Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீல் தடாலடி! தடுமாறிய முக்கிய சாட்சி!! #Day4 #Gokulraj

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இன்று (செப்டம்பர் 6, 2018) நடந்த குறுக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான கலைசெல்வன், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பு வக்கீலின் தடாலடி கேள்விகளால் நிலைகுலைந்தார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் – சித்ரா தம்பதியரின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், உடன் படித்து வந்த, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி தோழி சுவாதியும் காதலிப்பதாக எண்ணிய ஒரு கும்பல் கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின.

கோகுல்ராஜ்

இந்த வழக்கில், சந்தேகத்தின்பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.

 

இவர்களில், யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது.

 

கைது செய்யப்பட்டவர்களில் ஜோதிமணி சொத்துத் தகராறில் அவருடைய கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாமினில் சென்றபோது அமுதரசு தலைமறைவாகிவிட்டார். மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

யுவராஜ்

ஏற்கனவே கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணையும், எதிரிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் மதுரை கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணையும் நடத்தி முடித்துவிட்டனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கின் மூன்றாவது சாட்சியான கோகுல்ராஜின் உடன்பிறந்த அண்ணன் கலைசெல்வன் செப்டம்பர் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அன்று அவர் கடைசியாக கோகுல்ராஜ் அணிந்து சென்ற உடைகளை அடையாளம் காட்டினார். இன்று (செம்டம்பர் 6, 2018) அவரிடயம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

பகல் 12.15 மணிக்கு குறுக்கு விசாரணை தொடங்கியது. குறுக்கு விசாரணையின் சுருக்கமான வடிவம்…

 

வக்கீல்: கோகுல்ராஜ் கடைசியாக 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியதாக சொல்லி இருக்கிறீர்கள். அன்று இரவு அவர் வீட்டுக்கு வராததால் அவருடைய நண்பர்கள் வீட்டில் தேடினீர்களா?

 

கலைசெல்வன்: தேடினோம். அன்று இரவு அவனுடைய நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நாங்கள் தேடும்போது உடன் இருந்தனர்.

 

வக்கீல்: புகார் கொடுக்கும்போது கட்சிக்காரர்கள் உடன் இருந்தார்களா?

 

கலைசெல்வன்: இல்லை. நாங்கள் மட்டும்தான் சென்றோம்.

 

வக்கீல்: உங்கள் தம்பி கேஎஸ்ஆர் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதமே படிப்பை முடித்து விட்டாரா?

 

கலைசெல்வன்: ஆமாம்.

 

வக்கீல்: கோகுல்ராஜ் காணாமல் போய் விட்டார் என்று எப்போது தெரியும்?

 

கலைசெல்வன்: 23.6.2015ம் தேதி இரவு 7 மணி ஆகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. அதுகுறித்து நண்பர்களிடம் விசாரித்தேன்.

 

வக்கீல்: ஓமலூரை தவிர வெளியூர்களில் அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?

 

கலைசெல்வன்: அது தெரியாது. கல்லூரியில்தான் நண்பர்கள் இருக்கின்றனர்.

 

வக்கீல்: 23.6.2015ம் தேதி காலை 10.30 மணியளவில் உங்கள் பர்சில் இருந்த 100 ரூபாய் காணவில்லை என்று உங்கள் தாயாரிடம் கேட்டீர்களா?

 

கலைசெல்வன்: ஆமாம். கேட்டேன்.

 

வக்கீல்: கோகுல்ராஜ் பணம் எதுவும் கேட்டானா என்று அம்மாவிடம் கேட்டீர்களா?

 

கலைசெல்வன்: அப்படி கேட்கவில்லை.

 

வக்கீல்: இதுபற்றி போலீசார் தரப்பில் நான்கு முறை விசாரித்தபோதும் கூறினீர்களா?

கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ

 

கலைசெல்வன்: நான்கு முறை அல்ல. சிபிசிஐடி போலீசாரிடம் மட்டும் ஒருமுறை கூறினேன்.

 

வக்கீல்: கோகுல்ராஜ் உங்களிடம் பணம் எதுவும் கேட்டாரா?

