Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

பூ-வ-ன-ம்

 

‘தொல்காப்பியப் பெயர்த்தி’ என்ற பெயரில் விரைவில் கவிதை நூல் வெளியிட இருப்பதாக இந்நூலாசிரியர் மழயிசை ஒருநாள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அப்போதுமுதல், அவரைவிடவும் இந்த நூலுக்காக பேரார்வத்துடன் காத்திருந்தேன். எனக்குத் தொல்காப்பியம் பிடிக்கும் என்பது மாத்திரமல்ல; வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. ஒன்று, தொல்காப்பியரின் பெயர்த்தி என்று சொல்லிக்கொள்ளும் அசாத்திய துணிச்சலும் ஒருவருக்கு இருக்கிறதா? என்ற வியப்பு; அடுத்து, மழயிசை என்ற நூலாசிரியரின் புனைப்பெயர். இரண்டு தனித்துவ அடையாளங்களும் எதிர்பார்ப்பை உண்டாக்கின.

நூலின் தலைப்பிற்கேற்றவாறு தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நவீனத்தையும் இணைத்து நிகழ்கால சமூக அவலங்களை சாடியிருக்கிறார் மழயிசை. எல்லா புதுமுக படைப்பாளிகளும் பேசுகிற பாடுபொருள்களைத்தான் இந்நூலாசிரியரும் பேசுகிறார் என்றாலும், பெண்ணின் காமத்தைப் பல இடங்களில் பதிவு செய்திருப்பதில் தனித்துத் தெரிகிறார்.

 

மழயிசையை தனிப்பட்ட முறையிலும் பல ஆண்டுகளாக அறிவேன். அவர் பேச்சினில், பகடியும் இருக்கும்; சுய எள்ளலும் இருக்கும். அதை இந்நூலிலும் பதிவு செய்திருக்கிறார் தொல்காப்பியரின் துணை கொண்டு.

 

”பாஞ்சாலியின் துயில் உரிதல்
‘ஆதிநீடல்’ விதி
நாட்டில் துரியோதனனுக்குப் பஞ்சமாம்
குறைந்து ஒலிக்கிறது
பூவையர்களின் துகிர்”

 

ஆதிநீடல் என்னும் நன்னூல் வரையறுக்கும் இலக்கணத்தை, உரிக்க உரிக்க நீண்டு கொண்டே இருக்கும் பாஞ்சாலியின் துகிலுக்கு குறியீடாச் சொல்லி கவனிக்க வைக்கும் கவிஞர், ‘துரியோதனனுக்கு பஞ்சமாம் / குறைந்து ஒலிக்கிறது பூவையர்களின் துகிர்’ என்று அங்கங்களை காட்சிப்பொருளாக்கும் வகையிலான உடைகளுக்கு மாறிய நவயுகப் பெண்களை பகடி செய்கிறார்.

 

”தலை தூக்குகிறது
சாதிக் கட்சிகள்
இனம்மிகல் விதியால்
தன்னொற்று இரட்டுகிறது
ஆநிரை கவர்தலுக்காக
புறமுதுகிட்டால்
மை (மெய்) விகுதி கெட்டு
ஈறுபோதல் விதியே இறுதியாகும்
அமோகமான வசூலில்
சாதி எக்ஸ்பிரஸ்”

 

என்ற கவிதையில், இனம்மிகல் இலக்கண விதியை சாதிவெறி கொண்டு அலையும் அரசியல்கட்சித் தலைவர்களுக்கு குறியீடாக்குகிறார். தன்னொற்று இரட்டித்தல், ஈறுபோதல் விதிகளையும் சாதித்தலைவர்களை கிண்டலடிக்க லாவகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் மழயிசை. சாதிக்கு எதிராகக் களமாடும் போராளிகளின் உடல் புண்ணாகும் (மெய் விகுதி கெடும்); பற்களை உடைப்பார்கள் (ஈறுபோதல்).

