கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஜூன் 18ம் தேதி திடீரென்று கொத்துக் கொத்தாக பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் கண் பார்வை மங்கி விட்டதாக கதறினர்; சிலருக்கு ரத்த வாந்தி நின்றபாடில்லை. அப்போதுதான் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்தது.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்
எல்லோருமே சொல்லி வைத்தாற்போல்
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள
கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள்
பலரும் பட்டியலினத்தவர்கள்;
கூலித்தொழிலாளிகள்.
மருத்துவப் பரிசோதனையில்
அவர்கள் மெத்தனால் கலந்த
கள்ளச்சாராயத்தைக் குடித்து இருப்பது
தெரிய வந்தது. இதையடுத்தே,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும்,
மாவட்ட எஸ்பியும் மருத்துவமனைக்கு விரைந்து,
என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினர்.
அதற்குள், சிகிச்சைக்கு வந்தவர்களில்
6 பேர் உயிரிழந்து விட்டனர்.
ஜூன் 19ம் தேதியும் அடுத்தடுத்து
மரணங்கள் தொடர்ந்தன.
மற்றொருபுறம் சிகிச்சைக்கு பலர்
வந்த வண்ணம் இருந்தனர்.
எல்லோருமே மெத்தனால்
சாராயம் குடித்தவர்கள்.
பலரின் நிலை கவலைக்கிடமானதால்
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம்,
புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் ஆகிய
அரசு மருத்துவமனைகளுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டனர்.
130க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டனர்.
அன்று மாலைக்குள் 18 பேர் பலியாயினர்.
இந்த சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் 65 பேர் மெத்தனால் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் இரண்டாவது மெத்தனால் சாராயப் பேரழிவு சம்பவம் இது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்து 23 பேர் பலியாகி இருந்தனர்.
மரக்காணம் சம்பவம் நடந்த ஒரே ஆண்டில், அதே வட்டாரத்தில் இப்படியொரு கொடூரம் அரங்கேறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அரசின் அலட்சியமும், மெத்தனாலை விட மெத்தனப்போக்கும்தான் இத்தனை உயிர்களை பலி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் சாராயத்தால் இறந்தவர்களை வயிற்றுப்போக்கு, வலிப்பு காரணமாக இறந்ததாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத் பூசி மெழுகினார்.
மெத்தனால் சாராயம்தான் சாவுக்குக் காரணம் என பாமரனுக்கும் தெரிந்த நிலையில், ஆட்சியர் அரசுக்கு முட்டுக்கொடுக்க முயன்றதால் பலத்த சர்ச்சை கிளம்பியது. அவரிடம் கேட்டால், மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா அளித்த அறிக்கையின்படியே கூறியதாக அவரையும் கோத்து விட்டார். நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த தமிழக அரசு உடனடியாக ஆட்சியரை இடமாற்றம் செய்தும், எஸ்பியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.
அத்தோடு நில்லாமல் கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த டிஎஸ்பி முதல் ஏட்டுகள் வரை அனைவரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்தது அரசு.
கல்வராயன் மலையில்
கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதும்,
சாராய கும்பலிடம் கையூட்டு
பெற்றுக்கொண்டு காக்கிகள்
கண்டு கொள்வதில்லை என்றும்
சமூக ஊடகங்களில் தொடர்ந்து
தகவல்கள் காட்டுத்தீயாய் பரவியதால்,
தமிழக அரசு வேறு வழியின்றி
சம்பந்தப்பட்ட காக்கிகள் மீது
சாட்டையை சுழற்ற வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
அப்போது சட்டப்பேரவைக்
கூட்டத்தொடரும் நடந்து வந்ததால்
நெருக்கடியைச் சமாளிக்க யாரையாவது
பலிகடாவாக்கித் தீர வேண்டிய அவசியமும்
திராவிட மாடல் அரசுக்கு இருந்தது.
ஆளுங்கட்சி எம்எல்ஏக்களான
உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்
ஆகியோரின் ஆசியுடன் தான் கள்ளச்சாராயம்
ஊருக்குள் வருகிறது என்றும்,
சாராய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யும்
காவல்துறையினருக்கு இவ்விரு எம்எல்ஏக்களும்
முட்டுக்கட்டைப் போடுவதாகவும் சொல்கின்றனர்.
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என்பார்கள்.
மூச்சுக்கு முந்நூறு முறை
திராவிட மாடல் அரசு என்று
சொல்லிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலினின்
திறமையற்ற நிர்வாகம்தான்
இன்றைக்கு 65 உயிர்களை
காவு வாங்கியிருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே
சாதிச்சண்டைகள், மத மோதல்கள்,
இன்ன பிற சென்சிடிவ் ஆன
பிரச்னைகள் தலைதூக்காமல்
கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
பத்திரிகைகளில் கூட அரசுக்கு
எதிரான செய்திகள் முதல் பக்கத்தில்
இடம் பெறாமல் பார்த்துக் கொள்வார்கள்.
உளவுத்துறை தீவிரமாக
முடுக்கிவிடப்பட்டு இருக்கும்.