 

கலைசெல்வன்: இல்லை.

 

வக்கீல்: கோகுல்ராஜ் அப்போது கஷ்டத்தில் இருந்தார். நீங்களும், தாயாரும் பணம் தராததால் நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி இருந்தார். அதனால் நெருக்கடியில் இருந்தார்.

 

கலைசெல்வன்: தவறு.

 

வக்கீல்: 23.6.2015ம் தேதி காலை 10.30 மணியளவில், கோகுல்ராஜிக்கு உங்கள் தாயார் போன் செய்தார். ரிங் சென்றது. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் அவரிடம் இருந்து வேறு ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய கோகுல்ராஜ், நண்பருடன் இருக்கிறேன். நான் வந்து விடுகிறேன் என்று சொன்னது சரிதானா?

 

கலைசெல்வன்: சரிதான்.

 

வக்கீல்: உங்கள் தாயாருக்கு போன் பண்ணியதாக சொல்கிறீர்கள். அந்த சிம் கார்டு அம்மாவின் பெயரில் உள்ளதா?

கலைசெல்வன்: இருக்கலாம். ஆனால் சரியாக தெரியவில்லை. அம்மாவிடம் இரண்டு நம்பரும், என்னிடமும், தம்பியிடமும் தலா இரண்டு நம்பர்களும் இருக்கிறது… (இவ்வாறு விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தபோது வக்கீல், இருக்கு அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள் என்றார் காட்டமாக).

 

வக்கீல்: உங்கள் தம்பி எந்த நம்பரில் இருந்து பேசினார் என்று தெரியுமா?

 

கலைசெல்வன்: நம்பர் தெரியாது

 

வக்கீல். உங்கள் தம்பியின் செல்போன் நம்பர் தெரியுமா? அது என்ன நம்பர்?

 

கலைசெல்வன்: தெரியும். (அவர் ஒரு செல்போன் நம்பரை குறிப்பிட்டார்)

 

வக்கீல்: 23.6.2015ம் தேதி காலை 8.45 மணிக்கு கோகுல்ராஜிக்கு போன் செய்தபோது ரிங் சென்றது. அதை எடுத்துப் பேசியது ஓர் ஆண் குரல். யாரென்று கேட்டதற்கு கோகுல்ராஜின் நண்பர் என்று சொன்னார். பின்னிட்டு கோகுல்ராஜிடம் போனை கொடுக்கச்சொன்னபோது கட் செய்து விட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைப்பற்றி போலீசில் சொன்னீர்களா?

 

கலைசெல்வன்: சொன்னேன்.

 

வக்கீல்: 23.6.2015ம் தேதி இரவு கோகுல்ராஜ் வீட்டுக்கு வராததால் அவர் பற்றி விசாரித்தபோது, தம்பி காணாமல் போய்விட்டார் என்ற எண்ணம் தோன்றியதா?

 

இப்படி கேட்டதற்கு, கலைசெல்வன் ஏதோ சொல்ல முயன்றார். அதற்கு வக்கீல் இடைமறித்து ‘சார்… பலரிடம் விசாரித்தபிறகும் கோகுல்ராஜை பற்றி தகவல் இல்லாதபோது அவர் காணாமல் போய்விட்டதாக தோன்றியதா இல்லையா? என்று மீண்டும் கேட்டார். அதற்கு சில நொடிகள் கலைசெல்வன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

 

கலைசெல்வன்: ஆமாம். காணாமல் போய்விட்டதாக தோன்றியது.

 

வக்கீல்: ஒருவர் காணாமல் போய்விட்டார் என்றால் அதுபற்றி போலீசில் தகவல் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா? போன் மூலமாகவும் தகவல் சொல்லலாம் என்பது தெரியுமா? தெரியாதா?

 

கலைசெல்வன்: போலீசுக்கு போகவில்லை. ஆனால் தம்பியை தேடிப்பார்த்தோம்.

 

வக்கீல்: எந்தெந்த ஊர்களில் எல்லாம் தேடினீர்கள்?