 

‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்’ என்று பாலும், தேனும் கலந்த சுவையென முத்தத்தைப் பற்றி சத்தமின்றி பாடுகிறார் திருவள்ளுவர். ஆனால் மழயிசையோ, ‘காதல் சுவையைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன் / அவன் கொடுத்த குளோரோபார்ம் முத்தங்களை எல்லாம் / என் இரு இதழ்கள் சேமித்து வைத்திருக்கின்றன’ எனப் பாடுகிறார். தலைவன் கொடுத்த முத்தம், தன்னை மயக்கமுறச் செய்கிறதாம். ஏனெனில் அது, ‘குளோரோபார்ம் முத்தம்’ என புதிய உவமையுடன் வாசகர்களை ரசிக்க வைக்கிறார்.

தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியலை எல்லோரும் வாசித்தே ஆக வேண்டும். அதில் சரியான புரிதல் இல்லாததால்தான், இங்கே தாம்பத்ய உறவுகளிலும், காதலிலும் பெரும் பிணக்குகள் ஏற்படுகின்றன. காதலனை நோக்கும் காதலி, அவனின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காக தன் கூந்தலை விரித்து விடுகிறாள் (கூழை விரித்தல்), சரியாக இருக்கும் காதணிகளில் ஒன்றை வெறுமனே கழற்றி மாட்டுகிறாள் (காதொன்று களைதல்), தலைவனைப் பார்த்த மாத்திரத்தில் தலைவியின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் ஊறலை கையால் தடவுகிறாள் (அல்குல் தைவரல்), அணிகலன்கள் எல்லாம் சரியாக இருந்தும் மீண்டும் திருத்தி அழகு படுத்திக் கொள்கிறாள் (அணிந்தவை திருத்தல்), தலைவன் காண்பதை தலைவி விரும்பி ரசித்தல் (புகுமுகம் புரிதல்) எனத் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகளைச் விவரிக்கிறார் தொல்காப்பியர்.

 

 

இத்தகைய மெய்ப்பாட்டியல் கூறுகளை மேற்கோளிடும் கவிஞர் மழயிசை,

 

”காட்சி, ஐயம், இடந்தலைப்பாடு
புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல் இல்லை
கூழை விரித்தல், காதொன்று களைதல் காணோம்
அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்
எனக் களவியலே கொள்ளாமல்
கவசகுண்டலத்துடன்
களவுக்குழவி வந்தது கதிரவனால்
டெஸ்ட் டியூப் பேபியா?
வாடகைத் தாயா?
அசரீரி கேட்க
வரத்தால் வந்ததென
புலம்பித் தோன்றிக்
கலங்கி மொழிந்தாள்
மருத்துவத்துறையில்
பெரிய புரட்சி
குந்தியைக் காணப்
பெரும் புள்ளிகளெல்லாம்
அப்பாயிண்ட்மென்ட் வாங்குகிறார்கள்
வாட்ஸப்பில்
மெகாபாரத செய்திகளுக்காக
பாஞ்சாலத்திலிருந்து”

 

எனப் பாடுகிறார்.

 

இல்லறம் இனிக்க தொல்காப்பியத்தில் மருந்து இருக்கிறது. ஆனால், சேவலைச் சேராமல் பெட்டைக்கோழி முட்டையிடுவதுபோல, பெண்கள் குழந்தை பெற மெய்ப்பாட்டியலே தேவையில்லை என்கிறாரோ என்னவோ. ஆனால் களவுக்குழவி, மெகாபாரதம் போன்ற புதிய சொற்களை ரசனையுடன் தந்திருக்கிறார் கவிஞர்.

 

மழயிசை ஒரு தேர்ந்த சிந்தனையாளர் என்பதற்கு பின்வரும் கவிதை மேலும் ஒரு சான்று…

 

”குறிஞ்சியும் முல்லையும்
பாலையாக்கப்படுகின்றன
இரவுக்குறியில்!
சிலநேரங்களில் பகற்குறியிலும்!”