ஆனால், கள்ளக்குறிச்சியில் நட்டநடு பகுதியில், காவல்நிலையம், நீதிமன்றங்கள் அருகிலேயே கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து உளவுத்துறைக்கு தெரியவில்லை என்பதும், மெத்தனால் சாராயத்தால் பலர் இறந்தது கூட உள்ளூர் காவல்துறைக்கு தாமதமாகத்தான் தெரிய வந்திருக்கிறது என்பதும் இந்த அரசின் நிர்வாகத்திறமையற்ற செயலையே காட்டுகிறது.
மரக்காணம் சம்பவத்திலும் உளவுத்துறையின் அலட்சியம்தான் முக்கிய பங்கு வகித்தது. அதுமட்டுமல்ல… கள்ளக்குறிச்சி கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தின்போது சில மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் பள்ளிக்கு எதிராக திரண்டு போராடினர். ஒரு சம்பவத்தின் வீச்சு எந்தளவுக்கு இருக்கும் என்பதைக்கூட உளவுத்துறையும், உள்ளூர் காவல்துறையினரும் கணிக்க முடியாத அளவுக்கு இருந்துள்ளனர்.
அதேபோல், கடந்த 2023ம் ஆண்டு பிப்.2ம் தேதி, சென்னை & பெங்களூரு சாலையில், எருதாட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி தர தாமதித்ததால் திடீரென்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேரத்தில் அந்த சாலையே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போனது. இந்த சம்பவத்திலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பிரக்ஞை காவல்துறைக்கு அப்போது கொஞ்சம் கூட இல்லை.
மரக்காணம் சம்பவம் நடந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்றும் கூறினார். சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் எனக்கூறும் முதல்வர், மரக்காணம் சம்பவத்தில் சொன்னதைக்கூட செய்யவில்லையே? அங்கேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருந்தால் இன்றைக்கு 65 உயிர்கள் பலியாகி இருக்காது.
தஞ்சையில் டாஸ்மாக்கில் விற்ற மதுவில் சயனைடு கலந்து இருந்தது தெரியாமல் குடித்த இருவர் உயிரிழந்தனர். சயனைடு எப்படி வந்தது என்பது இன்று வரை தமிழகத்தின் ஸ்காட்லாண்டு யார்டு காவல்துறைக்கு தெரியாது.
சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகத்தையே ஒரு கும்பல் சூறையாடியது. அங்கும் காவல்துறையின் செயல்பாடு ஆமை வேகத்தில்தான் இருந்தது. இன்னும் வேங்கைவயல் விவகாரம் நாறிக்கொண்டுதான் இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில்
இரு குழந்தைகளின் தாயான நித்யா
என்பவர் கொலை செய்யப்பட்டதை
தொடர்ந்து மர்ம நபர்கள் திடீர் திடீரென்று
பெட்ரோல் குண்டு வீசுவதும்,
வயல்வெளிகளை நாசப்படுத்தும்
செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியில்
யார் யாருக்கிறார்கள் என்பதைத்
தெரியாமலேயே ஓராண்டுக்கும் மேலாக
6 மாவட்ட காவல்துறையினர்
அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில்
பாரா பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் அவதானிக்கையில்,
காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
சிசிடிவி கேமரா தொழில்நுட்பமே இல்லாவிடில்,
இவர்களால் குற்றவாளிகளை நெருங்கவே முடியாதா?
என்ற கேள்விகள் எழுவதை
தவிர்க்க முடியவில்லை.
உள்துறையை வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினின் உளவுத்துறையோ, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வரும் ஒற்றன் போல், சம்பவம் நடந்த பிறகுதான் அவரின் காதுகளுக்கு தகவலையே கொண்டு செல்கிறார்கள். இந்த உண்மையைக்கூட உணராத நிலையில்தான் இருக்கிறார் தமிழக முதல்வர்.
முதல்வர் புலிகேசி மன்னன் என்றால், அமைச்சர் துரைமுருகனோ அவரின் லகுடபாண்டி. ‘டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை. அதனால்தான் கள்ளச்சாராயத்தைத் தேடிச்செல்கின்றனர்,’ என புதுமையான விளக்கம் கொடுக்கிறார் அமைச்சர் துரைமுருகன். நமக்கோ, ‘மூடர்கூடம்’ படத்தில் சொல்வதைப்போல், ‘இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டும் சென்ட்ராயன்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் மடைமாற்றம் செய்தாலும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் யாருமே டாஸ்மாக்கில் ஒரு குவார்ட்டருக்காக 200 ரூபாய் செலவழிக்க முடியாத அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 1.66 லட்சமாக உயர்ந்துள்ளதாகச் (2022-2023 தரவுப்படி) சொல்கிறது தமிழக அரசு. தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டிருக்கிறதா என்றால் உண்மைதான். இந்த வளர்ச்சியில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவுக்கே பெரும் பங்கு இருப்பதும் உண்மைதான். ஆனால் வளர்ச்சி என்பது நாலாபுறமும் சமமாக இருக்க வேண்டுமேயன்றி, செங்குத்தாகவோ, ஏதோ ஒரு பக்கத்தில் மட்டும் புடைத்துக் கொண்டோ இருக்கக் கூடாது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது, செங்குத்து வளர்ச்சியேயன்றி சமநிலையானது அல்ல.