 

கலைசெல்வன்: தம்பியின் நண்பர்கள், உறவினர்களிடம் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம். 4 கி.மீ. தூரத்தில் உள்ள எங்கள் தாத்தா வசிக்கும் ஊர் மற்றும் மாமா வீடுகளில் தேடினோம்.

 

வக்கீல்: 24.6.2015ம் தேதி, உங்கள் தம்பியின் பேஸ்புக்கை தேடியதாக சொல்லி இருக்கிறீர்கள். அதில் அவருடைய எல்லா நண்பர்கள், உறவினர்களும் நட்பு வட்டத்தில் இருந்தார்களா?

 

கலைசெல்வன்: எல்லோரும் இல்லை.

 

வக்கீல்: பேஸ்புக்கில் பதிவு செய்ய இ&மெயில் ஐடி, செல்போன் நம்பர் தேவைதானா? (இப்படி கேட்டபோது, கலைசெல்வன் முன்பு கேட்கப்பட்ட செல்போன் சர்க்யூட் பற்றிய கேள்விக்கு பதில் தர முயன்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சற்று காட்டமாக, சார்… கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்றார்).

 

கலைசெல்வன்: ஆம்.

 

வக்கீல்: 24.6.2015ம் தேதி அதிகாலை 4.05 மணிக்கு கோகுல்ராஜின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவருடைய நண்பர் பாலமுருகன் என்பவரின் செல்போன் நம்பரை எடுத்து, அதில் பேசியது, அவரிடம் இருந்து கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக்ராஜாவின் செல்போன் நம்பரை பெற்றது பற்றி நான்கு முறை நடந்த போலீஸ் விசாரணையில் சொல்லி இருக்கிறீர்களா?

 

கலைசெல்வன்: ஆமாம். சொல்லி இருக்கிறேன்.

 

வக்கீல்: கார்த்திக்ராஜாவிடம் பேசும்போது யாருடைய நம்பரில் இருந்து பேசினீர்கள்?

 

கலைசெல்வன்: என்னுடைய நம்பரில் இருந்து பேசினேன்.

 

வக்கீல்: கார்த்திக்ராஜாவின் செல்போன் நம்பர் முன்பே தெரியுமா?

 

கலைசெல்வன். இல்லை. அப்போதுதான் தெரியும்.

 

வக்கீல்: போலீசில் புகார் அளிக்கும்போது கார்த்திக்ராஜா உடன் இருந்தாரா?

 

கலைசெல்வன்: ஆம். இருந்தார்.

 

வக்கீல்: புகார் தரும்போது உங்கள் போன் உங்களிடம் இருந்ததா?

 

கலைசெல்வன்: இருந்தது.

 

வக்கீல்: கார்த்திக்ராஜாவும், சுவாதியும் போனில் கூறிய விவரங்கள் பற்றியோ, சீனிவாசன் என்பவரது போனில் இருந்து உங்கள் போனுக்கு வாய்ஸ் ரெக்கார்டு செய்தது பற்றியோ புகாரில் கூறினீர்களா?

 

கலைசெல்வன்: புகாரில் கூறவில்லை.

 

வக்கீல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விசாரிக்கும்போது உங்கள் போன் உங்களிடம் இருந்ததா?

 

கலைசெல்வன்: இருந்தது

 

வக்கீல்: திருச்செங்கோடு டவுன் காவல்நிலையத்தில் டிஎஸ்பி விசாரித்தபோது, சுவாதி உங்களிடம் போனில் பேசியபோது லவுடு ஸ்பீக்கர் மூலமாக போட்டு அதை சீனிவாசன் என்பவரின் போனில் பதிவு செய்தது பற்றியும், பின்னர் அந்தப் பதிவை உங்கள் போனில் காப்பி செய்து கொண்டது பற்றியும் கூறினீர்களா?

 

கலைசெல்வன்: சொல்லவில்லை.

 

மதியம் 1.20 மணி வரை இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது. உணவு இடைவேளை விடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேருக்கும் போலீசார் வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு மதியம் 2.35 மணிக்கு மீண்டும் குறுக்கு விசாரணை தொடர்ந்தது.

