Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா

சென்னைக்கு வந்த இந்த பத்து வருடங்களில் சென்னை என்றால் மாம்பலம், அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கேகே நகர், அசோக் நகர் ஆகிய நகரங்களைத்தான் நினைத்திருந்தேன். மீடியாக்கள் எனக்குள் அப்படித்தான் உருவாக்கி வைத்திருந்தன.

 

உண்மையான சென்னை என்றால் அதாவது பலகாலமாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை எதுவென்றால், இன்று வட சென்னை என குறிப்பிடப்படும் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, மூலக்கொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம், எழும்பூர் பகுதிகள்தான்.

அஜயன் பாலா

ஒரு படத்தின் கள ஆய்வுக்காக முதன்முறையாக வட சென்னை செல்ல நேர்ந்த போதுதான் அதிர்ந்து போனேன். சென்னையின் அசலான முகங்களையும் இருண்ட தெருக்களையும் அப்போதுதான் பார்க்கிறேன்.

 

மூன்று சக்கர பளுதூக்கும் வண்டியிலேயே குடும்பம் நடத்தும் மகிழ்ச்சியான குடும்பங்களையும், மீனவர் வசிக்கும் சகதி நிறைந்த குடிசைப்பகுதிகளையும், வட இந்தியர்களின் காம்பவுண்ட் போட்ட பங்களாக்களையும், துறைமுகத்தின் உயரமான கிரேன்களையும், வரிசையாக நகரும் டிரக் லாரிகளையும், ஆயிரக்கணக்கான படகுகள் ஒதுங்கியிருக்கும் பிரம்மாண்ட மீன்பிடி துறைமுகத்தையும், தொழிற்சாலைகளையும், நெரிசல் மிகுந்த மண்டிகளையும் கண்டு மிரண்டு போனேன்.

 

என்னை மிகவும் பாதித்த காட்சி, ராயபுரம் பாலம் மேலே வெளிச்சம் நிறைந்த வாகனங்கள் நகர, அடியில் வசித்த நிழல் மனிதர்களின் உலகம். இதுதான் உண்மையான மெட்ராஸ். காலம் காலமாக இவர்கள்தான் சென்னையில் வசித்து வந்தவர்கள். இதுநாள் வரை நான் பார்த்த மாம்பலம் முதல் தாம்பரம் வரையான பகுதி மக்கள், அறுபது எழுபதுக்குப் பிறகு சிப்பந்தி வேலைக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் குடிபெயர்ந்தவர்கள். தீபாவளி, பொங்கல் லீவுக்கு அரக்கப்பரக்க தங்கள் ஊர்களுக்கு ஓடி விடுபவர்கள். இந்த உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன். நான் அன்று பார்த்த உழைக்கும் வர்க்கத்தினர் பேசிய பாஷைதான் மெட்ராஸ் பாஷை என அழைக்கப்படுகிறது.

 

இந்த பாஷை உருவாக காரணம், ஆங்கிலோ இந்தியர்கள் நவாப் ஆளுகையின் கீழ் வாழ்ந்த உருது, அரபு, தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வட நாட்டிலிருந்து வந்தவர்கள், இவர்களின் பேச்சு மொழிக்கலப்பு, வெகுகாலத்திற்கு முன்பே இருந்து வந்திருக்கிறது. இந்த மெட்ராஸ் பாஷையை பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாக்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன் வரலாறை பார்ப்பதற்கு முன், சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்களுக்கான அர்த்தங்களைப் பார்ப்போம்.

 

சென்னை பாஷையில், உருதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலச் சொற்கள் அதிகமிருக்கும். காரணம், ஆங்கிலேயர்களிடம் கூலிகளாக வேலை செய்தவர்கள், அங்கு எஜமானர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வீட்டிலும் பயன்படுத்தினார்கள்.