பொருளாதாரத்தில் செங்குத்து வளர்ச்சி கண்டுள்ள அதேநேரம், சமூக சிந்தனை தளத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம். சமூக, கலாச்சார, பண்பாட்டுத் தளத்திலும், அறம் சார்ந்தும் நாம் பின்னோக்கி இருக்கிறோம். அதனால்தான் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் சாதி மோதலும், விழுப்புரம், சேந்தமங்கலத்தில் கோயில் வழிபாட்டை மையப்படுத்தி சாதிச்சண்டைகளும் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஒடுக்கவோ, சீர்திருத்தம் செய்யவோ திராவிட மாடல் அரசு ஒருபோதும் சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. மாறாக, சாதித் தீயில் குளிர் காய்கிறது.
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கின்ற சமூகமும், சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததால் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கும் சமூகமும் வளர்ச்சி அடைந்ததாக எப்படிக் கருத முடியும்?
தனிநபர் வருமான உயர்வு
பரவலாக்கம் பெற்றிருந்தால்,
கள்ளக்குறிச்சியிலும், மரக்காணத்திலும்
ஏன் மலிவு விலை மெத்தனால்
விஷத்தைத் தேடிச்சென்று குடித்து சாக வேண்டும்?
மரக்காணத்திலும், கருணாபுரத்திலும்
விளிம்பு நிலையில் உள்ள பட்டியலின
மக்கள் மட்டுமே மெத்தனாலை
குடித்துச் சாகிறார்கள் எனில்,
இந்த நாட்டின் எந்த பொருளாதார
நலத்திட்டங்களும் அவர்களை
எட்டவே இல்லை என்றுதானே பொருள்?
‘உள்ளத்தனையது உயர்வு’ என்பதுபோல்,
மெத்தனால் வரை அவர்கள் வாழ்வு என்று
இந்த அரசு அவர்களைப் போன்ற
விளிம்பு நிலை மக்களை
கண்டும் காணாமலும் விட்டுவிட்டதோ
என்ற கேள்வியும் எழுகிறது.
மக்கள் தொகையில் கணிசமாக உள்ள
பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக
தொடர்ச்சியான செயல்திட்டங்களை
இந்த அரசு முன்னெடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி போன்ற வடமாவட்டங்கள்
இன்றும் கல்வியில் பின்தங்கி இருக்கிறது.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை
50 விழுக்காட்டை எட்டி விட்டோம்
என பெருமைப்படுவதை விட,
ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வியில் பின்தங்கிய
பகுதிகளில் அதை மேம்படுத்துவதற்கான
சிறப்புத்திட்டங்கள் தேவை.
அந்தளவுக்கு தமிழக அரசு மைக்ரோ மேனேஜ்மென்ட்
பற்றி இதுவரை சிந்திக்கவே இல்லை.
சமூக, பொருளாதார ரீதியாக
நலிவுற்ற பிரிவினர் வசிக்கும் பகுதிகளில்
உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை
ஏற்படுத்திக் கொடுக்கவும் திமுக, அதிமுக
அரசுகள் தவறி இருக்கின்றன.
ஒருவேளை, இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால்
கருணாபுரம் மக்கள் நிச்சயம் மெத்தனாலைத்
தேடிச்சென்று செத்திருக்க மாட்டார்கள்.
எங்கே ஆளுமைத்திறன் குறித்த விமர்சனங்கள் வந்துவிடுமோ என அஞ்சிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியானோரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம், ஆட்சியர் முதல் எஸ்பி, போலீசார் வரை நடவடிக்கை என அவசர அவசரமாக சாட்டையைச் சுழற்றி இருக்கிறார். இப்படி நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தாலும் கூட, சமூக அவலத்தின் வேர்களைத் தேடிச்செல்வதன் மூலம்தான் எதிர்காலத்திலும் இதுபோன்ற குற்றம் நடக்காமல் தடுக்க முடியும். அதாவது, அவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும் என்கிறேன்.
கூட்டணிச் சகதியில்
சிக்கிக் கொண்டு தவிக்கும்
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக
உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி
துயரத்தில் ஆளும் அரசிடம்
அடிபணிந்து கிடக்கின்றன.
மூன்று ஆண்டுகளாக பெரும் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி துயில் களைந்து, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றுகிறார். அவருக்கும் இது அரசியல் கணக்குதான். அதிமுக ஆட்சிக்காலத்திலும் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் ஓடிக்கொண்டுதான் இருந்தது.
‘அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்’ முதல்வரே.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்காக
நீங்கள் முதல்வர் பதவியை ராஜிநாமா
செய்ய வேண்டியதில்லை.
ஆனால், நிர்வாக ரீதியாக
தோற்றுப்போனதற்காக
நீங்கள் கொஞ்சமாவது
வெட்கப்பட வேண்டமா?
– பேனாக்காரன்