 

வக்கீல்: சுவாதி பேசிய பதிவு எத்தனை நிமிடங்கள் வரும்?

 

கலைசெல்வன்: சுமார் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் வரும்.

 

வக்கீல்: சுவாதியிடம் பெற்ற தகவல்களில் இருந்து உங்கள் தம்பி கடத்தப்பட்டார் என்பது நிச்சயமாக தெரிந்ததா?

 

கலைசெல்வன்: நிச்சயமாக தெரிந்தது.

 

வக்கீல்: சுவாதியிடம் போனில் ஓமலூரில் உள்ள உங்கள் வீட்டில் இருந்துதான் பேசினீர்களா?

 

கலைசெல்வன்: ஆமாம். வீட்டில் இருந்துதான் பேசினேன்.

 

வக்கீல்: ஓமலூரில் காவல் நிலையம் இருக்கிறதா?

 

கலைசெல்வன்: இருக்கிறது.

 

வக்கீல்: வீட்டுக்கும் காவல் நிலையத்திற்கும் எவ்வளவு தூரம்?

 

கலைசெல்வன்: சுமார் ஒரு கிலோமீட்டர்.

 

வக்கீல்: கடத்தல் என தெரிந்த பிறகும் ஏன் உடனடியாக புகார் அளிக்கவில்லை?

 

கலைசெல்வன்: சம்பவம் நடந்த இடம் திருச்செங்கோடு எல்லைக்குள் இருந்ததால் அங்கே சென்று புகார் அளித்தால்தான் சரியாக இருக்கும் என்று கருதினோம்.

 

வக்கீல்: அப்படி குறிப்பிட்டு யாராவது சொன்னார்களா?

 

கலைசெல்வன்: இல்லை. நாங்கள் எல்லோரும் டிஸ்கஸ் செய்து எடுத்த முடிவுதான்.

 

வக்கீல்: உடனே நேராக திருச்செங்கோடு காவல் நிலையம் சென்றீர்களா?

 

கலைசெல்வன்: உடனே போக முயற்சி செய்தோம்

 

வக்கீல்: எதில் சென்றீர்கள்?

 

கலைசெல்வன்: நான் என் நண்பரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றேன். அம்மா மற்றும் சொந்தக்காரர்கள் ஆம்னி வேனில் வந்தார்கள்.

 

வக்கீல்: ஓமலூரில் இருந்து நேராக திருச்செங்கோடு காவல் நிலையம் சென்றீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை. திருச்செங்கோட்டில் சுவாதியை பார்த்துவிட்டுதான் சென்றோம்.

 

வக்கீல்: திருச்செங்கோடு வருமாறு சுவாதிக்கு போனில் தகவல் சொன்னீர்களா?

 

கலைசெல்வன்: திருச்செங்கோடுக்கு வருமாறு சொன்னோம். ஆனால் அவர் ஈரோடுக்கு வந்து விடுமாறு கூறினார். பிறகு கார்த்திக்ராஜா எங்களை தொடர்பு கொண்டு, சுவாதி திருச்செங்கோடுக்கே வருவதாக கூறிவிட்டார் என்று தகவல் சொன்னார்.

 

வக்கீல்: சுவாதியின் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா?

 

கலைசெல்வன்: தெரியாது. ஆனால் உரையாடலின்போது பரமத்தி வேலூரில் இருப்பதாக சுவாதி கூறியிருக்கிறார்.

 

வக்கீல்: சுவாதியின் தாயார், குடும்பத்தார் யாராவது வந்தார்களா?

 

கலைசெல்வன்: இல்லை. சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா உடன் வந்தார்

 

வக்கீல்: கார்த்திக்ராஜாவிடம் சுவாதியை அழைத்து வருமாறு கூறினீர்களா?

 

கலைசெல்வன்: நான் சொல்லவில்லை

 

வக்கீல்: 24.6.2015ம் தேதியன்று ஓமலூரில் இருந்து திருச்செங்கோடுக்கு எப்போது புறப்பட்டீர்கள்?

