ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளரை தோல்வி அடையச் செய்துள்ளார்.
- மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக கருதப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 97218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 57673 வாக்குகளும் பெற்றனர்.
- சிம்லா முத்துச்சோழனை விட 39545 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இப்போது நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தல் களத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர் வேட்பாளரை தோற்கடிக்கும் வெற்றி வித்தியாசம் என்பது ஜெயலலிதாவைக் காட்டிலும் டிடிவி தினகரன் கூடுதலாக 1162 வாக்குகள் பெற்றுள்ளார்.
- தமிழகத்தைப் பொருத்தவரை 1980ம் ஆண்டு முதல் இப்போது வரை 54 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 46 தேர்தல்களில் ஆளுங்கட்சியும், மற்ற 8 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். எனினும், 2006ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது.
- கடந்த 2004ம் ஆண்டு மங்களூர் (தனி) தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெ.கணேசன் 61956 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.ராமலிங்கம் 48070 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அப்போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. இதுதான், தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஓர் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற கடைசி நிகழ்வு.
- இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
- பொதுத்தேர்தல்களில் முன்னணி கட்சிகளில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது. எனினும், ஓர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை.
- காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட 10 கட்சிகள், அமைப்புகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக, ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் டெபாசிட் இழந்து மண்ணைக் கவ்வுவதும் இந்த தேர்தலில் அக்கட்சி மட்டுமின்றி வாக்காளர்களேகூட சற்றும் எதிர்பாராத முடிவாக அமைந்தது.
- ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அதிமுக, கட்சியின் பலமாக கருதப்பட்ட இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர், காவல்துறை, பாஜகவின் ஆசீர்வாதம், தேர்தல் ஆணையம் என சக அதிகாரங்களுடன் களமிறங்கியும் மதுசூதனனை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் தோற்கடித்துள்ளார். இத்தனைக்கும், அதிமுக வேட்பாளர் மதுசூதனனும், திமுக வேட்பாளர் மருதுகணேஷூம் ஆர்.கே. நகர் தொகுதியின் மண்ணின் மைந்தர்கள்.
டிடிவி தினகரன், 13.12.1963ல் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். அவருக்கு தற்போது 54 வயதாகிறது. அவருக்கு அனுராதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அதிமுக சார்பில் 1999ல் பெரியகுளம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலாக எம்பி ஆனார். அதன்பின், 2004 முதல் 2010ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிபெற்று முதன்முதலாக தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.