பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,
வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக
பணியாற்றி வந்தவர் பிரேம்குமார்.
பல்கலை ஆசிரியர் சங்க
பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
துடிப்பான இளைஞரான இவர்,
மாணவர்களுக்கும் நூலகத்திற்கும்
இடையே அறுபட்டு இருந்த
தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார்.
மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப்
பயன்படுத்துவதை நடைமுறைப்
படுத்தியதோடு, போட்டித்
தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார்.
மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம்
கூட செலுத்தி இருக்கிறார்.
பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள்,
முறைகேடுகள் குறித்து அவ்வப்போது
வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர்,
பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக
முக்கியஸ்தர்கள் கொஞ்சமும்
ரசிக்கவில்லை.
இந்த நிலையில்தான்,
பேராசிரியர் ஒருவருக்கு பல்கலை
சாசன விதிகளை மீறி, மீள் பணி
வாய்ப்பு வழங்க, மேலிடம் முடிவு செய்தது.
அதுகுறித்த பொருள் நிரலை,
சிண்டிகேட் கையேட்டில் சேர்த்து இருந்தது.
இதை எப்படியோ மோப்பம்
பிடித்து விட்ட பிரேம்குமார்,
சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்கு முன்பே,
பல்கலை சாசன விதிகளுக்கு முரணாக
ஒருவருக்கு மீள்பணி வாய்ப்பு
வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை
செயலருக்கு புகார் ஒன்றைத் தட்டிவிட்டார்.
ஏதோ அவர் ராணுவ ரகசியத்தை
வெளியிட்டு விட்டதுபோல
கருதிய பல்கலை நிர்வாகம்,
அவரிடம் அவசர அவசரமாக
பெயரளவுக்கு விளக்கம் கேட்டு
‘மெமோ’ அனுப்பியது.
அவர் என்ன பதில் சொன்னாலும்
பணியிடைநீக்கம் செய்தே ஆக வேண்டும்
என்ற முன்முடிவில் இருந்த பல்கலை நிர்வாகம்,
‘பதிலில் திருப்தி இல்லை’ என்று
மொக்கையான காரணத்தைக்கூறி,
கடந்த 5.3.2022ஆம் தேதி
பணியிடை நீக்கம் செய்தது.
இந்த பஞ்சாயத்து இத்துடன்
ஓய்ந்துவிடவில்லை.
பிரேம்குமாரிடம் படித்து வரும்
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு
அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக,
பல்கலையின் அப்போதைய
பதிவாளர் (பொ) தங்கவேல்
சேலம் சூரமங்கலம் மகளிர்
காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
நியாயமாகச் சொல்லப்போனால், பிரேம்குமார் மீதான பாலியல் புகாரை பதிவாளர் தங்கவேல், பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணைக் குழுவிடம்தான் (ஐசிசி) அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் மீதான வன்மம் காரணமாக காவல்துறையில் புகாரளித்து இருந்தார்.
இந்த புகாரின்பேரில் உதவி பேராசிரியர் பிரேம்குமார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, பாலியல் புகாரில் உண்மை இல்லை எனக்கூறி, அவருக்கு ஆதரவாக மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதையறிந்த உள்ளக புகார் குழு தலைவரான பேராசிரியர் பூங்கொடி விஜயகுமார், ஆட்சியரிடம் புகாரளித்த மாணவ, மாணவிகளை கடிந்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது.
உள்ளக புகார் குழு, தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்ததன் அடிப்படையில், கடந்த 18.5.2023ஆம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், பிரேம்குமாரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலிடத்தின் மனம் நோகக் கூடாது என்பதற்காக நீட்டிய தீர்மான புத்தகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டனர்.
இதன் பிறகுதான் அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகள் அரங்கேறின.
அதாவது, 18.5.2023ஆம் தேதியே சிண்டிகேட் கூட்டத்தின் வாயிலாக பிரேம்குமாரை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ஆறஅமர 5.6.2023ஆம் தேதி, உள்ளக புகார் குழுவின் பரிந்துரைகள் மீது விளக்கம் கேட்டு, காரணம் காண்பிக்கக் கோரும் கடிதத்தை ‘போலி ரசீது புகழ்’ மற்றும் ‘நிரந்தர’ பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேல் அனுப்பி வைத்தார். ஒருவரிடம் வன்மமும், சினமும் தலைதூக்கும்போது அவர்களின் இயல்பான அறிவும் மங்கி விடுகிறது. அப்படியான, மதிகெட்ட நிலையில்தான் பல்கலை நிர்வாகத்தின் செயல்கள் இருந்தன.
இதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் முற்றிலும் புனையப்பட்டது என்பதற்கான ஆதாரத்துடன், உதவி பேராசிரியர் பிரேம்குமார், பல்கலை நிர்வாகத்திடம் அப்பீல் செய்தார். இந்த டிவிஸ்டை சற்றும் எதிர்பாராத துணைவேந்தர் ஜெகநாதன், அவரை டிஸ்மிஸ் செய்த முடிவை திரும்பப் பெற முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 27.6.2023ஆம் தேதி, பல்கலை ஆட்சிக்குழு சுற்றுத் தீர்மானம் மூலம் அவர் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
பல்கலை சிண்டிகேட் குழுவில் உள்ள பதவிவழி உறுப்பினர்கள், அரசுப் பிரதிநிதிகள், ‘பாசம்’ கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கடந்த 6.11.2023ஆம் தேதி நடந்த, 114ஆவது சிண்டிகேட் கூட்டத்தில் பிரேம்குமார் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர் மீதான டிஸ்மிஸ் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் வைத்தியநாதனிடம் பேசினோம்.
”சிண்டிகேட் குழுவில் பெரும்பான்மை
உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரேம்குமார்
மீதான டிஸ்மிஸ் தீர்மானம்
நிராகரிக்கப்பட்டு விட்டது.
ஆனால் துணைவேந்தர் ஜெகநாதன்,
இந்த விவரத்தை மறைத்துவிட்டு,
பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு
பரிந்துரை செய்துள்ளார்.
இது முற்றிலும் உள்நோக்கம்
கொண்டதோடு, பழிவாங்கும்
நடவடிக்கை ஆகும்.
பிரேம்குமாரின் அப்பீல் மனு மீது
எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
கிடப்பில் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில்,
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட
பொருள்நிரலை மீண்டும்
22.11.2024ஆம் தேதி நடைபெறும்
116ஆவது சிண்டிகேட் கூட்டத்திலும்
சேர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டது.
துணைவேந்தரின் பாரபட்சமான
நடவடிக்கைகளுக்கு சிண்டிகேட்
உறுப்பினர்கள் துணை போகக்கூடாது.
உதவி பேராசிரியர் பிரேம்குமார்
மீதான சட்டத்திற்குப் புறம்பான
அனைத்து நடவடிக்கைகளையும்
கைவிட்டு, அவர் மீண்டும் பணியாற்றிட
வழிவகை செய்ய வேண்டும்,” என்றார்.
ஏன், எதற்கு? எப்படி? என கேள்வி கேட்கச் சொன்ன பெரியார் பெயரிலான பல்கலையில் கேள்வி கேட்பது ஒரு குற்றமா துணைவேந்தரே? நீங்கள் யூதாஸ்களை கொண்டாடிவிட்டு, நீதிமான்களை சிலுவையில் அறைவதன் மூலம் உங்களின் நீண்ட கல்வித்துறை வாழ்வில் தீராப்பழியைச் சுமந்து கொள்ளக் கூடாது.
– பேனாக்காரன்