Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்!

சில நேரங்களில் சினிமா காட்சிகளை விடவும்,
நிஜ உலகின் நிகழ்வுகள் கொடூரமானவையாக
இருக்கும். கடந்த 2007ல், சரத்குமார், ஜோதிகா
நடிப்பில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற படம்
வெளியானது. அந்தப்படத்தில், அப்பாவி அல்லது
சபலிஸ்ட் ஆண்களை குறிவைத்து, அவர்களிடம்
அனுசரணையாக பேசி, ஒருகட்டத்தில்
காமத்திற்கு தூண்டில்போட்டு,
பணம் பறிக்கும் மோசடி பெண்
வேடத்தில் அசத்தியிருப்பார்
ஜோதிகா.

 

கடந்த 2017ல் கலையரசன் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்‘ படத்திலும்கூட அதன் நாயகி ஷிவதா, பார்வையற்ற வசதிடான இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் வரும் இதுபோன்ற காட்சிகள் திரில்லர் தன்மையுடன் இருந்தாலும், நிஜத்தில் நடக்கும்போது அதன் இழப்பும், மனவலியும் ஈடு செய்ய இயலாததாகி விடுகிறது.

கிட்டத்தட்ட ‘பச்சைக்கிளி முத்துச்சரம்‘, ‘அதே கண்கள்‘ படங்களின் நாயகிகளைப்போலவே சேலத்திலும் ஒரு பெண், அப்பாவி இளைஞர்களுக்கு கா(ம)தல் வலை விரித்து, லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள தகவல்கள் தற்போது அம்பலமாகி உள்ளன.

 

கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35), பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தற்போது வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் தேடலில் இறங்கியிருக்கிறார். பாலமுருகனின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்த நிலையில், அவரே வரன் தேடி தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

 

அந்த மேட்ரிமோனியல் தளத்தில் பாலமுருகனின் புகைப்படம் மற்றும் தொழில், வருமானம் குறித்த விவரங்களைப் பார்த்த, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மேனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், அவருடைய செல்போன் எண்ணுக்கு தன்னுடைய எண்ணில் இருந்து, ‘உங்கள் புரஃபைல் விவரங்கள் பிடித்திருக்கிறது. பேசலாமா?’ என்ற கேள்வியுடன் பதிலை தட்டிவிட, பாலமுருகனும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

கடலூர் பாலமுருகனுடன் மேனகா…

மூன்றாவது நாளிலேயே மேனகா, தன் தம்பி ஒரு பொம்பள பொறுக்கி. அப்பா இல்லாத எனக்கும், அம்மாவுக்கும் அவன்தான் துணையாக இருப்பான் என்று இருந்தோம். ஆனால் அவன் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் ஊரைச்சுற்றி எக்கச்சக்கமாக கடன் வாங்கி வைத்துவிட்டான்,’ என்றெல்லாம் அழுது புலம்பினார். போதாக்குறைக்கு, ‘சாப்டீங்களா? உங்க வீட்ல எல்லோரும் சவுக்கியமா?’ என்ற நலம் விசாரிப்புகளும் மேனகா தவறாமல் விசாரித்துவிட்டுத்தான் புலம்பத் தொடங்கியுள்ளார். ‘ஏனோ தெரிய பாலா… உங்களிடம் என் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழணும்னு தோணுது பாலா,’ என்றும் பாலமுருகனின் நெஞ்சைத் தொட்டிருக்கிறார்.

 

”ச்சே! முன்பின் தெரியாத நம்மை நம்பி ஒரு பெண் அவளுடைய பர்சனல் லைப் பத்தியெல்லாம் சொல்கிறாளே… நம்மையும், குடும்பத்தைப் பத்தியும் அக்கறையாக விசாரிக்கிறாளே என்று எண்ணிய பாலமுருகன், ஒருகட்டத்தில் மேனகாவின் செல்போன் அழைப்புக்காகவே காத்திருக்க ஆரம்பித்துவிட்டார். அவரும், தினமும் இரவு எட்டரை மணியளவில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

 

