Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

அய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிப்பில் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் ஒருவழியாக இன்று (டிசம்பர் 29, 2017) வெளியாகி இருக்கிறது ‘களவாடிய பொழுதுகள்’.

நடிப்பு: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சிறுமி ஜோஷிகா மற்றும் பலர்; இசை: பரத்வாஜ்; இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: தங்கர் பச்சான்.

கதைக்கரு: உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேரிடுகிறது. காதலன் வேறு பெண்ணையும், காதலி வேறு ஆணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே களவாடிய பொழுதுகள் படத்தின் மையக்கதை.

களவாடிய பொழுதுகள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கடந்த 2010ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. எனினும், பல தடைகளைத் தாண்டி ஏழு ஆண்டுகள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. பாடல்கள், நாயகன், நாயகியின் உடலமைப்புகள் இப்படி எல்லாமே கால தாமதத்தை உணர வைக்கின்றன.

‘அழகி’ படத்திற்காக அரைத்த மாவில் மிஞ்சியதில் இருந்து களவாடிய பொழுதுகளையும் சமைத்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

பொற்செழியனும் (பிரபுதேவா), ஜெயந்தியும் (பூமிகா) ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இருவரும் காதல் கொள்கின்றனர். பிரபுதேவா, சாதாரண ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பூமிகா, அதற்கு நேர்மாறாக வசதியான குடும்பத்துப் பெண். இந்த பொருளாதார இடைவெளி போதாதா காதலைப் பிரிக்க? அதே இலக்கணப்படி பூமிகாவின் தந்தை ஒரு சூழ்ச்சி செய்து, காதலர்களைப் பிரித்து விடுகிறார்.

தந்தையின் வற்புறுத்தல், கெஞ்சல் காரணமாக பூமிகா தொழில் அதிபரான பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொள்கிறார். பிரபுதேவாவும், இன்பநிலாவை கரம் பிடிக்கிறார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது.

டாக்ஸி டிரைவர் வேலை; மாதந்தோறும் டாக்ஸிக்கு தவணை, வீட்டுக்கு மளிகை சாமான், குழந்தையின் படிப்பு, மனைவியின் எதிர்பார்ப்புகள், குழந்தையிடம் கரைந்து போகும் மனசு என கீழ்நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக, நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவராக பிரபுதேவா தனது பாத்திரம் உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்.

இப்படியும்கூட பிரபுதேவாவால் நடிக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று. அவருக்கு மட்டுமல்ல; அவருடைய ரசிகர்களுக்கும் பிரபுதேவா புதிய அனுபவத்தைக் கொடுத்திருப்பார்.

ஒரு பயண வழியில் நிகழும் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் பிரகாஷ்ராஜ். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார் பிரபுதேவா. தகவல் அறிந்து, பதற்றத்துடன் துடித்தபடி மருத்துவமனைக்கு வருகிறார் பூமிகா. விபத்தில் சிக்கியவரின் மனைவிதான் பூமிகா என்பதை அப்போது தெரிந்து கொள்கிறார் பிரபுதேவா.

அவர் எங்கே தன்னைப் பார்த்து விடுவாரோ என்ற பதற்றத்தில் அவருக்கே தெரியாமல் மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்று விடுகிறார் பிரபுதேவா. ஒருகட்டத்தில் பூமிகாவும், பிரபுதேவாவும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்கின்றனர். வறுமையில் அவர் குடும்பம் கஷ்டப்படுவதை அறிந்து, உள்ளம் குமுறுகிறார் பூமிகா.

இதற்கிடையே, உயிரைக் காப்பாற்றிய பிரபுதேவாவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார் பிரகாஷ்ராஜ். தன்னைச் சந்திக்க வருமாறு பிரகாஷ்ராஜ் பலமுறை அழைத்தும், சுய கவுரவம் கருதி அவரை சந்திக்காமல் தவிர்க்கிறார் பிரபுதேவா.

முன்னாள் காதலனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பூமிகா, அவருடைய மனைவி மூலம் சில உதவிகளைச் செய்ய முன்வருகிறார். அதையும் பிரபுதேவா தவிர்த்து விடுகிறார். பிறகு மனைவியின் கட்டாயத்தின்பேரில் பிரகாஷ்ராஜின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் பிரபுதேவா.

அன்பான கணவனுக்கு துரோகம் செய்ய முடியாமலும், கண்ணெதிரே வந்துவிட்ட முன்னாள் காதலன் மீதான காதலை ஒளித்து வைக்க முடியாமலும் ஊசலாடும் மனப்போராட்டத்தை மிக அழகாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் பூமிகா. இத்தனை திறமையான நடிகையை தமிழ்த்திரையுலகம் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்தான்.

அடுத்து, பிரகாஷ்ராஜ். ‘அபியும் நானும்’ படத்திற்குப் பிறகு இந்தப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு பிரகாஷ்ராஜை பிடிக்காமல் போகாது. அலட்டல், ஆரவாரம் இல்லாத அவருடைய நடிப்பு, ‘செம!’. விபத்தில் சிக்கிய தன்னை காப்பாற்றியவன்தான் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்ற உண்மை தெரிந்த பின்னர், அவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

பிரபுதேவாவின் மனைவியாக வரும் இன்பநிலா, வசதியாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்தையும், டாக்ஸி ஓட்டுநருக்கு வாழ்க்கைப்பட்டால் இப்டித்தான் என்ற மனப்போராட்டத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் என மூன்று மையப் பாத்திரங்களைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. கஞ்சா கருப்பின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை.

பாடல்களை வைரமுத்துவும், அறிவுமதியும் எழுதியிருக்கின்றனர். பாடல்களில் தூய தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ‘சேரன் எங்கே சோழன் எங்கே….’ பாடல், உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது.

படத்தில் ஒரே ஒரு காட்சியில் மே தின விழாவில், பெரியார் வேடத்தில் சத்யராஜ் வருகிறார். ஒரு நடிகனின் ஆளுமையை உணர்த்த ஒரு காட்சி போதுமானது. அதற்கு சத்யராஜின் பாத்திரம் ஒரு சான்று.

படத்தின் ஆகப்பெருங்குறையாக மிகவும் மெதுவாக பயணிக்கும் திரைக்கதையைச் சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாகவே வேகமான திரைக்கதையைப் பார்த்து, லயித்த இளம் ரசிகர்களுக்கு இந்தப்படத்தின் கதை சொல்லல் பாங்கை எந்தளவுக்கு ரசிப்பார்கள் என்பது சந்தேகம்தான்.

பின்னணி இசையும் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. பாடல்களில் செலுத்திய கவனம், பின்னணி இசைக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒளிப்பதிவும்கூட ரொம்பவே சுமார்தான்.

அழகி வெளியானபோது, அந்தப்படம் ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ என பேசப்பட்டது. அதேபோன்ற தாக்கத்தை களவாடிய பொழுதுகளிடம் எதிர்பார்க்க முடியாது. எனினும், காதலித்தவர்கள், மூத்த ரசிகர்களின் மனதில் இந்தப்படம் சில நினைவுகளை அசைபோட வைக்கும் என்று சொல்லலாம்.

– வெண்திரையான்.