 

கலைசெல்வன்: காலை 10 மணிக்குள் இருக்கும் (இப்படி அவர் சொன்னதும் எதிர்தரப்பு வழக்கறிஞர், சார் அப்படி என்றால் அதிகாலை 5 மணிக்கு என்று பதிவு செய்யுங்கள் என்றார். உடனடியாக கலைசெல்வன் குறுக்கிட்டு, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் இருக்கும் என்றார்)

 

வக்கீல்: திருச்செங்கோடு சென்றடைந்தபோது எத்தனை மணி இருக்கும்?

 

கலைசெல்வன்: காலை சுமார் 11 மணி இருக்கும்.

 

வக்கீல்: திருச்செங்கோட்டில் காவல் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா?

 

கலைசெல்வன்: அப்போது தெரியாது

 

வக்கீல்: திருச்செங்கோடு பேருந்து நிலையம் செல்லும் வழியில் காவல் நிலையம் ஏதும் இல்லையா?

 

கலைசெல்வன்: நாங்கள் வந்த வழியில் இல்லை

 

வக்கீல்: சுவாதியையும் கார்த்திக்ராஜாவையும் வரச்சொன்னது, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகத்தான் என்று சொன்னீர்களா?

 

கலைசெல்வன்: ஆமாம்

 

வக்கீல்: கார்த்திக்ராஜா, சுவாதியிடம் பேசும்போது திருச்செங்கோடு போலீஸ் நிலையத்துக்கு வந்து விடுமாறு கூறினீர்களா?

 

கலைசெல்வன்: அப்படி சொல்லவில்லை

 

வக்கீல்: ஓமலூரில் இருந்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யத்தான் திருச்செங்கோடு வந்தீர்களா?

 

கலைசெல்வன்: ஆமாம்

 

வக்கீல்: ஓமலூரில் இருந்து வரும்போதே புகார் மனு தயார் செய்து எடுத்து வந்தீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை

 

வக்கீல்: புகாரை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் வைத்துதான் எழுதினீர்களா?

 

கலைசெல்வன்: அங்குள்ள ஒரு கடையில் வைத்து புகார் மனுவை தயார் செய்தோம்.

 

வக்கீல்: உங்கள் தாயார் சொன்னதை வைத்துதான் புகார் மனு எழுதப்பட்டதா?

 

கலைசெல்வன்: சுவாதியிடம் என் அம்மா என்ன கேட்டாரோ, அதை அவர் சொன்னதை வைத்து என் மாமா நடேசன் புகார் மனுவை எழுதினார்

 

வக்கீல்: ஒரே நேரத்திலா…?

 

கலைசெல்வன்: இல்லை. முன்பே என் அம்மாவிடம் சுவாதி சொன்ன தகவல்களின் அடிப்படையில் புகார் மனு எழுதினோம்

 

வக்கீல்: புகார் எழுதும்போது சீனிவாசன் உடன் இருந்தாரா?

 

கலைசெல்வன்: இல்லை

 

வக்கீல்: புகார் எழுதும்போது உங்கள் போன் உங்களிடம் இருந்ததா?

 

கலைசெல்வன்: என்னுடைய போன் என்னிடம் இருந்தது

 

வக்கீல்: புகார் எழுதும்போது போனில் பதிவு செய்து வைத்திருந்த தகவலை போட்டுப்பார்த்து எழுதினீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை. அப்போது போட்டுப் பார்க்கவில்லை

 

(எதிர் தரப்பு வழக்கறிஞர், போனில் சுவாதி கூறிய தகவல் பதிவு செய்யப்பட்டது குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்)

 

வக்கீல்: எந்த கடையில் இருந்து புகார் மனு எழுதப்பட்டது?

 

கலைசெல்வன்: திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு புகார் மனு எழுதினோம். அப்போது கடை திறந்து இருந்தது.

 

வக்கீல்: அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

 

கலைசெல்வன்: இது சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருந்தேன்.

 

வக்கீல்: திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கும் காவல் நிலையத்திற்கும் எவ்வளவு தூரம்?