எறும்பு ஊற கல்லே தேயும்போது களிமண் பாலா, மேனகாவின் வாஞ்சையான பேச்சில் கரைந்தே போனார். தந்தையை இழந்த பெண்; தன் மீது பாசம் காட்டுகிறாள் என்பதால், அவரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தார் பாலமுருகன். மேட்ரிமோனியல் தளத்தில் மேனகா, தான் கோவையில் உள்ள அம்பாள் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும், எம்பிஏ படித்திருப்பதாகவும், 5 லட்சம் ஊதியம் என்ற விவரங்களையும் பதிவு செய்திருந்தார். இந்த விவரங்களும், பாலமுருகனுக்கு மேனகா மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

சென்னை கணபதியுடன்…

இந்த நிலையில்தான், மேனகா தன் குடும்ப கஷ்டங்களைச் சொல்லி என்னிடம் அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்தார் என்கிறார், பாலமுருகன். அதன்பின் நடந்ததை அவரே நம்மிடம் விவரமாகச் சொன்னார்.

 

”நாங்கள் பேச ஆரம்பித்த சில நாள்களிலேயே மேனகா, தன் சொந்த விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். அன்பாக நலம் விசாரிப்பார். திடீரென்று இரவு 8.30 மணிக்கு போன் பண்ணி, ‘எனக்கு என்னமோ உங்ககிட்ட என் கஷ்டத்தையெல்லாம் சொல்லி அழணும்னு தோணுது பாலா,’ என்பார். ‘என் தம்பி டெக்ஸ்டைல் ஃபேக்டரி ஆரம்பிச்சு 16 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திட்டான்,’ என்றெல்லாம் அழுதுகிட்டே சொல்வார். இதெல்லாம் அவள் மீது எனக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 

ஒருநாள் அவரைத்தேடி, கோவையில் மேனகா பணியாற்றி வந்த அம்பாள் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சென்றேன். அவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற சாதாரண பணியில் இருப்பதும், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதும் தெரிய வந்தது. அவர் மேட்ரிமோனியல் பக்கத்தில் ஃபோர்டு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், ஆண்டுக்கு 5 லட்சம் சம்பளம் என்றெல்லாம் பதிவிடப்பட்டு இருந்தது பற்றி கேட்டேன். ஏதோ கவனக்குறைவாக அப்படி பதிவு செய்துவிட்டதாக சமாளித்தார். அவரை எனக்குப் பிடித்துப்போனதால், அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கரூர் சிவக்கொழுந்துடன்…

திடீரென்று ஒருநாள் தான் 4000 சதுர அடி நிலம் வாங்கி இருப்பதாகவும், அதனால் கடன் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கடனை அடைத்தால்தான் நாம் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று புலம்பினார். பிறகு ஒருமுறை தம்பியால் கடன் ஏற்பட்டு விட்டதாகவும் சொல்வார். அவர் இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவருக்கு பலமுறை பண உதவி செய்திருக்கிறேன்.

 

நாங்கள் பழக ஆரம்பித்த இரண்டே
ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம்
ரூபாய்க்கு மேல் 450 செட் உயர்ரக
சுடிதார்கள், உள்ளாடைகள், சேலைகள்
வாங்கி கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமின்றி
தங்க சங்கிலி, வைர தோடு, வைரக்கல்
பதித்த சங்கிலி வாங்கி தந்தேன்.
எல்இடி டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர்
என வீட்டுக்குத் தேவையான அனைத்துப்
பொருள்களும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
இதெல்லாமே எனது வருங்கால மனைவிக்குத்தானே
செய்கிறேன் என்று கருதியதால்,
அப்போது இவை தவறாக எனக்குத்
தெரியவில்லை.

 

இந்நிலையில்தான், கோவையில் இருந்து
அவர் சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகச்
சொல்லி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அங்கே சேர்ந்த நாள் முதல் பூந்தமல்லியைச்
சேர்ந்த கணபதி என்பவரை தனது மாமா
மகன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர்தான் அடிக்கடி மேனகாவை அவர்
தங்கியிருக்கும் விடுதியில் இருந்து
அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டு
சென்று விடுவார் என்பதால், மேனகாவுக்கு
தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படியும்,
வாகன செலவுக்காகவும் கணபதியிடம்
பணத்தைக் கொடுத்துவிட்டு வருவேன்.

