Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

”கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!” ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது.

எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது.

ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண விழா ஏற்பாடுகள்.

நகைகள், உடைகள், மேடை அலங்காரம், மளிகை, உணவு உபசரிப்பு, மங்கள வாத்தியம், இசைக் கச்சேரி, புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு, எல்இடி திரை, ஒலி பெருக்கி அமைப்பு, வாழை மரங்கள், வெளி அலங்கார விளக்குகள், புகைப்பட அரங்குகள், மருதாணி இடுதல் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியதாகிறது. இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே மணப்பெண், மணமகனை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம், ஒளிப்பதிவு செய்யும் ‘ப்ரீ-வெட்டிங் ஷூட்’ கலாச்சாரமும் அதிகரித்துள்ளது.

இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து விட்டாலோ அதன் சிறப்பு குறைந்து விடுகிறது. கல்யாணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்குச் செல்வது, அவர்கள் தங்கும் இடத்தை திட்டமிடுவது வரை கல்யாண வைபவத்தில் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டியதாகிறது.

கல்யாண வைபவத்தை அவரவர் பாக்கெட்டின் கனத்திற்கு ஏற்ப எந்த பட்ஜெட்டிலும் வெற்றிகரமாக நடத்தலாம். இந்நிலையில், டெல்லியில் சேவைத்துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் வர்த்தகர்கள், நிதி ஆலோசகர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்தான், நம்மை ‘அடேங்கப்பா…!’ என வாயைப் பிளக்க வைத்துள்ளது.

”ஓர் ஆண்டில், குடும்பம் சகிதமாக கலந்து கொள்ளும் திருமண வைபவங்கள் மட்டும் 30 சதவீதம் நாள்களை ஆக்கிரமித்து இருக்கிறது. நடப்பு 2024 – 2025ஆம் ஆண்டில் மட்டும் கல்யாணச் சந்தையில் (வெட்டிங் இண்டஸ்ட்ரி) புழங்கும் தொகை 6 லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம்,” என்கிறது அவர்களின் ஆய்வு முடிவு.

விளிம்பு நிலை மக்கள் முதல் பெரும் பணக்காரர் வரை, வாழ்நாளில் ஒருமுறை மட்டும் நிகழும் இத்தகைய கல்யாண வைபவத்திற்காக பெரும் தொகையை தயக்கமின்றி செலவிடுகிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை,
டெல்லி, புனே, பெங்களூரு உள்ளிட்ட
பெரு நகரங்களில் உள்ள
மாநகராட்சிகளின் கடந்த ஆண்டின்
நிதி நிலை அறிக்கையை
கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது.
இந்த மாநகராட்சிகளின்
மொத்த ஓராண்டு பட்ஜெட்டை விட,
கல்யாணச் சந்தையில் புழங்கும்
தொகை மூன்றரை மடங்கு அதிகம்.

இந்தியக் குடும்பங்களின் மொத்த
வங்கியிருப்புத் தொகையில்
இது 5 சதவீதம் என்கிறார்கள்.
பெரும் பணம் புரளும் இந்தத் துறை
மீதுதான் இப்போது கார்ப்பரேட்
நிறுவனங்களின் கண்கள்
பதியத் தொடங்கியுள்ளன.

அண்மையில், இந்திய ஹோட்டல் வர்த்தகர்களுடன் ஒரு சந்திப்பிற்கு, தாஜ் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. ஹோட்டல்களுக்குக் கிடைக்கும் வருவாயில், திருமணச் சந்தையின் வாயிலாகக் கிடைத்தவைதான் கணிசமானது என்று பேசியிருக்கிறார்கள். அதாவது திருமண விழாவில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வரும் உற்றார், உறவினர்கள் தங்குவது மூலமும், தேனிலவுக்கு வரும் தம்பதிகள் தங்குவதன் மூலமும் இந்த வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது. அதனால்தான் கார்ப்பரேட்டுகளின் கவனம் எல்லாம் திருமணச் சந்தையை குறி வைத்து நகரத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக
35 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன
என்பது மற்றொரு சுவாரஸ்யமான
புள்ளி விவரம். செலவின அடிப்படையில்
3 லட்சம் ரூபாய் முதல்
ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு
மேலும் செலவிடப்படும் திருமண
விழாக்களை ஐந்து பிரிவுகளாக
பிரித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள்.

அண்மையில் முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்ற ஆடம்பரத் திருமண விழாக்கள் அரிதினும் அரிதானவை.

