பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் ‘ஷா’ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

சில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்து சொல்லப்போகும் தகவல்தான் ஆச்சர்யமே.
ஆம்.
கடந்த 2015-16ம் நிதியாண்டில் ஜெய் ஷாவின் நிறுவனம் 80.50 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டில் வெறும் 50 ஆயிரம் ரூபாயாக இருந்த வணிகம், ஒரே ஆண்டில் 80.50 கோடி ரூபாய்க்கு எகிறி இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், முந்தைய ஆண்டை விட 16 ஆயிரம் மடங்கு வணிகம் உயர்ந்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக அமர்கிறார். அதன்பிறகு, ஜெய் ஷாவின் கம்பெனி 16 ஆயிரம் மடங்கிற்கு வருவாய் ஈட்டியிருக்கிறது. இவை இரண்டுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.
‘தனி ஒருவன்’ படத்தின் கதாநாயகன் ஒரு காட்சியில் இப்படி சொல்வார்: ”பத்திரிகையில் மூன்றாம் பக்கத்தில் வரும் செய்திக்கும் 7ம் பக்கத்தில் வரும் செய்திக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும்,”. நரேந்திர மோடி பிரதமர் ஆனதையும், ஜெய் ஷா கம்பெனியின் வளர்ச்சியையும் நீங்கள் ஒரு ‘கயாஸ்’ கருத்தியலோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
ஆனால், இப்படி எல்லாம் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை என்கிறார் ஜெய் ஷா. தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ராஜேஷ் கண்ட்வாலா என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனம், ராஜ்ய சபா எம்பியான பரிமல் நத்வானி நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து ரூ.15.78 கோடி கடன் பெற்றதாக கூறியுள்ளார்.

இவர்களில் பரிமல் நத்வானி யாரென்றும் சொல்லி விடுகிறோம். அவர் ராஜ்ய சபா எம்பி மட்டுமல்ல, முகேஷ் அம்பானி நடத்தும் ஒரு சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.
இப்படித்தான், காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் எஸ்டேட் நிறுவனம் பல கோடிகளை வருவாய் ஈட்டியதாக கணக்கு காட்டியது. அவரும் அப்போது தன் நிறுவன வளர்ச்சிக்காக பல இடங்களில் பல கோடி கடன் பெற்று, வணிகம் செய்ததாகக் கூறியிருந்தார்.
இப்போது ராபர்ட் வதேராவின் உபாயத்தைதான் ஜெய் ஷாவும் பின்பற்றியிருக்கிறார்.

”அசையா சொத்துகள் இல்லை. முதலீட்டாளர்கள் கையிலும் சரக்குகள் இல்லை. இப்படி எதுவுமே இல்லாத ஒரு நிறுவனம் எப்படி ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு வருவாய் ஈட்ட முடியும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்,” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் இன்று (அக்டோபர் 8) கர்ஜித்துள்ளார்.
இதெல்லாம் ஊழலா? என்று பிரதமர் மோடி வழக்கம்போல் கண்டும்காணாமல் இருக்கலாம். அல்லது, அவருடைய கைகள் நேரடியாக கறை படியவில்லை என்ற எண்ணத்தில், வழக்கம்போல் ஊழலுக்கு எதிரான போர் பற்றியும் முழங்கலாம். இணைப்பு.
– பேனாக்காரன்.