 

ஆனால், மேனகா தனது மாமா
மகன் என்று சொல்லிவிட்டு கணபதியுடன்
ஷாப்பிங் மால், ஹோட்டல், பீச் என்று
பல இடங்களில் நெருக்கமாக ஒன்றாக
சுற்றியதை சென்னையில் உள்ள நண்பர்கள்
மூலம் தெரிய வந்தது. கடந்த 2018 புத்தாண்டு
அன்று, மேனகாவும் கணபதியும் பெசன்ட் நகர்
பீச்சுக்கு சென்றுவிட்டு, அன்று இரவு ஈசிஆர்
சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததை
ஆதாரத்துடன் கண்டுபிடித்து விட்டேன்.

 

மேனகாவை கையும் களவுமாக பிடிப்பதற்காக
அவர் தங்கியிருந்த விடுதி வாசலுக்குச் சென்று
நின்று கொண்டு, மேனகாவை போனில் அழைத்தேன்.
அவரோ, தலைவலியாக இருப்பதால்
அறையிலேயே படுத்துக் கிடப்பதாகக் கூறினார்.
அவர் அப்பட்டமாக பொய் சொல்வது
தெரிந்ததும் எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
இதை கணபதியே குடிபோதையில் மறுநாள் உளறிவிட்டார்.
இருவரின் செல்பிக்களை வைத்தும் உறுதிப்படுத்தினேன்.
அதன்பிறகு, மேனகாவின் நடவடிக்கைகளில்
மேலும் சந்தேகம் வலுக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோடு குணசேகருடன்…

கோவையில் மேனகா இருக்கும்போது ஊட்டி,
சென்னை, கொடைக்கானல், பெங்களூர் ஆகிய
ஊர்களுக்கு அலுவலக ஊழியர்களுடன்
பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச்
சென்று விடுவார். அதனால் என்னை
கோவைக்கு வர வேண்டாம் என்பார்.
அந்த நாள்களில் அவர் கரூர் சிவக்கொழுந்து,
பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர்,
கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட
17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளதை
பின்னாள்களில் கண்டுபிடித்தேன்.

 

இதையெல்லாம் கண்டுபிடித்து கேட்டபோது,
‘ஆமாம்… நான் ஒரு விலைமாதுதான்.
நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ.
உன்னால் ஒரு மயிரும் ….. முடியாது,’ என்றார்.
எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது.
அவருடைய அழுகை, குடும்ப கஷ்டம்
என்ற நடிப்பை நம்பி ஏமாந்து
வீட்டு உபயோகப் பொருள்களில் இருந்து தங்கம்,
வைர நகைகள் என இதுவரை 35 லட்சம் ரூபாய்
செலவு செய்திருக்கிறேன். அவர் அடகு வைத்திருந்த
நகைகளைக்கூட மீட்டுக் கொடுத்திருக்கிறேன்.
என்னை மாதிரி பலரிடம் அவர் திருமணம்
செய்வதாகக்கூறி 85 லட்சம் வரை
பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்.

 

மேனகாவிடம் இருக்கும் எனது பணம், நகைகளை மீட்டுத்தருவதற்காக சேலத்தில் ராக்கிப்பட்டி ராஜா என்பவரின் உதவியை நாடினேன். அவர் மூலமாக மேனகா முதல்கட்டமாக 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு வைர நெக்லஸ், ஒரு வைர தோடு ஆகியவற்றை மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதப்பணம், நகைகளை பிறகு தருவதாகச் சொன்னார். ஆனால் இதுவரை மீதப்பணம், நகைகள் வரவில்லை. இந்த வேலையைச் செய்து தருவதற்காக ராக்கிப்பட்டி ராஜா என்னிடம் முன்பணமாக 2.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். மேலும், 1.50 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பறித்துக்கொண்டார்.

 

கடைசியில் அவர் மேகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, என்னை மேனகாவுக்கு கட்டாய தாலி கட்ட வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ராக்கிப்பட்டி ராஜாவின் தூண்டுதலின்பேரில் மேனகா, அவருடைய பெரியம்மா கந்தாயி மற்றும் சில ரவுடிகள் வளையமாதேவியில் உள்ள என் வீட்டிற்கு வந்து, நான் மேனகாவுக்கு தாலி கட்டுவது போன்ற படத்தைக் காட்டி என்னிடம் 50 லட்சம் ரூபாய், ஒரு வீடு, ஒரு கார் ஆகியவற்றை கேட்டு மிரட்டினர்.

