Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி, இன்றைய தினம் (அக்டோபர் 9) தொல்லியல் துறை அதிகாரிகள் கீழடியில் தோண்டிய குழிகளில் மண்ணை நிரப்பிவிட்டு, சென்னைக்குக் கிளம்பிவிட்டனர்.

இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனக்குரல்கள். கீழடி அகழாய்வுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறீர்களா?. அதை, தமிழ்கூறு நல்லுலகம் தெரிந்து கொள்வது அவசியம்.

கீழடியில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகளில் இருந்து கிட்டத்தட்ட 5300 பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பானைகள், சுடுமண் சிற்பங்கள் அவற்றுள் அடங்கும். அவை மட்டுமல்ல.

தமிழ்நாட்டில் இருந்து ரோம் நகருக்கு வர்த்தக போக்குவரத்து இருந்ததற்கு ஆதாரமாக சில ரோமானிய நாணயங்கள், வட இந்திய பிராகிருத எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய நாணயங்களும் கிடைத்துள்ளன.

மிகப்பழமையான நாகரீகமென கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்கூட, மண்பாண்டங்களை வெளிப்புறமாகச் சுட்டு பயன்படுத்தியதற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. ஆனால், கீழடியில் கிடைத்த மண்டபாண்டங்கள் உள்புறமாகவும் சுடப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. நெசவுத்தொழில் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கால்வாய், மழைநீர் சேகரிப்பு, உறைகிணறு, வட்டக்கிணறுகள் மற்றும் திட்டமிட்ட நகர ஊரமைப்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில், நவீன தொழில்பட்டறைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் பவள மணிகளும் கிடைத்திருக்கின்றன.

அகழாய்வின்போது கிடைக்கும் பழங்கால பொருட்களின் காலத்தைக் கணக்கிட கார்பன்-14 என்ற தொழில்நுட்ப முறையில் பகுப்பாய்வு செய்யப்படும். அப்படி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பகுப்பாய்வு செய்தபோது, அவை 2200 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்துள்ளது.

அப்போதே தமிழர்கள் எழுத்தறிவு, தொழில்நுட்ப அறிவுடன் இருந்ததற்கான சான்றுகள் எக்கச்சக்கமாக கிடைத்துள்ளன. திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்று கணக்கிடப்பட்டு உள்ள நிலையில், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் வள்ளுவருக்கு முந்தைய சில நூற்றாண்டுகள் பழமையானது.

கீழடியில் 110 ஏக்கர் நிலம் ஆய்வுக்காக வளைத்துப் போடப்பட்டிருந்தாலும், இதுவரை வெறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில்தான் அகழாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதுவே, தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இன்னும் ஒட்டுமொத்த நிலப்பரப்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் வரலாறேகூட மாற்றி எழுதும் கட்டாயம் ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதுவரை கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷங்களில், எந்த இடத்திலும் மத ரீதியிலான குறியீடுகள் காணப்பெறவில்லை என்பது ஆச்சர்யத்திற்குரிய ஒன்று. மொழி ஆய்வாளர் கால்டுவெல் சொல்லிச் சென்றதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். ”தமிழ் மொழி, ஒரு சமயச்சார்பற்ற மொழி,” என்றார் கால்டுவெல். அவருடைய கருத்தியல் கோட்பாடு கீழடி அகழாய்வில் நிரூபணமாகி விட்டதாகக்கூட கருதலாம்.

எனில், சங்க காலத்திற்கு முந்தைய தமிழ்ச்சமூகம்கூட மேம்பட்ட நாகரீகத்தைக் கடைப்பிடித்து வந்திருப்பதையே கீழடி ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களிடையே மத ரீதியிலான பாகுபாடுகள் இல்லை. ஏற்கனவே தமிழ் இனம், தேசிய இனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்ற கருத்தியலையும் இந்த ஆய்வு முடிவுகள் நெருங்கி வருகின்றன.

தமிழ் இனம் என்பது மிகப்பழமையான இனம்; மேம்பட்ட சமூகம் என்பது வரலாற்று ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படும்போது வேத சாஸ்திரங்களால் ஆன இந்தியா என்று இதுவரை மு-ழங்கி வந்தவர்களுக்கு வேலையற்றுப் போய்விடும் அபாயம் இரு க்கிறது. அதனால்கூட கீழடி அகழாய்வை முடக்க நினைக்கலாம் என்ற சந்தேகளும் வலுத்து வருவதை நாம் புறம்தள்ளி விட முடியாது.

குஜராத் மாநிலம் தொலராவில் 13 ஆண்டுகளும், லோத்தலில் 5 ஆண்டுகளும், ஆந்திர பிரதேச மாநிலம் நாகார்ஜூன கொண்டாவில் 10 ஆண்டுகளும் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மைய அரசு, கீழடியில் மட்டும் இரண்டே ஆண்டுகளில் மூட்டை முடிச்சுகளை கட்டுவது ஏன்?

இதுபோன்ற சந்தேகங்கள் இன்று மீண்டும் வலுத்ததால், அவசர அவசரமாக ஊடகங்களைச் சந்தித்த தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ‘மாஃபாய்’ க.பாண்டியராஜன், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தொல்லியல் துறை ஆய்வுகள் என்பது மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தமிழக அரசு எப்படி இந்த ஆய்வை மேற்கொள்ளும் என்று தெரியவில்லை.

மீண்டும் சொல்கிறோம்.

கீழடி, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதப்போகும் ரகசியங்கள் பொதிந்துள்ள வரலாற்றுப் பெட்டகம்.

– பேனாக்காரன்.