 

கலைசெல்வன்: சரியாக தெரியாது. ஆனால் நாங்கள் அங்கிருந்து மினி பஸ்சில் சென்றோம்.

 

வக்கீல்: மினி பஸ்சில் எவ்வளவு தூரம் சென்றீர்கள் என்று தெரியுமா?

 

கலைசெல்வன்: தெரியாது

 

வக்கீல்: அப்போது டிக்கெட் எடுத்தீர்களா? எந்த இடத்திற்கு டிக்கெட் எடுத்தீர்கள்?

 

கலைசெல்வன்: டிக்கெட் எடுத்தோம். திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையம் செல்ல வேண்டும் என்று கேட்டு டிக்கெட் எடுத்தோம்.

 

வக்கீல்: 21.6.2015ம் தேதியே கோகுல்ராஜ் காணாமல் போய்விட்டார். அது மறைக்கப்பட்டு இருப்பதாக நான் கூறுகிறேன். (அப்போது அதை மறுக்கும் விதமாக கலைசெல்வன் ஏதோ சொல்ல முயன்றார். அதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். பிறகு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர், 21.6.2015ம் தேதி நடந்த சம்பவத்தை மறைத்துதான் போலீசில் புகார் கொடுத்துள்ளீர்கள் என்று நான் கூறுகிறேன் என்றார்).

 

கலைசெல்வன்: அதாவதுங்க அய்யா…. (இப்படி அவர் ஆரம்பிக்கும்போதே நீதிபதி குறுக்கிட்டு கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்கள் என்றார்)

 

வக்கீல்: 23.6.2015ம் தேதி, தம்பி காணாமல் போனது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை.

 

வக்கீல்: 24.6.2015ம் தேதி காலையிலேயே திருச்செங்கோடு காவல் நிலையம் சென்றீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை. மதியம்தான் போனோம்

 

வக்கீல்: காணாமல்போன அன்று கோகுல்ராஜ் என்ன நிற உடை அணிந்திருந்தார்? என்னென்ன கொண்டு சென்றார் என்ற விவரங்களை போலீஸ் நிலையத்தில் சொன்னீர்களா?

 

கலைசெல்வன்: கோகுல்ராஜ் காணவில்லை என்று புகார் கொடுக்கவில்லை. அவரை கடத்திச் சென்றதாகத்தான் கூறியிருந்தோம். அதனால் உடைகள் பற்றிய விவரங்களைக் கூறவில்லை.

 

வக்கீல்: கோகுல்ராஜ் கல்லூரிக்குச் செல்லும்போது ஐடி கார்டு (அடையாள அட்டை) எப்படி எடுத்துச் செல்வார்? கழுத்தில் மாட்டியிருப்பாரா? பாக்கெட்டில் வைத்திருப்பாரா?

 

கலைசெல்வன்: சில நேரங்களில் ஐடி கார்டை சட்டைப் பாக்கெட் அல்லது பேண்ட் பாக்கெட்டிலும் வைத்திருப்பார். கழுத்திலும் அணிந்திருப்பார். புத்தக பைக்குள்ளும்கூட வைத்திருப்பார். குறிப்பிட்டு சொல்ல முடியாது.

 

வக்கீல்: வீட்டில் இருக்கும்போது ஐடி கார்டை எங்கே வைத்திருப்பார்?

 

கலைசெல்வன்: டேபிளில் இருக்கலாம்…

 

வக்கீல்: ரயில் தண்டவாளத்தில் இருந்து கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அங்கிருந்து கோகுல்ராஜின் ஐடி கார்டு எடுக்கப்பட்டதாகச் சொல்வது பொய். அந்த ஐடி கார்டு உங்கள் வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று நான் சொல்கிறேன்.

 

(அப்போது கலைசெல்வன் மறுத்துச் சொல்ல முயன்றார். அதை நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை)

 

வக்கீல்: திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்போது பார்த்திபன் இருந்தாரா?

 

கலைசெல்வன்: இருந்தார்

 

வக்கீல்: அவரை நீங்கள்தான் அழைத்தீர்களா?

