ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடந்து முடிந்த முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றி இருந்தது. நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நேற்று (அக். 1) நடந்தது. ஆஸ்திரேலியா அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு, பால்க்னர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ் யாதவ், சாகல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, பும்ரா, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று, தனது அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வரும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோரின் தொடக்கம், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக இருந்தது. அபாரமாக ஆடிய ஆரோன் பின்ச் 32 ரன்களில் பாண்ட்யா பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அக்சர் படேல் சுழலில், டேவிட் வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாதவ் சுழலில் கேப்டன் ஸ்மித் 16 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஆஸி. அணியில் எந்த ஒரு விக்கெட்டும் நீடித்து நிலைக்கவில்லை. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (13), டிராவிஸ் ஹெட் (42), ஸ்டாய்னிஸ் (46), மேத்யூ வேட் (20), பால்க்னர் (12), கூல்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து, 243 ரன்கள் இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. நல்ல ஃபார்மில் இருந்து வரும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ரஹானே ஆகியோர் ஆஸி பந்து வீச்சை விளாசித்தள்ளினர். இந்திய அணியின் ஸ்கோர் 124 ரன்களாக இருந்தபோது ரஹானே 61 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கோஹ்லி களமிறங்கினார்.
அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா சதம் அடித்தார். இந்திய அணி 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 125 ரன்களில் ஆட்டமிழந்தார். இது, அவருடைய 14வது சேதமாகும். 109 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அதையடுத்து கோஹ்லியும் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பிறகு மனீஷ்பாண்டே, கேதர் ஜாதவ் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 42.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஜாதவ் 5 ரன்களுடனும், மனீஷ்பாண்டே 11 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ரோஹித் ஷர்மா, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, இந்தியா 4 – 1 கணக்கில் கைப்பற்றி, கோப்பையை வென்றது. இந்தியா, ஆஸி. அணிகள் மோது முதலாவது டி-20 போட்டி வரும் 7ம் தேதி நடக்கிறது.
மீண்டும் முதலிடம்:
ஆஸி. அணியுடன் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றபோது, இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனால், நான்காவது போட்டியில் இந்தியா தோற்றதால், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது கடைசி போட்டியில் வென்று ஆஸியை 4 – 1 கணக்கில் வீழ்த்தியதை அடுத்து, தர வரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்க முன்னேறியது. இப்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் உலகளவில் இந்திய அணிதான் முதலிடம் வகிக்கிறது.
அசத்திய பாண்ட்யா:
இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா, 200 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆல் ரவுண்டராக ஜொலித்தார். அதனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு, தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் அவர் ஏற்கனவே இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இந்த தொடரில், சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரஹானே தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் அரை சதம் விளாசி இருந்தார். அவர்களும் சிற்பபான பங்களிப்பை செய்திருந்தனர்.
ரோஹித் சாதனை:
ஒருநாள் போட்டிகளில் 14 சதம் நடித்துள்ள ரோஹித் ஷர்மா, 6000 ரங்களையும் குவித்துள்ளார். 6000 ரன்களைக் கடக்கும் 9 வது இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.