 

தொல்காப்பியத்தில் இரவுக்குறி, பகல்குறி என்பது தலைவனும், தலைவியும் இரவில் அல்லது பகலில் சந்தித்துக் கொள்ளும் இடத்தைக் குறிப்பதாகும். எக்குறியானாலும் தலைவியுடன் தோழியும் இருப்பாள். ஆனால் இங்கே இரவுக்குறி, பகல்குறிகளை படிமங்களாக மட்டுமே மழயிசை மிக நுட்பமாகப் பயன்படுத்தி இருப்பதை அறியலாம். தொழில்பேட்டை, எண்ணெய்க்கிணறுகள், கனிமச்சுரண்டல், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களின் பெயரால் குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் சூறையாடப்படுவதால் அவை பாலையாகி வருவதை நுட்பமாக பதிவு செய்கிறார் கவிஞர். அவரும் குறிஞ்சி நிலத்துக்காரர் என்பதால் சுரண்டலின் பாதிப்பை நெருக்கமாக அறிந்திருப்பார்.

 

எந்த ஒரு நூலிலும் கூறியது கூறல் உள்ளிட்ட பத்து வகையான குற்றங்கள் இருக்கவே கூடாது என்கிறது தொல்காப்பியம். ஆனால், அரசியல்வாதிகள் என்போர் எல்லா விதிகளையும் தகர்த்தவர்கள்தானே?

 

கூறியது கூறல்
தேர்தல் வாக்குறுதிகள்
மாறுகொளக்கூறல்
வெற்றிக்குப்பின்
குன்றக்கூறல்
நிதியறிக்கை
மிகைபடக்கூறல்
சட்டசபையில்
மயங்கக்கூறல்
ஐந்தாண்டுகளுக்குப்பின்!

 

திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வருவதற்குமுன், ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபிறகு, ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; இப்போதைக்கு ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம் என்று மாறுகொளக்கூறியது. கச்சத்தீவை மீட்போம் என்று திராவிடக் கட்சிகள் சொல்லி வருவதும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக சொல்லி வருவதும் கூறியதுகூறல் ரகமே. இக்கவிதை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் சொற்களால் ஜாலமிட்டுள்ளார் மழயிசை.

இந்நூலில் இன்னொரு தவிர்க்கவே இயலாத கவிதை. அடிக்கடி நான் சிலாகிப்பதும்கூட.

 

”ஊரொடு தோற்றம்
அலர் என மொழிப
களவுங் கற்பும் அலர் வரைவின்றே
அலரில் தோன்றும்
கத்திக்குத்து மிகுதி”

 

அலரறிவுறுத்தல் இல்லாவிட்டால் காதல் அதன் தன்மையை இழந்து விடும் என்கிறான் வள்ளுவன். ஆனால், ஊராரின் அலர் காரணமாகவே சாதி கடந்த காதலர்கள் சாதிய வெறியர்களின் கத்திக்குத்துக்கு இரையாகிட வேண்டிய அவலநிலையை அழகாகப் பதிவிடுகிறார். சாதிக்கு எதிராக பல கவிதைகளை எழுதியிருக்கும் இருப்பதில் இருந்து சமூக அவலங்களை எழுத்தின் வழியே களையத்துடிக்கும் படைப்பாளியாகவும் கவனம் சேர்க்கிறார்.

 

கூடல் இன்பத்தைத் துய்க்க இருவரிடத்திலும் காதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கைக்கிளையாகி விடும். ”தலைவனின் உந்தியில் / ஆகாரம் அளபெடுக்கக் / கலங்கி மொழிந்து மயங்கினான் / தலைவி இன்பத்தை வெறுத்தாள் / யாணர் புணர்வை மறுத்தாள் / அச்சத்தில் அகல முயல / விகாரப் புணர்ச்சி அகங்காரமாய் எக்காளமிட்டது” என பாலியல் வன்புணர்ச்சியை இலக்கண நடையுடன் சொல்லிய பாங்கு முற்றிலும் புது முயற்சி.