 

அங்கு, ‘மேடம்… மேடம்…’ என பெண்களை அழைப்பதை சுருக்கி அவர்கள், ‘மேம் மேம்’ என அழைத்தனர். அதைப்பார்த்து இவர்கள், இங்கு வீட்டுப்பெண்களிடம் அப்படியே கூப்பிட, நாளடைவில் ‘இன்னாமே… போமே… வாமே….’ என்றானது. ‘அந்தாண்ட… இந்தாண்ட…’ அந்த எண்டிலிருந்து, இந்த ‘எண்ட்’ வரை என்பதுதான் சுருங்கி அந்தாண்ட, இந்தாண்ட என்றானது.

 

அஞ்சலை:

 

வழக்கமாக
வடசென்னையில்
அஞ்சலை என்ற பெயர்
பிரசித்தம். சூர்யா நடித்த
ஒரு படத்தில் அஞ்சலை…
அஞ்சலை… என்று
பாட்டே உண்டு.
அந்தப்பெயர் எப்படி
வந்தது என்றால்,
ஆங்கிலேயர்கள் வீட்டில்
மனைவியை ஏஞ்சல்… ஏஞ்சல்…
என்று கொஞ்சுவதில்
இருந்து உருவானது.

 

கம்னாட்டி:

 

‘ஹே நாட்டி கேர்ள்…’ என
ஆங்கிலத்தில் சிலர்
கொஞ்சுவதை பார்த்திருப்போம்.
இதுதான், எஜமான
விசுவாசமான குறும்புக்கார
வேலைக்காரர்கள்,
‘கம் நாட்டி பாய்’
என அழைக்க,
அதுவே காலப்போக்கில்
‘கம்னாட்டி’ என ஆனது.

 

‘போடா கஸ்மாலம்’
என்ற சொல் அடிக்கடி
புழக்கத்தில் இருந்தது.

 

‘கசியும் மலம்’ போன்ற
அருவருப்பானவனே
என்பதுதான்
கஸ்மாலம்.
உடான்ஸ், பீலா, டபாய்க்கிற,
கலாய்க்கிற, சோமாரி,
நாஷ்டா, டோமர் என
பல சொற்கள் சுவாரசியமாக
பயன்படுத்தப்பட்டு வருபவை.

 

‘பேமானி’ என்பார்கள்.
பேமானி என்பது,
அபிமானி என்ற சொல்லின்
எதிர்ப்பதம். அபிமானி
என்றால் நம்பத்தகுந்தவர்.
பேமானி என்றால் துரோகி.
பெரும்பாலும், இந்த சொற்கள்
உருது வழி வந்தவை.
இவற்றில் சில தூய
தமிழ்ச்சொற்களும்
அடங்கும்.

 

‘பன்னாடை’, ‘குந்து’
போன்றவை அவற்றில் சில.
‘சர்தான் சித்த நேரம்
குந்து மே’ என்பார்கள்.
உட்காரச் சொல்வதைத்தான்
குந்து என்கிறார்கள்
என்பது நாம் அனைவரும்
அறிந்த விஷயம்.
அது எப்படி உருவானதென்றால்
நாற்காலி போன்ற இருக்கைகள்
உருவாகாத காலத்தில்
நின்று கொண்டே பேசும்
விருந்தாளிகளை,
‘குந்தியிருங்கள்’ என
சொல்ல ஆரம்பித்தனர்.

 

இதன் உண்மையான
சொல், ‘குண்டியிரு’.
‘குண்டியால் இரு’
என்பதன் அர்த்தம் இது.
நாளடைவில் மருவி,
குந்தியிரு என்பதாகி
பின் குந்துவாகி விட்டது.
இதைத்தான் நமது
பாவேந்தர் பாரதிதாசன்,
‘காற்று குந்திச் சென்றது;
மந்தி வந்து குந்தி’ என்று
குந்து, குந்தி என்ற சொற்களை
அழகாக தனது கவிதைகளில்
பயன்படுத்தி இருப்பதைக்
காணலாம்.

