கவிதை என்றாலே
பெண்களைப் பாடுவது;
பெண்களைப் பாடாவிட்டால்
அது கவிதையாகவும் இராது;
கவிஞனாகவும் இருக்க இயலாது
எனும் அளவுக்கு,
இலக்கியத்தின் எஞ்சிய
அடையாளமாக இருக்கும்
கவிதைகளும், கவி புனைதலும்
இப்போதும் ஆணுலகம்
சார்ந்தே பார்க்கப்படுகிறது.
ஆக்கத்தின் மையப்புள்ளியே
பெண்கள்தான். ஏனோ அவர்கள்
இலக்கிய வெளிக்குள்
எட்டிப்பார்க்க இப்போதும்
தலைப்படுவதில்லை. அவர்களுக்கு
சமூகம் நம்பிக்கையை
ஏற்படுத்தவில்லை என்றும்
சொல்லலாம்.
சங்க காலத்திலும் கூட வெள்ளி வீதியார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்பாற்புலவர்கள் இருந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், பெண்களின் வலியை அவர்கள்தானே பேச வேண்டும்? அவர்கள் இல்லாத இடத்தில் பெண்களின் அழகியலை மட்டுமே ஆண் கவிஞர்கள் வளைத்து வளைத்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். கம்பன், வள்ளுவன் முதல் சைவக்குறவர்கள் வரை பெண்களின் அங்க அழகியலை வர்ணிக்காதவர்களே கிடையாது.
இவர்களின் வர்ணனையில்
உச்சம் என்பதே பெண்களின்
கொங்கைகள் பற்றியதாகத்தான்
இருக்கிறது. குறுந்தொகையிலும்
ஏராளமான பாடல்களில்
கொங்கைகள் குறித்த வர்ணனைகள்
இருக்கின்றன. முலைகள் என்றும்
சொல்லலாம். தற்கால உலகம்
முலை என்ற சொற் பயன்பாட்டை
கெட்ட சொல்லாகக் கருதுவதால்,
கொங்கைகள் என்று சொல்ல
வேண்டியதாகிறது.
கம்பராமாயணத்தில், அயோத்தியா காண்டத்தில் 1931வது பாடலில், கம்பன் சீதையை வேறு வேறு கோணங்களில் இருந்து வர்ணிக்கிறான். கொஞ்சம் காம ரசம் கலந்த கம்பரசம் அது.
”’அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள்,”
என ராமனுடன் வனம் புகும் சீதையை நிலையைச் சொல்கின்றான் கம்பன். சீதையின் முலைகள் பற்றிய உவமைகளை இரண்டு கோணங்களில் நின்று பார்த்திருக்கிறான். அருப்பு ஏந்திய கலசத்துணை என்ற வரியில், ‘மலர் மொட்டுகள் போன்ற இணை முலைகள் இரண்டு’ எனப்பாடுகின்றான். சீதையை நேருக்கு நேராக நின்று பார்த்த கோணத்தில் இருந்து, அவளது முலைகள் மலர் மொட்டு போல இருக்கின்றன என்கிறான்.
அதே கம்பன்தான் சற்று விலகி, சீதையை பக்கவாட்டு கோணத்தில் நின்று பார்த்திருக்கிறான். பால் அமுதத்தை தாங்கி நிற்கும் சீதையின் முலைகளுக்கு வேறொன்றையும் உவமையாகச் சொல்கிறான். சீதையின் முலைகள், அவை மத யானையின் தந்தங்கள் போல இருக்கிறது எனப்பாடுகிறான். இப்படி பாடியதில் இருந்தே அவன் சீதையை எந்தெந்த கோணங்களில் பார்த்திருக்கிறான் என நாம் யூகம் செய்கிறோம்.
சீதை நடந்து செல்லும்போது,
உந்தி முன்செல்லும்
அசைவுகளையும்,
நுனி மேல் எழுந்த
கூர்மையையும், அவற்றின்
நெகிழ்வையும், வளைவையும்
கம்பன் வேறு வேறு
கோணங்களில் நின்று
எழுதுகின்றான்.
மழை மேகத்தை
ஏந்தி நிற்கும் கூந்தலை
உடைய சீதை, செல்லும்
வழியில் கரும்பு பிழியும்
எந்திரங்களையும் காண்கிறாள்.
அவை துயரங்களின் குறியீடு.
என்றாலும், மலைகள் போன்ற
தோள்களை உடைய ராமனோடு
செல்லும்போது காடு புகுவதால்
தனக்கு ஒரு துன்பமும் நேர்ந்து
விடப்போவதில்லை என
மகிழ்ச்சியுடன் கணவனை
புரிந்து நடக்கும் மனையாளாக
ராமனுடன் சீதை வனத்திற்குள்
செல்கின்றாள்
என்கிறான் கம்பன்.
ஒரு பொருள்; இரு வேறு கோணங்கள் என நுட்பமாகப் பாடுவதில் கம்பனுக்கு நிகர் கம்பன்தான். சரி… கம்பனின் கோணத்தை விடுவோம். சீதை, கடவுளின் அவதாரமாக இந்து சனாதனக் கூட்டம் பார்க்கிறது அல்லவா? சீதையின் முலைகள் கலசத்தின் மீது மலர் மொட்டுகளை கவிழ்த்து வைத்ததுபோலவும், மதம் கொண்ட யானையின் கூர்மையான தந்தங்களைப் போலவும் இருந்தன என்று சொன்னதற்கெல்லாம் சனாதனவாதிகள் நம் மீது வழக்கு தொடுத்தாலும் ஆச்சர்யமில்லை. இல்லாவிட்டால், நம்மை ‘இந்து விரோதி’ என்பார்கள். பாட்டெழுதிய கம்பனை விட்டு விடுவார்கள்; பொழிப்புரைத்த என் மீது பாய்வதில் தர்க்கம் நியாயம் இல்லை.
மற்றொரு சங்கப்பாடலுடன் மீண்டும் பேசுவோம்.
– செங்கழுநீர்