சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில்
ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி,
அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ்,
பாஜக கூட்டணியில் உள்ள
பாமக சார்பில் அண்ணாதுரை,
நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர்
மனோஜ்குமார் ஆகியோர் உள்பட
மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.
எனினும், திமுக, அதிமுக இடையேதான்
நேரடி போட்டி நிலவுகிறது.
ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் திமுக ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.
பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது.
ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின் வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில்
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு,
சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி
ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள்
இடம் பெறுகின்றன. இவற்றில்
மொத்தம் 828152 ஆண் வாக்காளர்கள்,
830307 பெண் வாக்காளர்கள்,
இதரர் 222 என மொத்தம்
16 லட்சத்து 58 ஆயிரத்து 681
வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி முழுவதும் மொத்தம்
1766 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில்
130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
என அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
எந்தவித சலசலப்புகளுமின்றி
தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அனைத்து வாக்குச்சாவடிகளிலும்
உள்ளூர் காவல்துறையினருடன்
சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு
ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள்
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட
6 சட்டமன்ற தொகுதிகளிலும்
காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத
வாக்குகள் பதிவாகி இருந்தன.
நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு
விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி
நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும்,
பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத
வாக்குகளும் பதிவாகின.
சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89
சதவீத வாக்குகளும், மாலை 3 மணி
நிலவரப்படி 60.05 வாக்குகளும்,
மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத
வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு
நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட
வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன்
வாக்குச்சாவடிகளுக்கு
வந்த வண்ணம் இருந்தனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்கி மாலை 6 மணி வரைதான்
வாக்குப்பதிவு நடக்கும் என
அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாலை 6 மணியையொட்டி
வாக்குச்சாவடிகளுக்கு வந்த
வாக்காளர்களுக்கு டோக்கன்
வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள்
மட்டும் மாலை 6 மணிக்கு மேலும்
வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார்.
இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், இதரர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்:
ஓமலூர் – 82.84
எடப்பாடி – 84.71
சேலம் மேற்கு – 70.72
சேலம் வடக்கு – 70.72
சேலம் தெற்கு – 75.46
வீரபாண்டி – 84.46
இதில், வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.