 

‘பன்னாடை’ என்பது
இயற்கை வடிகட்டி.
தென்னங்கள்ளை இறக்கும்போது
அதில் இருக்கும் புழுக்கள்,
தூசி தும்புகளை வடிகட்டப்
பயன்படுத்துவது வழக்கம்.
அது கெட்ட விஷயங்களை
எடுத்துக்கொண்டு,
நல்ல விஷயங்களைக் கீழே
விடுவதால் அதுபோல
கெட்ட விஷயங்களை மட்டும்
எடுத்துக் கொள்பவனை
பன்னாடை என
திட்டுவது வழக்கம்.

 

தமிழ் சினிமாவைப்
பொருத்தவரை
மெட்ராஸ் பாஷை என்பது
நகைச்சுவை நடிகர்களால் தான்
அதிகம் பேசப்பட்டு வந்தது.
அது கிண்டலுக்குரிய பாஷையாக
தமிழ் சினிமாவில் உலவி வந்தது
மிகுந்த ஆச்சர்யமான ஒன்று.
சினிமாவின் கர்ப்பக்கிரகமாக
சென்னை இருக்கும் போதே,
சென்னை பாஷை ஏதோ
அன்னியமாக வேற்றுக்கிரக
பாஷை போல உருவாக்கம்
கண்டது ஆச்சர்யம்தான்.

 

பொதுவாக தமிழ் சினிமாவில் பேசப்படும் பேச்சுமொழி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த மாவட்ட மொழியில் மட்டும்தான் குறைந்த வட்டார வழக்குகள் பயன்படுத்தப்பட்டு, பொது தமிழில் பெரும்பாலான சொற்கள் அமைந்திருக்கின்றன.

ஆரம்பக்கால சினிமாக்களில் புராணக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிறகு அடுக்குமொழி, இலக்கிய நடை வசனம் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தஞ்சையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஆதிக்கம் சினிமாவில் அதிகரிக்கத் துவங்கியது. திருவாரூரில் இருந்து மட்டும் கலைஞர் கருணாநிதி, தங்கராசு, ஆரூர்தாஸ் ஆகிய மூவர் ஐம்பதுகளில் கொடிகட்டிப் பறந்தனர்.

 

இப்படி ஜனரஞ்சக சினிமாவாக, சினிமா எழுச்சி பெற்ற காலக்கட்டத்தில் தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக மெட்ராஸ் பாஷை சினிமாவில் புழங்கத் துவங்கியது.

 

மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னை பாஷையில் சில சொற்றொடர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றையும் இதற்கான உண்மையான அர்த்தங்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

 

என்.எஸ்.கிருஷ்ணன் தான் நகைச்சுவைக்காக மெட்ராஸ் பாஷையை பயன்படுத்திய முதல் நடிகர். தனது ‘கிந்தனார் காலட்சேபத்தில்’ மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்தும் விதமாக இப்படிக் கூறுவார்.

 

”மதராஸ்ல ரிக்ஷாக்காரங்களுக்குனுத் தனியாக ஒரு பாஷை உண்டு. ஒருத்தன் கேட்பான்… ‘இன்னா நைனா நேத்து உன்னே காணும்…?’ என்று. அதற்கு, ‘உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுக்கிச்சு!” என்பார். அதாவது, ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள். இப்படி என்.எஸ்.கே.வுக்குப் பின்னர் சினிமாவில் மெட்ராஸ் பாஷையை அதிகம் பயன்படுத்தியவர் சந்திரபாபு. இவருடைய பூர்வீகம் தூத்துக்குடி. ஆனால் பெரும்பாலும் மெட்ராஸ் பாஷைதான் படங்களில் பயன்படுத்தி வந்தார்.

 

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ம் ஆண்டு உருவான ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில்தான் முதன்முதலாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார். ‘மணிக்கொடி’ இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையா எழுதியிருந்த நாடகம் தான் போலீஸ்காரன் மகள். இப்படத்தில் சந்திரபாபு, மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு.

