Wednesday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

குமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயலைக்கூட ஒப்பேற்றிவிட்ட இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டணியினர், டிடிவி தினகரனின் எழுச்சியை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் மன்னார்குடி கும்பலின் சுவடே இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி மேலிடம் இட்ட கட்டளை. குட்டாக இருந்தாலும் துட்டாக இருந்தாலும் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இருப்பதை இழக்க விரும்புவார்களா என்ன?

அதனால்தான் சமயம் பார்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். காலடியிலேயே கிடந்தவர்கள் புதிய எஜமானர்களின் உத்தரவுக்கு அஞ்சி நடப்பதை சற்றும் ஜீரணிக்க இயலாத மன்னார்குடி கும்பல், ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக களமிறங்குவதுதான் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர்.

அதன் விளைவாகத்தான், அமலாக்கப்பிரிவினரின் அதிரடி ரெய்டு, ஃபெரா வழக்கு, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என ஆயிரம் நெருக்கடிகளுக்கு இடையிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனே நேரடியாக களத்தில் இறங்கினார். தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்றே தீர வேண்டும்; அதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இழந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார் தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக ரொம்பவே சுணங்கிப் போய் இருந்த நிலையிலும், டிடிவி தினகரனின் பிரச்சார படையினரோ காலை 8 மணிக்கெல்லாம் ‘டான்’ என்று களத்தில் இறங்கி, பணிகளை ஆரம்பித்து விடுவார்கள். தேர்தல் ஆணையம் அனுமதித்த கடைசி நிமிடம் வரை களத்தில் இருந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது டிடிவி தினகரனைப் பொருத்தவரை ‘டாம் அண்டு ஜெர்ரி’ போலதான். எலி உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால் பூனையிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதால்தான் அவர் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிலையில் இருந்தார். வெற்றியும் பெற்றார்.

அந்த தொகுதி மக்களிடம் முன்வைத்த வாக்குறுதிகளில் ஒன்றுதான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது என்பதும். அந்த அஸ்திரத்தை நோக்கிதான் அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

ஏற்கனவே, 18 எம்எல்ஏக்கள் அவருடைய ஆதரவாளர்களாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, 12 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்கள் அவருக்கு ஃபோனிலும், சிலர் ரகசியமாக நேரில் சென்றும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையெல்லாம் மனதில் வைத்துதான் டிடிவி தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்ற பின்னர், ”ஆறு அல்லது ஏழு எம்எல்ஏதான் இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள். அதனால் பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் இந்த ஆட்சி எப்படியும் கலைந்து விடும்,” என்றார்.

அதேநேரம், பாஜக முக்கிய தலைவர்கள் சிலர் இனியும் சிபிஐ, அமலாக்கத்துறையைக் காட்டி ஒருவரை அச்சுறுத்த முடியாது. எவ்வளவோ குடைச்சல் கொடுத்தும் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன இரட்டை இலைச் சின்னத்தை டிடிவி தினகரன் தோற்கடித்து இருப்பதையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதிகாரத்தின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தத்தையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் பாஜக அதிகார மையங்கள் இந்த நேரம் உணர்ந்திருக்கக் கூடும்.

அதனால்தான், தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன், டிடிவி தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து இருந்தால் அக்கட்சிக்கும் அவர்களுக்கும் நல்லது என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