 

கலைசெல்வன்: இல்லை.

 

வக்கீல்: பார்த்திபனை அதன்பிறகு சந்தித்தீர்களா? எங்கே சந்தித்தீர்கள்?

 

கலைசெல்வன்: ம்…. சந்தித்திருக்கலாம்…. எங்கேனு சரியாக தெரியவில்லை

 

வக்கீல்: பிரேத பரிசோதனை செய்த பிறகு சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினீர்களா?

 

கலைசெல்வன்: யுவராஜ் உள்ளிட்ட சிலர் கடத்திச்சென்றது தெரிய வந்ததால், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினோம்.

 

 

சுவாதிக்கு நிர்ப்பந்தம்:

 

வக்கீல்: 23.6.2015ம் தேதியன்று, சுவாதியிடம் சென்று அவரை நிர்ப்பந்தப்படுத்தி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக்கி இருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். 22.6.2015ம் தேதி, நீங்களும் உங்கள் தரப்பினரும் சேர்ந்து சுவாதியை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அப்படி அழைத்துச் செல்லப்பட்டபோது திருமாவளவன் கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், தமிழ்ப்புலிகள் கட்சியினர் எல்லோரும் சேர்ந்து சுவாதியை நிர்ப்பந்தப்படுத்தி, போலீசாரிடம் பேச வைத்திருக்கிறீர்கள்.

 

மேலும், கோகுல்ராஜிக்கு பணத் தேவை இருந்திருக்கிறது. அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் பெற்று வந்துள்ளார். அந்தப்பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார் என்றும் நான் சொல்கிறேன்.

 

இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது.

 

மற்றொரு வக்கீல்:

இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அருண், குமார் என்கிற சிவக்குமார் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.ஆர்.பாலசுப்ரமணியம், கலைசெல்வனிடம் சில கேள்விகளைக் கேட்க எழுந்தார்.

 

அப்போது நீதிபதி, கேள்விகள் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், ”சிபிசிஐடி போலீசார் ஒலி வடிவிலான சில தகவல்களை வரி வடிவமாக்கி, அதை படித்துக் காட்டினார்களா?,” என்று கேட்டார். அதற்கு கலைசெல்வன், இல்லை என்று பதில் அளித்தார்.

 

மாலை 3.45 மணியளவில் கலைசெல்வனிடம் குறுக்கு விசாரணை முடிந்தது.

 

எதிர்தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவின் சில தடாலடியான கேள்விகளால் கலைசெல்வன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். அதிர்ச்சிகரமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அடிக்கடி செருமிக்கொண்டே இருந்தார். பதற்றத்தில் எச்சில் விழுங்கினார்.

 

திருச்செங்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கோகுல்ராஜை அடையாளம் தெரியாத நான்கு பேர் கடத்திச்சென்றதாகத்தான் அவருடைய தாயார் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், குறுக்கு விசாரணையின்போது, யுவராஜ் உள்ளிட்ட சிலர் கோகுல்ராஜை கடத்தியதாக புகாரில் கூறியிருந்தோம் என்று முரணாக சாட்சியம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வழக்கு ஒத்திவைப்பு:

இதையடுத்து சாட்சிகள் விசாரணை செப்டம்பர் 10, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம் முக்கிய சாட்சியான சுவாதி ஆஜர்படுத்தப்படுவார் எனத்தெரிகிறது.

 

மவுனகுரு!

 

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட பல கேள்விகளுக்கு கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன் பல இடங்களில் விளக்கம் அளிக்க எத்தனித்தார். அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கும்படி நீதிபதியிடம் முறையிடவோ, அல்லது எதிர்தரப்பு வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோகூட அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி முற்படவில்லை. இன்று நடந்த குறுக்கு விசாரணையின்போது ஆரம்பம் முதல் அவர் ஏனோ மவுனமாக இருந்தார்.

 

இந்த செய்தியின் முந்தைய பதிவுகளை படிக்க கீழே உள்ளதை சொடுக்கவும்…

 

#Day1 

#Day2

#Day3

 

– பேனாக்காரன்.