ஸ்ரீதரின் ஆஸ்தான எழுத்தாளரான கோபு, சென்னையை பூர்வீகமாக கொண்டவர். போலீஸ்காரன் மகள் படத்தில் சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்ததற்கு முதல் நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, ”கோபு ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?” என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார்.

 

அதற்கு கோபு, ‘திர்லகேணி வாத்தியாரே!’ என்று மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார். ”ஆங்… அதான் பார்த்தேன்… பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது!’ ”மதராஸ் பாஷை பிறந்ததே, ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்ஷா ஸ்டேண்டுலதான். அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?” என்று கேட்டார் சந்திரபாபு.

 

‘சபாஷ் மீனா’ படத்தில், ”இன்னாடா இது பேஜாரா போச்சு… இன்னாடி எப்ப பார்த்தாலும் ராங் பன்ற நீ” என சந்திரபாபு அவ்வப்போது மெட்ராஸ் பாஷை பேசுவார். அதைத் தொடர்ந்து அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார், சோ.

 

1968ம் ஆண்டு சோ – மனோரமாவுடன் சேர்ந்து நடித்த ‘பொம்மலாட்டம்’ படத்தில், முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷையை அடிப்படையாக வைத்து ‘வா வாத்யாரே வூட்டாண்ட’ எனும் பாடலை பாடி ஆடி நடித்திருப்பார்கள். வி.குமார் இசையில், வாலி எழுதிய இந்தப்பாடல் இன்றும் பிரபலம்.

 

சோவுக்கு பிறகு தேங்காய் சீனிவாசன். ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டுநராக வரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை செம லோக்கலாக மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுவுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன். அவர் தன்போல புதுப்புது வார்த்தைகளை உருவாக்குவதிலும் வல்லவராக இருந்தார். இந்த வரிசையில் ஏனோ நாகேஷ் மட்டும் சென்னை பாஷையில் பேசி நடிப்பதில் அவ்வளவாக சோபிக்கவில்லை.

 

சென்னை நகர அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் படமான ‘பசி’ படத்தின் உரையாடல்கள் முழுக்கவும் மெட்ராஸ் பாஷையில் உருவானதுதான். இப்படத்தில் நடித்த ‘பசி’ சத்யா, தொடர்ந்து பல படங்களில் சென்னை குடிசைப் பகுதி பெண்ணாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார். சுருளிராஜன் படங்களில் பெரும்பாலும் மெட்ராஸ் பாஷை இருக்கும். அவர் கிராமத்தானாக நடித்தாலும் மெட்ராஸ் பாஷைதான் பேசுவார்.

 

சினிமாவில் உண்மையில் மெட்ராஸ் பாஷையை பிரபலமாக்கியவர், ‘லூஸ்’ மோகன். கண்களை அடிக்கடி சிமிட்டிக்கொண்டு முகத்தை அஷ்ட கோணலாக்கி மெட்ராஸ் பாஷை பேசி நம் மனதைக் கவர்ந்தவர் சிரிப்பு நடிகர் ‘லூஸ்’ மோகன். அவர் பேரைச் சொன்னாலே மெட்ராஸ் பாஷை ஞாபகத்திற்கு வரும்.

 

‘இன்னா பயண்ட்டியா? நான் ஆர் தெரிமா…?’ என ஒருபக்கம் உடலை சாய்த்துக்கொண்டு பேசியது தனி அடையாளமானது. ‘லூஸ்’ மோகனின் மெட்ராஸ் பாஷை மூலம் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் அவரைப்போல பேசவும், செய்து பார்க்கவும் பழகினர். இவர் தந்தை ‘லூஸ்’ ஆறுமுகம். அவரும் திரைப்பட நடிகரே. கடைசியாக நடித்த படம், தங்கர்பச்சானின், ‘அழகி’. இதில் நடிகர் பாண்டுவின் தந்தையாக நடித்திருந்தார்.