அதேநாளில், ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியன் சுவாமியும் இரு அணிகளும் 2019 மக்களவை தேர்தலுக்குள் இணைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று பதிவிட்டு இருந்தார். இருவரும் தனித்தனியாகச் சொல்லியிருந்தாலும், பாஜக மேலிடத்தின் எண்ணத்தையே அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு டிவிஸ்டையும் பதிவிட்டுள்ளார். சொந்தக்கட்சியான பாஜகவை ஆதரிக்காமல் ஏன் டிடிவி தினகரனை ஆதரித்தேன் என்பதற்கு, ராமாயணத்தில் வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனை ராமன் ஏன் துணைக்கு அழைத்துக்கொண்டாரோ அதே காரணத்துக்காகத்தான் என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து இருமுறை ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது மக்களுக்கு எப்படியும் ஒருவித சலிப்பு ஏற்பட்டிரு க்கும். அதன் எதிரொலியாக அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடக்கூடும். எனில், திமுகவின் வெற்றியைத் தடுக்கும் சாம, பேத, தான, தண்டம் என அனைத்து உபாயங்களிலும் தேர்ச்சி பெற்றவர் டிடிவி தினகரன்தான் என்றும் பாஜக நம்புவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றை முற்றாக அழித்தாக வேண்டும். மற்றொன்றை உறவாடிக் கெடுத்துவிடலாம் என்ற முடிவில் பாஜக இருப்பதாகவும், அதற்கு முதல் பலி திமுகதான் என்று முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவை அழிக்க டிடிவி தினகரன்தான் சரியான ஆள் என்றும் டெல்லி மேலிடம் கருதுகிறது. அதனால், அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் வேலைகளிலும் பாஜக மறைமுகமாக ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அணிகள் இணைகிறதோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியை கலைப்பது அல்லது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் ஆதரவாளரான ஒரு முன்னாள் எம்எல்ஏ கூறுகையில், ”அரசியலில் எல்லோருமே துரோகிகள்தான். துரோகம்தான் முதல் தகுதி. துரோகிகள் ஒருவருக்கொருவர் முதுகில் குத்துவது இல்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முதுகில் குத்தினர். அதனால் அவர்கள் மீது அண்ணனுக்கு (தினகரன்) கடும் கோபம் இருக்கிறது.

பாஜக விவகாரத்தில் அண்ணன் பணிந்து போவாரா இல்லையா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், பாஜக எதிர்ப்பு அரசியல்தான் தமிழகத்தில் கைகொடுக்கும் என்பதை அண்ணன் தெரிந்து வைத்திருக்கிறார். ஆட்சியை கலைத்தால் அது, அவருக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால், கட்சியையும் ஆட்சியையும் அவர் கைப்பற்றுவதுதான் நோக்கம்,” என்றார்.

இதன் காரணமாகத்தான் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன், அதை சசிகலாவும், தொண்டர்களும் முடிவு செய்வார்கள் என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டு நகர்ந்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரனுக்கு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் சட்டப்பேரவையில் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் பலமும் அதிகரிக்கும் எனத்தெரிகிறது.

அதை வைத்து, ஆளும்தரப்புக்கு எதிரான சாட்டையை இன்னும் கடுமையாக சுழற்றுவார் என்கிறார்கள். நேற்று (டிசம்பர் 29, 2017) தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவர் மீது ஒட்டுமொத்த கவனமும் திரும்பிவிடக் கூடாது என்பதற்காக, பொங்கல் பரிசுத்தொகுப்பு, நெல்லுக்கு ஆதார விலை உயர்வு என இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆக, ஆளும் கட்சிக்கும், தினகரனுக்கும் இடையிலான சடுகுடு ஆட்டம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதும்கூட அந்த ஆட்டத்தின் தொடர்ச்சிதான்.

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்திராதவர் அல்ல டிடிவி தினகரன். எதிர் தரப்பினருக்கு அவர் இரண்டு விதமான வாய்ப்புகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு தானே அரியணையில் ஏறுவது. அப்படியெனில் எடப்பாடிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய இலகாக்கள் கிடைக்குமாம்.

இரண்டாவது, தான் முதல்வர் ஆவதில் சிக்கல் இருக்கும்பட்சத்தில் தனது ஆதரவாளரை அந்தப் பொறுப்பில் அமர வைப்பது என இரண்டு வாய்ப்புகளை முன்வைக்கலாம் எனத்தெரிகிறது. கட்சியைப் பொருத்தவரை, டிடிவி தினகரனை கட்சித் தலைவராகவும், சசிகலாவை பொதுச்செயலாளராகவும் ஏற்க வேண்டும் என்ற திட்டத்தையும் முன்வைப்பார் என்கிறார்கள்.

இந்த இரண்டு வாய்ப்புகளும் வெற்றி பெறாதபோதுதான் ஆட்சி கலைப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை எறிவார் என்றும் கூறுகின்றனர். தமிழக அரசியலில் அடுத்தடுத்த திடீர் திருப்பங்களுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

– நாடோடி.