Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அச்சா தின்:

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘நான் பிரதமரானால் இந்தியாவுக்கு ‘அச்சா தின்’ (நல்ல நாள்) பிறந்து விடும்’ என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு?

பேசாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை, பாஜக கேலி செய்தாலும், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன்தான் வைத்திருந்தார். ஆனால், பணமதிப்பிழப்பு குறித்து இதுவரை மக்களவையில் நேரடியாக பேசாதவர் மோடி.

மேக் இன் இந்தியா, வல்லரசு என்று நாடு நாடாக ஓயாமல் உலகம் சுற்றும் நாயகனாக இருக்கிறாரே மோடி. உண்மையிலேயே நாடு வளர்ச்சி பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று சிலர் நம்பிக்கொண்டிருந்த வேளையில், பாஜகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

”இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அருண்ஜேட்லியும், மோடியும்தான் காரணம்,” என்று, கடந்த சில நாள்களுக்கு முன் யஷ்வந்த் சின்ஹா தடாலடியாக மனக்குமுறலை கொட்டிவிட்டார். மேலும், ‘நமக்கு ஏராளமான வாய்ப்பும், நேரமும் கிடைத்தது. தொடர்ந்து ஆறு காலாண்டாக பொருளாதாரம் சரிந்து வருகிறது,’ என்றும் அவர் கூறினார். பதிலுக்கு அவருடைய மகன் ஜெயந்த் சின்ஹாவை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்தது பாஜக மேலிடம்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வெளியேறியபோது இந்திய பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருந்தது. இப்போது அது 5.7 சதவீதமாக அதலபாதாளத்திற்கு சரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட 1990&களில் (நரசிம்ம ராவுக்கு முன்பாக), இந்தியா இருந்த நிலைக்குச் சென்று விடுமோ என்ற அச்சமும் பலருக்கு எழுந்துள்ளது. சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, நம்மிடம் இருப்பில் இருந்த தங்கத்தை அடமானம் வைத்துதான் நிர்வாகச்செலவுகளை மேற்கொள்ள முடிந்தது.

அண்டப்புளுகு:

பாஜக ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார் மோடி. அவருடைய அண்டப்புளுகு ஆகாசப்புளுகுகளில் இதுவும் ஒன்று என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

வேறு என்னென்ன கதைகளை அளந்திருக்கிறார் என்பதைத்தான் இப்போது பேச இருக்கிறோம்.

அடுத்தப் பொய்:

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு மேல் 1.50 மடங்கு கூடுதலாக விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்படும் என்றார். பின்னர், இது தொடர்பான ஒரு வழக்கில், நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், ”விளை பொருட்களுக்கு 1.50 மடங்கு கூடுதலாக விலை கொடுப்பது சாத்தியமற்றது. விரும்பத்தக்கதும் அல்ல,” என்று கூறப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 400 விவசாயிகள் மரணமும் அடங்கும்.

இன்னொரு பொய்:

2013ல் ஆக்ராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘நான் பிரதமரானால் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்,’ என்றார் நரேந்திர மோடி. மாதம் பிறந்தால் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கோ, அன்றாடங்காய்ச்சியாய் அல்லல்படும் கீழ்நிலை தொழிலாளிக்கோ இதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் போகலாம்.

ஆனால் நடந்ததை சொல்வதுதானே தர்மம்?.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்குவது 84 சதவீதம் குறைந்துவிட்டதாக மத்திய தொழிற்துறை அமைச்சகமே புள்ளிவிவரங்களை வெளியிட்டு, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா ஸ்பெண்ட் என்ற அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு 2.50 கோடி புதிய வேலைவாய்ப்புகளுக்கு தேவை இருந்தும் சராசரியாக 70 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே அரசுகள் உருவாக்கி வந்திருப்பதாகக் கூறுகிறது.

கடந்த 2009-10ம் ஆண்டில் 8.70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அது, கடந்த 2016ம் ஆண்டு 1.35 லட்சமாக குறைந்து இருக்கிறது. நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வரக்கூடிய ஐ.டி. துறையில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த துறையில் இருந்து சுமார் 6 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.

மீண்டும் பொய்:

கள நிலவரம் இப்படி இருக்க, அந்நிய முதலீடு குவிவதுபோல மோடி தொடர்ந்து சொல்லி வருகிறார், பிரதமர். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியாவிற்குள் வரும் அந்நிய முதலீடு என்பது இங்கு புதிய தொழிற்சாலையை தொடங்குவது அல்ல. மாறாக, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காகவே முதலீட்டை குவிக்கின்றன. அது எப்படி வளர்ச்சி ஆகும்?. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பைச் சேர்ந்த தபன் சென், இதை உறுதிப்படுத்துகிறார். மேலும், மத்திய அரசு அறிவித்தபடி கிரீன் ஃபீல்டு திட்டம் எதுவும் இதுவரை நம் நாட்டிற்குள் வரவில்லை என்றும் கூறுகிறார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி. இரு தரப்புமே கார்ப்பரேட்டுகளுக்கேற்ற தொழிற் கொள்கைகளை வகுப்பவர்கள்தான். ஆனாலும், ஐ.மு.கூ.வை விட, பாஜக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கால் பிடித்துவிடக் கூடிய அளவுக்கு சரணடைந்து விட்டதுதான் மோசம்.

அதனால்தான், விவசாயிகளின் கடனை வசூலிக்க கறார் காட்டும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் வராக்கடனை ரத்து செய்யவும் தயங்குவதில்லை. உண்மையில், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் கோடிகள் வரை இந்திய அரசு சலுகை காட்டுகிறது.

இதன் தாக்கம் சமூகத்தில் வேறு சில மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆமாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஒரு சதவீதம் மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இந்தியாவின் மொத்த சொத்துகளில் 49 சதவீதம் குவிந்து இருந்தது. நடப்பு ஆண்டில் அது 58.34 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி அதிகரிப்பு என்பது பெருமைக்குரியது அல்ல. அது, மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.

அதேபோல், பொதுத்துறையை தனியார்மயமாக்குவதிலும் பாஜக அரசு தீவிரமாக இருக்கிறது. அதன் விளைவாகவும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. பாதுகாப்புத் துறையில் 273 முக்கிய பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் 148 பொருள்களை தயாரிக்கும் பணிகள் வெளிநாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதன்மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு பறிபோவது மட்டுமல்ல; உற்பத்தித் திறமையும் மடிந்து போகும்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என சாமானியர்கள் நிமிரவே இடம் கொடுக்காமல் அடித்துக் கொண்டே இருந்தால், நரேந்திர மோடி சொன்ன அச்சா தின் (நல்ல நாள்) எப்போது வரும்?

– பேனாக்காரன்.