 

நாயகர்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த முதல் நடிகர், கமல்ஹாசன் தான். ‘சட்டம் என் கையில்’ படத்தில் முழுவதும் கமல், மெட்ராஸ் பாஷை பேசியிருப்பார். அதற்காக, ‘லூஸ்’ மோகன்தான் கமலுக்கு பயிற்சி அளித்தார்.

 

திருட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மற்றொரு படமான ‘சவால்’ முழுவதும் மெட்ராஸ் பாஷையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் கூடுதலாக மனோரமா, பர்மா பாப்பா எனும் பெயரில் மெட்ராஸ் பாஷையில் பேசி கலக்கியிருப்பார்.

 

பர்மா அகதிகள் பலர் சென்னை வியாசர்பாடியில் தஞ்சமடைந்து தனி காலனியை உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையும், கலாச்சாரமும் சென்னையோடு கலந்து இன்னொரு பரிமாணத்தை உருவாக்கியது. பர்மா பாப்பா பாத்திரத்தில் நடித்த மனோரமா அதை பிரதிபலித்தார்.

 

‘சிட்டி ஆப் காட்’ என்ற
பிரேசில் திரைப்படம்
இக்காலத்தில் கோடம்பாக்கம்
உதவி இயக்குநர்களிடையே
மிகப்பிரபலமாக்கி
கொண்டிருந்ததும்,
இந்த திடீர் வடசென்னை
சார்ந்த படங்கள் அதிகம்
வர மிக முக்கிய காரணம்.
இதுபோன்ற விளிம்புநிலை
மக்கள் அதிகம் வசிக்கும்
பகுதிகளில் குற்றவாளிகள்
எப்படி உருவாகின்றனர்
என்பதுதான் அந்த பிரேசில்
படத்தின் கதை.
வடசென்னையின் குறிப்பிட்ட
பகுதிகள் அந்த கதைக்களனுக்கு
மிகவும் பொருந்தி வந்ததால்
பலரும் இதை சினிமாவாக்கக்
களமிறங்கினர்.

 

இதில் ஓரளவு பேசப்பட்ட படம் செல்வராகவனின், ‘புதுப்பேட்டை’. இப்படம் வாழ்வியலைவிட பெரிதும் நாயக பிம்பம் சார்ந்து புழங்கியதால் சென்னை பாஷை ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னை நகரின் குற்றப்பின்னணி கொண்ட வாழ்க்கையின் யதார்த்த உலகு, முதன்முறையாக அதன் குரூர உலகத்துடன் பதிவானது. இதே காலக்கட்டத்தில் உருவான ‘சென்னை – 28’ சென்னையின் இன்னொரு முகத்தை கிரிக்கெட் பின்புலத்தோடு காட்டப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னையின் நடுத்தர இளைஞர்களின் வாழ்க்கையாக இப்படம் அமைந்த காரணத்தால் இதிலும் சென்னை பாஷை பிரதானமாகப் பயன்படுத்தப்படவில்லை.

 

இந்த வரிசையில் வாழ்வியல்
அடிப்படையிலும், மொழி
அடிப்படையிலும் ஓரளவு
‘பொல்லாதவன்’ படம் ஓர்
உச்சத்தைத் தொட்டது.
இதிலும் ரவுடி வாழ்க்கை என்ற
குறைதான் என்றாலும்
வில்லனாக நடித்த கிஷோர்,
பாதி ஆங்கிலம் கலந்த
சென்னைத் தமிழ் பேசும்போது
யதார்த்தம் பிரதிபலித்தது.
அதுகூட முழுமை இல்லை.
வில்லன் பாத்திரப் படைப்பில்
மட்டும்தான். ஆனால்
மெட்ராஸ் பாஷையின்
உச்சம் என்றால் அது ரஞ்சித்தின்,
‘அட்டக்கத்தி’ மூலமாக
நிகழ்ந்தது.

