Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார்.

தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலையில், சுப்ரமணியன்சுவாமி மட்டும் டிடிவி தினகரனை தொடர்ந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோதுகூட, அதிமுகவை வழிநடத்தும் திறமை சசிகலாவுக்கு உண்டு என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் பாஜக மிகக்குறைவான வாக்குகளே பெற்றது. அதை கேலி செய்யும் விதமாக, ”இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, நோட்டா பெற்ற வாக்குகளில் கால் பங்குகூட பெற முடியவில்லை. தமிழ்நாடு பாஜக தங்கள் பொறுப்பை உணரும் தருணம் இது,” என்று தெரிவித்து இருந்தார்.

அதே நாள் மற்றொரு பதிவில், ”டிடிவி தினகரன் வெற்றிருக்கிறார். 2019 மக்களவை தேர்தலின்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விடும் என எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

அதிமுக, சசிகலா அணி விவகாரத்தில் பாஜகவுக்குள் இருந்து கொண்டே முரண்பட்ட நிலைப்பாட்டில் சுப்ரமணியன்சுவாமி இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியன்சுவாமி இன்று (டிசம்பர் 27, 2017) வெளியிட்ட ஒரு பதிவில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட்டுவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர்.

கடவுள் ராமர், வாலியை விட்டுவிட்டு ஏன் சுக்ரீவனை தேர்வு செய்தார் என்ற கதையைப் படியுங்கள். உங்களுக்கே அர்த்தம் புரியும்,” என்று கூறியுள்ளார்.

சுப்ரமணியன்சுவாமி எதையும் நேரடியாக, பட்டவர்த்தனமாக பேசக்கூடியவர். எனினும், ராமாயண கதையை மேற்கோள் காட்டி கருத்து சொன்னதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

‘புதிய அகராதி’ வாசகர்களுக்காக ராமன் – சுக்ரீவன் கதைச்சுருக்கம் இங்கே….

கிஷ்கிந்தை காண்டத்தில் கம்பர் குறிப்பிடுகிறார்.

வாலியும் சுக்ரீவனும் சகோதரர்கள். வாலி, அண்ணன். சுக்ரீவன் தம்பி. வானரப் படைகள். வாலிக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. எதிர்த்துப் போரிடும் யாராக இருந்தாலும் அவர்களின் பலத்தில் பாதியளவு வாலிக்குச் சேர்ந்துவிடும் என்பதே அந்த சக்தி.

சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்று விடுகிறான். சுக்ரீவனின் மனைவியை மீட்டுத்தரும்படி அவன் சார்பில் அனுமன், ராமனிடம் உதவி கேட்கிறான்.

இதனால் ஏற்பட்ட போரில் வாலியிடம் தோற்று சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்திற்குள் தப்பி வந்து விடுகிறார். அந்த பர்வதத்திற்குள் வாலியால் நுழைய முடியாது. அப்படியும் ஒரு சாபம்.

குகைக்குள் அச்சத்துடன் ஒடுங்கி, ஒளிந்திருந்த சுக்ரீவனை ராமன் சந்தித்தார். ‘கவலைப்படாதே. நான் இருக்கிறேன். உன் மனைவியை மீட்டுத் தருகிறேன்,’ என்று ராமன் உறுதி அளிக்கிறார். அதற்கு சுக்ரீவன், ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ பரிதாபமாக கேட்கிறான்.

கலங்காதே. நீ மறுபடியும் போய் வாலியை போருக்கு அழை. நான் அப்போது மறைந்திருந்து அம்பு எய்து வாலியைக் கொன்று விடுகிறேன் என்று ராமன் கூறினான். வாலிக்கும், சுக்ரீவனுக்கும் சண்டை தொடங்கியது.

இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவருமே உருவ அமைப்பில் ஒரே மாதிரியாக இருந்ததால் ராமனுக்கு யார் சுக்ரீவன்? யார் வாலி என்பதில் குழப்பம். தவறுதலாக சுக்ரீவனையே கொன்று விட்டால் என்னாவது? ராமன் குழம்பினான்.

பலத்த காயம் அடைந்த சுக்ரீவன் தெறித்து ஓடிவர, ராமன் அவனைத் தேற்றினான். அண்ணன் கையாலேயே தன்னை கொல்ல திட்டம் போடுகிறாரோ என்றும்கூட சுக்ரீவன் ஒரு கணம் நினைத்தான்.

அப்போது ராமன், ”உருவ ஒற்றுமையால் என்னால் வாலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் உன் மனைவியை அபகரித்த வாலியை நான் கொல்வேன். ஆனால் உன்னை தனித்துக் காட்ட ஓர் அடையாளம் வேண்டுமே,” என்று கூறி, சுக்ரீவனுக்கு அப்போது மலர்ந்த மலர்களால் ஆன ஒரு மாலையைச் சூட்டி விடுகிறார்.

மீண்டும் வலியச்சென்று வாலியை அழைத்தான் சுக்ரீவன். இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் ராமன் மரத்தின மறைவில் இருந்து வாலியின் மார்புக்கு குறிவைத்து அம்பு எய்த, வாலி நிலைகுலைந்து கீழே சரிந்தான்.

‘‘ராவணன் கவர்ந்து சென்ற சீதையை மீட்க நீ என்னையே அணுகியிருக்கலாமே. ஏன், சுக்ரீவனிடம் உதவிகேட்டு என்னை சண்டையிட அழைக்கச் சொல்லி என்னைக் கொன்றாய்? என்னைக் கொல்வதால் உனக்கு என்ன லாபம்? நீ உத்தமன். நல்ல பண்புடையவன்.

இப்படி மறைந்திருந்து கொல்கிறாயே, இது நியாயமா?. இது தர்மம் ஆகுமா?’’ என்று வாலி கேட்க, ‘‘உன்னுடைய எதிரியின் வலிவை வாங்கிக் கொள்ளும் வரத்தை நீ வைத்திருக்கிறாய். அதனால் உன்னுடன் நேரில் நின்று போரிடுவது தர்மயுத்தம் ஆகாது. உன்னுடைய வீரத்தை மறைந்துதான் சந்திக்க வேண்டியுள்ளது.

உன்னுடைய வரத்தின் தவறு அது. மறுபடியும் சொல்கிறேன் நீ ஒரு வானரம். ஒரு மிருகம். அதை நான் மறைந்திருந்து கொல்லலாம். அது தவறில்லை’’ என்று சொல்ல, அவருடைய பேச்சைக் கேட்டு வாலி அமைதியானான்.

‘‘ஸ்ரீராமா, ஆயினும் தோன்றுகிறது. இந்த உதவியை நான் செய்திருப்பேனே,’’ என்று சொல்ல, ‘‘நான் எப்படி உன்னை நம்புவது? சுக்ரீவனுடைய மனைவியை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய்.

நான் என் மனைவி சீதையை தேடிக்கொடு என்று உன்னிடம் சொன்னால் வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் நான் எப்படி நம்புவேன்? நீ நம்பிக்கைக்கு உரியவனாக எனக்குத் தென்படவில்லை. மாற்றான் மனைவியை வரிப்பவன் நல்லவனாக நான் நினைக்கவில்லை’’ என்று சொன்னார் ராமர்.

இப்படி முடிகிறது அந்த கதைப்படலம்.