Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே ‘வைரல்’ ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து ‘வைரல்’ ஆக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவுடமை சிந்தனைகளையோ விதைக்கத் தவறியதில்லை.

அரசியல் பேச, அவர் எந்த மேடையையும் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறார். அது ‘பிக்பாஸ்’ மேடையாக இருந்தாலும் சரி; ‘தி இந்து’வின் ‘யாதும் தமிழே’ மேடையாக இருந்தாலும் சரி, அரசியல் மொழியற்ற கமலை இனி பார்க்க முடியாது. நேற்றுகூட (செப். 16) ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில், ‘நீண்ட நாட்கள் இருப்பவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லையே’ என பொடி வைத்துப் பேசுவார்.

‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் ஒருவர், ‘நீங்கள் கேரளா முதல்வரை சந்தித்தீர்களே. தமிழக முதல்வரை சந்திக்க மாட்டீர்களா?’ எனக் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், ‘இங்கேயும் சந்திக்க ஆசைதான். போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம்தான்,’ என்கிறார். நையாண்டியாகச் சொன்னாலும், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்களை நாம் பார்த்தவர்கள்தானே. இடையில் சசிகலாகூட முதல்வராக ஆசைப்பட்டாரே.

கமலின் இந்த பதில், அவரின் சொந்த சரக்காக இருக்க முடியாது. அவரின் உணர்வுடன் இரண்டற கலந்துவிட்ட இயக்குநர் பாலச்சந்தரிடம் இருந்தே இதையும் சுவீகரித்துக் கொண்டிருக்கிறார். ஆமாம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980) படத்தில், ரங்கன் பாத்திரத்தில் நடித்திருந்த கமல், வேலை தேடி ஒரு நேர்காணலில் கலந்து கொள்ளும் காட்சி இடம் பெறும். நேர்காணலில், ‘மஹாராஷ்டிரா முதல்வர் யார்?’ என்று ஒரு கேள்வி கேட்பார்கள். அதற்கு ரங்கன், ‘இன்றா? நேற்றா? அல்லது நேற்று முன்தினமா?. ஏனெனில் இங்கு தினம் ஒரு முதலமைச்சர் மாறிக் கொண்டே இருக்கிறார்’ என்று நக்கலாக பதில் அளிப்பார். அந்தப் பாத்திரத்தின் துடுக்குத்தனம்தான் 63 வயதிலும் கமலிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

‘தசாவதாரம்’ பூவராகன் பாத்திரமாகட்டும், ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்தி கதாபாத்திரமாகட்டும். எல்லாவற்றிலும் முற்போக்குச் சிந்தனைகளும், தன்னம்பிக்கை ஊட்டும் வசனங்களும் மிளிர்வதைக் காணலாம். ‘தசாவதாரம்’ படத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆண்டாள் கேட்கும் ஒரு காட்சியில், ‘கடவுள் இல்லைனு யார் சொன்னா? இருந்தால் நல்லாருக்கும்னுதானே சொன்னேன்’ என்பார் கமல்.

‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில், ‘நீங்கள் எல்லாவற்றிலும் உடனடி தீர்ப்பை எதிர்பார்க்கிறீர்கள்’ என்று மாறார் கதாபாத்திரத்தில் நடித்த மோகன்லால் சொல்வார். அதற்கு கமல்ஹாசன், ‘தீவிரவாத செயல்கள் மட்டும் உடனடியாக நடக்கும்போது, தீர்ப்புகள் மட்டும் உடனக்குடன் ஏன் கிடைப்பதில்லை,’ என்று பதிலடி கொடுப்பார்.

‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில், பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையுடன் நடக்கும் வார்த்தை யுத்தத்தில் உதயமூர்த்தி, ‘இந்த நாட்டுக்கு இப்போது கானக் கச்சேரி தேவை இல்லை. ஞானக் கச்சேரிதான் தேவை’ என்பார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து, இப்போதும் அந்த வசனம் நிகழ்காலத் தேவையை பிரதிபலிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதே படத்தில், நடிகை சீதா தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பார். அவருடனான காதலை கண்டிக்கும் தந்தையின் கண் முன்னாலேயே, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் உதயமூர்த்தி. தலித் சமூகத்துடன் தன்னையே இணைத்துக் கொண்டேன் என்பதை தந்தைக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய காட்சி வைக்கப்பட்டு இருக்கும்.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில், முடிதிருத்தும் தொழிலாளி வேடத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன். ஷேவிங் செய்து கொள்ள வரும் தேங்காய் சீனிவாசன் அவரிடம், ‘ஆமா…நீ என்ன ஜாதி?’ எனக் கேட்பார். அதற்கு கமல், ‘வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றது அப்பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும்…’ என்று பாரதியார் பாட்டின் மூலம் பதிலடி கொடுப்பார்.

திரைப்படங்களில் கமல் பேசும் பல வசனங்களின் கர்த்தா அவர் அல்ல. ஆயினும், அத்தகைய முற்போக்கு வசனங்கள் அவருக்கே முற்றிலும் பொருந்தி வந்தது. எப்படி ரசிகர்களுக்கு அறிவுரை, தாய்ப்பாசம் பற்றி சொல்லும் வசனங்கள் எம்ஜிஆருக்கு இயல்பாக பொருந்தியதோ, அப்படி கமல்ஹாசனுக்கு முற்போக்கு வசனங்கள்.

நிழல் நிஜமாகாதுதான். ஆனால், யதார்த்த உலகிலும் கமல் தன்னை ஒரு பொதுவுடைமைவாதியாக, பெரியாரியம் பேசுபவராக, கடவுள் பற்றற்றவராகவே வரித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ‘கர்ணன்’ ஆக சிவாஜி நடித்திருந்தாலும், நிஜ உலகில் நடிகர் திலகத்தின் கொடை(?!) உள்ளம் எப்படி இருந்தது என்பதை திரையுலகினரும், நெருக்கமான ரசிகர்களும் நன்கறிவர். இப்படிச் சொல்வதால் நாம் ஒப்பற்ற நடிகர் திலகத்தை குறைத்து மதிப்பிட்டதாக கருதிவிடாதீர்கள். ஓர் ஒப்புமைக்காகச் சொல்ல நேரிட்டது. அவ்வளவே.

திரைத்துறையில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெரியாரைக் கொண்டாடுவதில் கமலுக்கு நிகர் கமல் மட்டுமே. ”அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879, செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார், மறுக்க முடியாத உண்மை. வாய்மையே வென்றது,” என்று பெரியார் பிறந்த நாளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்கெல்லாம் சமூகநீதி மறுக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் நிராகரிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் பெரியாரின் கைத்தடிதானே நம்மை ‘நங்’கென்று தாக்குகிறது? நாம் அவரைத்தானே உசுப்பி எழுப்பி அழைத்து வருகிறோம்?. எனில், பெரியாரின் தேவை இன்றும் இருக்கிறது என்றுதானே அர்த்தம். அவரின் முகமாக கமல் இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடமும், திராவிட சிந்தனையாளர்களிடமும் இருப்பது இயல்புதானே?

திரைமொழியாக இருந்தாலும், பொது மேடையாக இருந்தாலும் இயல்புத் தன்மையை மறைக்காத நடிகராகவே வலம் வருகிறார் கமல்ஹாசன். அவருடைய அரசியல் பாதை, பொதுவுடைமையும், பெரியாரிஸமும் கலந்த கலவையாகத்தான் இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்கள், ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ‘கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்’ (Comunism + Periyarism = Kamalism) என்ற புதிய கோட்பாட்டை அவர் வெகு விரைவிலேயே உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

– பேனாக்காரன்.
தொடர்புக்கு: 9840961947