 

அட்டகத்தி,
சென்னையின் புறநகர் பகுதி
தலித் நாயகனாக சித்தரிக்கப்பட்ட
காரணத்தால் அவர்களது
குடும்ப வாழ்வை மிக
யதார்த்தமான சித்தரிப்புடன்
பதிவு செய்வதில் வெற்றி பெற்றது.
வாழ்வியல் சித்தரிப்பு
வந்தாலே பேசும் பாஷை
யதார்த்தமாக அமைந்து விடும்.

 

அந்த வகையில்
அட்டகத்தியில் நாயகன்,
சென்னைத் தமிழை அசலாக
பேசிய நாயகன் வெறும்
மொழி என்பதைக் கடந்து,
உள்ளும் புறமுமாக வடசென்னை
மக்களின் வாழ்க்கையை
அதன் அழகை செதுக்கிய
பெருமை ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’
படத்தையே சாரும்.
அட்டகத்தி போலவே இதிலும்
நாயகன் குடும்ப வாழ்க்கையின்
யதார்த்தமும் பேச்சு மொழியும்
மிக உயிரூட்டமாய்
அமைந்திருந்தது.

 

கால் பந்தாட்டம்,
சுவர் ஓவியம் என சென்னை
குடிசைமாற்று வாரிய குடியிருப்பு
பகுதி மக்களின் வாழ்க்கை
தத்ரூபமாக பதிவு
செய்யப்பட்டிருந்தது.
அசலான சென்னை பாஷை
பேசிய முதல் நாயகி
இப்படத்தின் கேதரின் தெரஸாதான்.
‘என்னை கல்யாணம்
பண்ணிக்கிறீயா…?’
‘அய்ய வாயேன்…’ எனும்
அவருடைய இயல்பான
பேச்சுமொழி அனைவரையும்
வசீகரித்தது.

 

இதுவரை வந்த சென்னை வாழ்வியல் படங்களில் அதே போல, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் டேனி பேசும், ‘பிரண்டூ பீல் ஆயிடாப்ல’ வசனம் மிக பிரசித்தம். இதிலும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதி வாழ்க்கைதான். விஜய் சேதுபதி தன் உடல்மொழியால் சென்னை இளைஞனாக வாழ்ந்து காட்டியிருந்தார்.

 

நகைச்சுவை, கேலி, கிண்டல் என்ற பொழுதுபோக்கு அளவில் மட்டுமே இருந்த சென்னை வாழ்க்கையை… மொழியை… அழகியலாக்கி, அதை கலையாக்கிய பெருமை ரஞ்சித்துக்கு சேரும் என்றால், அதை கலாச்சார அதிர்ச்சிக்கு ஆளாக்கி பொது சமூகத்தை உறைய வைத்த பெருமை வெற்றிமாறனையே சேரும்.

 

சமீபத்தில் வெளியான
‘வடசென்னை’,
மெட்ராஸ் பாஷையை
மட்டுமின்றி அவர்களுடைய
உயிரூட்டமான இருண்ட
வாழ்வை அவர்களுக்கே
உரிய கெட்ட வார்த்தைகளுடன்
இன்னொரு யதார்த்தத்தை
பிரதிபலித்தது. ஆங்கிலத்தில்
‘டிக்ஷன்’ எனப்படும் அசலான
மெட்ராஸ் பாஷை,
உச்சரிப்பு இப்படத்தில்தான்
மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டது.

 

முழுக்க இப்படம் சென்னை வாழ்க்கை அல்லாமல் காசிமேடு பகுதியை ஒட்டிய கடற்கரை மீனவ குப்பத்தில் அடிதடி, கொள்ளை, கொலை ஆகிய குற்றப்பின்னணி கொண்ட இரண்டு ரவுடி கும்பலின், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையை சுற்றி 1987 முதல் 2006ம் ஆண்டு வரையிலான வாழ்க்கையை மிக துல்லியமாக பதிவு செய்தது இந்தப்படம்.

 

(எழுத்தாளர் அஜயன் பாலா, ‘பேசும் புதிய சக்தி’, செப். 2019 இதழில்)