Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

”அடடடடா….உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க…”

”நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல…” இதுபோல இன்னும் நிறைய.

இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, ‘அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)’ பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம்.

இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், ‘ADHD’. தமிழில், ‘கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு’.

குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள ‘டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்துவமனை’யின் மனநல மருத்துவர் பி.சுவீதா விரிவாக பேசினார்.

கவனக்குறைவு, கவனச்சிதறல், அதிசெயல்பாடு, யோசனையற்ற செயல் ஆகியவற்றின் கூட்டு கோளாறுகள்தான், ஏடிஹெச்டி. மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவால் இப்பிரச்னை உண்டாகிறது.

குழந்தைகளிடம் 7 வயதுக்கு முன்பே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்துவிட முடியும். 20 முதல் 30 சதவீத குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி குறைபாடு இருக்கலாம். பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகம்.

பள்ளி, வீடு, நண்பர்கள் வட்டாரம் மட்டுமின்றி, பரம்பரை மரபணு குறைபாடுகள் காரணமாகவும் ஏடிஹெச்டி பாதிப்பு வரலாம். இப்பிரச்னை உள்ள குழந்தைகள் பொதுவாக, ஒரு இடத்தில்கூட நீண்ட நேரம் உட்கார மாட்டார்கள்.

நாம் சொல்வதை எதையும் காது கொடுத்து கவனமாக கேட்கமாட்டார்கள். அவர்களே திடீரென்று முன்பின் யோசிக்காமல் எதையாவது செய்து விடுவார்கள். என் பையன் ‘துறுதுறு’னு இருக்கான்னு சொல்வார்கள் அல்லவா? அது, ஏடிஹெச்டி விளைவுதான்.

முதல்கட்டமாக மருந்து, மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். பின்னர், பிரச்னைக்குரிய குழந்தைகளின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

ஏடிஹெச்டி குறைபாடு உள்ள குழந்தைகளிடம், ‘நீ அதைச் செய்யாதே. இதை செய்யாதே’ என கட்டளையிட முடியாது. அப்படி செய்தால் அது வேறு விதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், அவர்களிடம் ஒரு வேலையை குறித்த நேரத்தில் முடித்தால் ‘கிஃப்ட்’ தருகிறேன் எனக்கூறலாம். அவர்கள் டிவி விரும்பிப் பார்ப்பார்கள் எனில், சொன்ன வேலையைச் செய்து முடித்தால் டிவி பார்க்க அனுமதிக்கலாம். இதுபோன்ற அணுகுமுறைகளில்தான் ஏடிஹெச்டி குழந்தைகளை வழிக்குக் கொண்டுவர முடியும்.

இதுமட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகளிடம் மன அழுத்தம், கற்றலில் குறைபாடு போன்ற பிரச்னைகளும் பரவலாக உள்ளன. தேர்வு நேரத்தில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்டு நிறைய குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

பள்ளிகளில் குழந்தைகளிடம் இயல்புக்கு மீறிய விஷயங்களை திணிக்கும்போது கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

சில குழந்தைகள் விளையாட்டு, கலைகள், கண்டுபிடிப்புகள் என தனித்திறன்களுடன் (ஐ.கியூ.) இருப்பார்கள். ஆனால், படிப்பில் சுமாராக இருப்பார்கள். அவர்களுக்கு, படி….படி… என்று அழுத்தம் கொடுக்கும்போது, பள்ளியை வெறுக்க தொடங்கி விடுவார்கள். ஏதேதோ காரணம் சொல்லி, பள்ளிக்குச் செல்வதையே தவிர்ப்பார்கள்.

பெற்றோரும், ஆசிரியர்களும் பலர் முன்னிலையில் பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும், அவர்களை மனதளவில் காயப்படுத்தும். படிப்பு முக்கியம். அதேநேரம், அவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால், அதில் முன்னேறவும் வாய்ப்புகள் உள்ளன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புறச்சூழல்கள் மட்டுமின்றி வீட்டில் அடிக்கடி சண்டையிடும் பெற்றோர்கள், மதுப்பழக்கம் உள்ள அப்பா போன்ற தவறான நடத்தை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன.

அதேபோல் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை, முதலில் ஆசிரியர்கள் கண்டறிந்து, அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், அனைத்துப் பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

ஸ்வீட் ஆக சொல்லி முடித்தார் மனநல மருத்துவர் சுவீதா.

//செல்போன் : வன்முறையின் வழிகாட்டி//

”’பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும் வரை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித் தருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிறு வயதிலேயே அவர்களுக்கு செல்போன் வாங்கித் தருவதால், அதற்கு அவர்கள் அடிமையாகிவிடும் ஆபத்தும் உண்டு.

எப்போதும் செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதும், அதைக் காணாதபோது எரிச்சல் அடைவதுமான குணங்கள் இருந்தால் அவர்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டார்கள் என புரிந்து கொள்ளலாம்.

செல்போனில் வரும் வீடியோ கேம்களால் குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் உண்டாகிறது. பல சிறுவர்கள், ஆபாச வீடியோக்களை பார்க்கும் அபாயமும் இருக்கிறது.

அதனால் செல்போனை தவிர்த்து, பெற்றோருடனும், உறவினர்களுடன் கலந்து பழக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்,” என்கிறார் சுவீதா.

தொடர்புக்கு: 0427-2267625, 98947 91272, 90034 88463.

 

சந்திப்பு: அகராதி