 

பொருள் இலக்கணத்தை கொஞ்சம் நுட்பமாய் கற்றிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஒரு கவிதையில்,

 

”வக்கிரத்தின் உச்சத்தில்
சகரம் அளபெடுக்க
தீ கொளுந்துவிட்டு எரிகிறது

நெருப்பின் கோரப்பசிக்கு
இரு இளமொட்டுகள்
விருந்து சமைத்தன

பசியாறாத ஜென்மங்கள்
மீண்டும் பதுங்குகின்றன
வர்ண வேட்டையாட”

 

இதுவும் சாதி ஆதிக்கவாதிகளுக்கு எதிரான போர் முரசுதான். சகரம் அளபெடுக்கும்போது ‘ச’ என்பது ‘சா’ என நீளும். அடுத்த வரியில் தீ கொளுந்து விட்டு எரிகிறது என்கிறார். சாதீ என்பதை நயமான, மிக நுட்பமான குறியீடாகப் பதிவு செய்கிறார் கவிஞர்.

 

நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாமே இன்றைய நாளில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில்,

 

”கைக்கிளை
பெருந்திணை பெருகிவிட்டன
தண்டனைகள்
வாய்தா கேட்கின்றன”

 

என சமகால பிரச்னைகளை சாதுர்யமாக பதிவு செய்கிறார் மழயிசை.

 

சாதி ஆணவக்கொலைகள் கவிஞரை மிகவும் பாதித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல இடங்களில் ஆணவக்கொலை, சாதிக்கு எதிரான சாடல்களை கடுமையாக பதிவு செய்கிறார்.

 

”முளிதயிர்ப் பிசைந்த என்
காந்தள் மென்விரலை
ஒளிந்து பார்வையிட
நற்றாய் ஒழிய நயவஞ்சகர்
வந்தனர் போன்ம்
அறியாமையால் தலைவனுடன்
நாளங்காடிக்குச் செல்ல
எமதன்பு செம்புலப் பெயனீரானது
ஒள்வாள் கழுத்தினில் பாய
கணநேரத்தில் உயிர் பிரிந்தது
துடிதுடித்தது”

 

என்ற கவிதையை வாசிக்கும்போது முளிதயிர் பிசைந்த காந்தல் விரல்கள் கூர்வாளுக்கு இரையாகும் காட்சியாக கற்பனை செய்து பார்க்கும்போதே வாசகர்களுக்கும் உடல் வியர்த்துப் போகும்; படபடப்பு அதிகரிக்கும்.

 

தொல்காப்பியப் பெயர்த்தி என்ற முதல் நூலிலேயே நம்பிக்கைக்குரிய வரவாக பதிவு செய்திருக்கிறார் மழயிசை. அதேநேரம், செய்யுளைச் கற்றது (பக்.100), பிராகாசிக்க (பக்.86), பாறையிடுக்கள் (பக்.84), திண்கிறது (பக்.62), ஆராவாரிக்க (பக்.50), ரகலை (பக்.19) என ஆங்காங்கே எழுத்துப்பிழைகளும் உள்ளன. ஒரு கவிதையில் கயல் மீன்களின் ஓலம் எனக்குறிப்பிடுகிறார். கயல் என்றாலே மீன்தானே? அதென்ன கயல் மீன்? சில கவிதைகள் பக்க நிரப்பிகளாகவும் இருக்கின்றன. சில கவிதைகளில் தர்க்கப்பிழைகளும் உள்ளன.

 

எனினும், பெண்ணின் காமம், பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் பதிவு செய்யும் பெண் படைப்பாளர்கள் வெகு சிலரே உள்ள நிலையில், வாசிப்பை செழுமைப்படுத்துவதன் மூலமும், சமூகத்தை உற்று நோக்குவதன் மூலமூம் தமிழில் தனித்துவமான படைப்பாளுமையாக மிளிர்வதற்கு உண்டான அத்தனை அடையாளங்களும் மழயிசையிடம் இருக்கின்றன.

 

நூல்: தொல்காப்பியப் பெயர்த்தி (கவிதை)
ஆசிரியர்: மழயிசை
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.100

 

கவிஞரிடம் பேச: 99523 29320

 

– பேனாக்காரன்