த
தொகுதியில் சவுமியா அன்புமணி
மட்டுமாவது கரையேறி விடுவார் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அரூர் சட்டமன்ற தொகுதி வாக்குகளை
எண்ணும்போது பின்னடைவைச் சந்தித்தார்.
அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்ட நிலையில்
சவுமியா அன்புமணியை
திமுக வேட்பாளர் மணி
19 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களான
அக்கட்சியின் முன்னாள் தலைவர் முருகன் (நீலகிரி),
இப்போதைய தலைவர் அண்ணாமலை (கோவை),
எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (நெல்லை),
பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி),
ராதிகா சரத்குமார் (விருதுநகர்),
தமிழிசை சவுந்தர்ராஜன் (தென் சென்னை)
ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
பெரிய அளவில் கூட்டணி பலமின்றி
தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய சிறிய கட்சிகளுடன்
இணைந்து தேர்தலைச் சந்தித்த அதிமுக
இந்தமுறை பல இடங்களில் மூன்றாம்,
நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
சில தொகுதிகளில் காப்புத் தொகையையும்
இழந்து படுதோல்வி அடைந்தது.
பாஜகவை எதிர்த்து களம் கண்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையை தமிழகம் படைத்துள்ளது.
மேலும், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் விவரம்:
1. மத்திய சென்னை – தயாநிதி மாறன் (திமுக)
2. வட சென்னை – கலாநிதி வீராசாமி (திமுக)
3. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு (திமுக)
5. காஞ்சிபுரம் – செல்வம் (திமுக)
6. திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்)
7. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் (திமுக)
8. வேலூர் – கதிர் ஆனந்த் (திமுக)
9. கிருஷ்ணகிரி – கோபிநாத் (காங்.,)
10. தர்மபுரி – மணி (திமுக)
11. திருவண்ணாமலை – அண்ணாதுரை (திமுக)
12. ஆரணி – தரணிவேந்தன் (திமுக)
13. விழுப்புரம் – ரவிக்குமார் (விசிக)
14. கள்ளக்குறிச்சி – மலையரசன் (திமுக)
15. சேலம் – டி.எம்.செல்வகணபதி (திமுக)
16. நாமக்கல் – மாதேஸ்வரன் (கொமதேக)
17. ஈரோடு – பிரகாஷ் (திமுக)
18. திருப்பூர் – சுப்பராயன் (இ.கம்யூ.,)
19. நீலகிரி – ஆ.ராஜா (திமுக)
20. கோவை – கணபதி ராஜ்குமார் (திமுக)
21. பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி (திமுக)
22. திண்டுக்கல் – சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூ.,)
23. கரூர் – ஜோதிமணி (காங்.,)
24. திருச்சி – துரை வைகோ (மதிமுக)
25. பெரம்பலூர் – அருண் நேரு (திமுக)
26. கடலூர் – விஷ்ணு பிரசாத் (காங்.,)
27. சிதம்பரம் – திருமாவளவன் (விசிக)
28. மயிலாடுதுறை – சுதா (காங்.,)
29. நாகப்பட்டினம் – செல்வராஜ் (இந்திய கம்யூ.,)
30. தஞ்சாவூர் – முரசொலி (திமுக)
31. சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் (காங்.,)
32. மதுரை – சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூ.,)
33. தேனி – தங்க தமிழ்ச்செல்வன் (திமுக)
34. விருதுநகர் – மாணிக்கம் தாகூர் (காங்.,)
35. ராமநாதபுரம் – நவாஸ்கனி (ஐயுஎம்எல்)
36. தூத்துக்குடி – கனிமொழி (திமுக)
37. தென்காசி – ராணி ஸ்ரீகுமார் (திமுக)
38. நெல்லை – ராபர்ட் புரூஸ் (காங்.,)
39. விஜய் வசந்த் (காங்.,)
40. புதுச்சேரி – வைத்திலிங்கம் (காங்.,)