அதேநேரம், பெரும்பான்மைத்
திருமணங்களின் சராசரி பட்ஜெட்
10 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
இத்தகைய திருமணங்கள்தான்
இரண்டாவது பிரிவில் வைத்துள்ளனர்
சந்தை ஆய்வாளர்கள்.
சுமார் 50 ஆயிரம் திருமண
விழாக்களின் பட்ஜெட்
ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு
மேலும் இருக்கும் என்கிறார்கள்.
ஆண்டுதோறும் திருமணச் சந்தையின்
செலவினங்கள் 25 சதவீதம் வரை
அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும்
சொல்கிறார்கள்.

தாறுமாறாக எகிறும் திருமணச் செலவுகளை, சரியான நிதி திட்டமிடல் மூலம் ஓரளவு சமாளிக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்வதாக இருந்தால், அதற்கு ஒரு மூன்றாண்டு செயல் திட்டம் தேவை. அதாவது, மூன்றாண்டுக்கு முன்பே திருமண பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். அப்போதுதான், கல்யாணம் என்ற பெருவிழாவை பிரம்மாண்டமாக, அதேநேரம் சேதாரமின்றியும் கொண்டாட முடியும்.

உங்களுடைய சேமிப்பு மற்றும் செலவிடும் திறன் அடிப்படையில் திருமணச் செலவுகளுக்கென பொருத்தமான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்ய முடியும். யார் யாருக்கு, எது எதற்கு, என்ன செலவு ஆகும்? என்பதை எல்லாம் கணக்குப் போட்டுச் சொல்ல நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

பற்றாக்குறையைச் சமாளிக்க, வேண்டுமானால் சிறிதளவு கடன் வாங்கலாமே தவிர, கடன் வாங்கி ஓர் ஆடம்பர திருமணத்தை நடத்துவது என்பது முற்றிலும் தவறான யோசனை என்றும் எச்சரிக்கிறார்கள்.

மற்ற சேவைத் துறைகளைக் காட்டிலும், கல்யாணச் சந்தைதான் வேகமாக வளரக்கூடிய துறையாக இருக்கிறது. வங்கிகளில் டெபாசிட் செய்வது ஆண்டுதோறும் 12-13 சதவீதம் வரைதான் வளர்ச்சி கண்டுள்ளது. இதைவிட, கல்யாணச் சந்தையின் வளர்ச்சி, இரட்டிப்பு மடங்கில் உயர்ந்து வருகிறது.

கல்யாண விழா அரங்கம் பிடிப்பது முதல் உணவு உபசரிப்பு வரை அனைத்தையும் ஒருங்கிணைக்க இப்போது அவுட்சோர்சிங் ஆள்கள் இருக்கிறார்கள்.

எந்தக் கடையில் நகைகள், ஜவுளிகள் வாங்குவது?, எந்த தையல்காரரிடம் துணிகளைத் தைக்கக் கொடுப்பது? என்பது வரை அத்தனையும் அவர்களுக்கு அத்துபடி.

மணமகள், மணமகன்களைத் தேடிக்கொடுப்பதில் இப்போது மேட்ரிமோனியல் இணையதளங்கள் கணிசமான பங்காற்றுகின்றன. இவை பதிவு செய்யப்பட்ட அமைப்பின் கீழ் வந்துவிட்டன. சில மேட்ரிமோனியல் நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டு உள்ளன.

எனினும், ஒரு திருமணத்திற்குத் தேவையான மற்ற ஒருங்கிணைப்புப் பணிகளை அமைப்புசாரா சிறு, குறு நிறுவனங்கள் / ஆள்கள் மூலமே செய்கின்றனர். சொல்லப்போனால் கார்ப்பரேட்டுகளால் ஓரளவுக்கு மேல் இத்துறைக்குள் நுழைய முடியவில்லை. அதாவது, ஒரு திருமண விழாவிற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் ‘எண்டு டூ எண்டு’ முடித்துக் கொடுக்க வெகு சில நிறுவனங்களே இருக்கின்றன.

கல்யாணச் சந்தையில் சேவைகள் வழங்கும் நிறுவனமாக பதிவு செய்யப்படும்போது, ஜிஎஸ்டி வரி கணிசமாக வசூலிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்த வரிச்சுமை, கடைசியில் திருமண வீட்டார் தலையில்தான் விழுகிறது. இது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது.

கல்யாணத்திற்கென மியூச்சுவல் நிதி திட்டங்களில் குறுகிய காலத்திற்கு முதலீடாக சேமிக்கலாம். இதன்மூலம் உரிய நேரத்தில் கணிசமான நிதி ஆதாயம் கிடைப்பதோடு, கடன் சுமையையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

  • பேனாக்காரன்

Leave a Reply