Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அதிரடியாக குண்டை தூக்கிப் போட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இது அபாயகரமான நடவடிக்கை என்று அப்போதே எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தனர்.

அகலமான மார்பை விரித்துப் பேசும் நரேந்திர மோடி இதையெல்லாம் கேட்பாரா?. நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத கும்பலுக்கு கள்ளத்தனமாக பணம் போய்ச்சேர்வதைத் தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களை செல்லாததாக்குகிறோம் என்றார்.

சில நாள்கள் கழித்து, கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முழங்கினார். எப்படியோ ஊழல் ஒழிந்தால் சரிதான் என்று இந்திய மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டனர். ஆனால், வங்கிகளிலும், ஏடிஎம் வாசலிலும் புதிய ரூபாய் தாள்களை எடுப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாயினர்.

சமீபபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பண மதிப்பு நீக்கத்தால் செல்லாததாக்கப்பட்ட பணத்தாள்களில் 99 சதவீதத்திற்கும் மேல் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டதாக தெரிவித்து இருந்தது. அதாவது, கருப்பு பணம் என்பது அரசின் கணக்கிற்கு வராமல் பணமாகவே பதுக்கப்பட்டிருக்கும் என்று படுமுட்டாள்தனமாக கருதி வந்திருப்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கை அப்பட்டமாக காட்டியது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். சென்னை லயோலா பிஸினஸ் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அவர் இப்படி சொல்லி இருக்கிறார். அவர் பேசிய விவரம்:

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுத்தி இருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கலாம். பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதிலும், பலருக்கு இந்த நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எதிர்கால பயன்களும் நிலையில்லா தன்மையிலேயே இருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கணக்கில் வராத பணத்தை கணக்கில் வருவதற்கும் அதை வங்கியில் டெபாசிட் செய்யப்படுவதற்கும் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது கணக்கில் வராத பணத்தை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே கொண்டு வரப்பட்டது. ஆனால் கணக்கில் வராத தங்கம், வைரம் அல்லது நிலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை பயன்படவில்லை. எதிர்காலத்தில் கருப்புப் பணமோ அல்லது கணக்கில் வராத பணமோ சேர்வதை தடுக்கவும் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை வழி ஏற்படுத்தவில்லை.

ஆனால், அதிகாரிகள் இந்த திட்டத்தை சிறப்பாக தயாரித்து செயல்படுத்தி இருந்தால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம். இதனால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு விஷயத்தில் நேர்மறை விளைவை அளித்துள்ளது. பணத்தை அதிகமாக பயன்படுத்தாமல் மக்கள் டிஜிட்டல் பேமென்ட் முறையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக இருந்தால் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறையும். ஏழை எளிய மக்கள் மேம்பாட்டுக்கு தனியான முறையில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு கட்டமாக முயற்சிகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது. ஒன்று நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இரண்டாவது ஏழைகளின் பிரச்னைகளை நேரடியாக கண்டறிந்து அதை நீக்குவதற்கான முயற்சிகளை எடுப்பது என இரண்டு கட்டமாக நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கிராமப்புறத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், அவர்கள் வளர்ச்சி அடைய வேண்டும். மக்களுக்கு சுகாதாரமும் கல்வியும் சரியாக கிடைக்கவில்லையெனில், நாடு வளர்ச்சி பெறாது. நாடு வளர்ச்சி வேண்டுமென்றால் கல்வியை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு முன் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது அந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 6.1 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி சரிந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 5.7 சதவீதம் என்ற மோசமான நிலைக்கு சரிந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி இது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.