 

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜ், மேனகா ஏமாற்றியதாகச் சொல்லப்படும் 17 பேரையும் அழைத்து வாருங்கள் எப்ஐஆர் போடுகிறேன் என்றார். இப்பிரச்னையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் நடராஜ் மிரட்டினார். அதன்பின் என் புகாரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எங்கேயும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், மேனகா இனி வாழ்நாளில் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது,” என்று கண்ணீர் வடித்தார் பாலமுருகன்.

ஸ்ரீதருடன் சாட்டிங்…

மேனகா சிலருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர்களுக்கு தன் செல்போனில் இருந்து தனது அரை நிர்வாண, முழு நிர்வாண படங்களையும் அனுப்பி கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறார். கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், குணசேகர், கணபதி ஆகியோருடன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும் அளவுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்துள்ளார். பல்லடம் ஆனந்த், ஆட்டோ லூம் பிஸினஸ் மூலம் கோடீஸ்வரன் ஆனவர் என்பதால், தனக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறி, அவரிடமும் பிராக்கெட் போட முயன்றிருக்கிறார். அவரோ ஆளை விட்டால் போதும் என்று இவரை தடாலடியாக கழற்றிவிட்டிருக்கிறார்.

 

பெரும்பாலும் மேனகா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஆள்களையே குறிவைத்து திருமண ஆசை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த குணசேகர் என்பவரும், மேனகாவின் கண்ணீரை நம்பி 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

 

இவர்களில் சிவக்கொழுந்து, கணபதி, குணசேகர் ஆகியோரிடமும் நாம் விசாரித்தோம். அவர்களோ, ”பாலமுருகனுக்கும் மேனகாவுக்கும்தான் பிரச்னை. அவர் ஏன் எங்களை எல்லாம் இந்த விவகாரத்தில் கோர்த்து விடுகிறார்? நாங்கள் கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மேனகாவுடன் ஃபிரண்ட்லியாகத்தான் பழகினோம். அப்போது எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் பாலமுருகன் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். நியாயமாக பார்த்தால் அவர் மீது நாங்கள்தான் புகார் கொடுக்க வேண்டும்,” என்று சொல்லி வைத்தாற்போல் பேசினர்.

 

ஸ்ரீதர் திருப்பதி என்பவருடனும் மேனகா நெருங்கிப் பழகி இருக்கிறார். ஸ்ரீதர், ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்ஆர் பிரிவில் வேலை பார்த்துள்ளார். அந்த நிறுவனத்தில் இண்டர்வியூக்குச் சென்றபோது மேனகா அறிமுகமாகி இருக்கிறார். அதன்பின் இருவரும், அன்றாடம் இரவில் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சாட்டிங் செய்து வந்துள்ள ஆதாரங்களையும் திரட்டினோம்.

 

இதுபற்றி நாம் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு அவரும், ”சார்… நானும் மேனகாவும் ஃபிரண்ட்லியாகத்தான் பழகினோம். அவர் ஏதேதோ சொல்லி சில நேரம் என்னிடம் கைம்மாத்தாக பணம் கிடைக்குமா என்று கேட்டார். அவருக்கு பணம் கொடுத்து உதவும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. அதனால் நைசாக நானே அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டேன்,” என்றார்.

 

ஆனால், ‘எனக்குக் குழிப்பணியாரம்னா ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நைட்டு வரட்டுமாடீ?’ என்றெல்லாம் இரட்டை அர்த்தத்தில் சாட்டிங் செய்து கொள்வதெல்லாம் எந்த ஊர் ஹெச்ஆர் செய்வார் என்பதும் நமக்கு புதிராக இருந்தது. இதைப்பற்றி கேட்டபோது ஸ்ரீதர், ‘நட்புக்குள் இதெல்லாம் சகஜம் சார்… இதெல்லாம் ஒரு குற்றமா?’ என்று நம்மிடம் எதிர் வினா எழுப்பினார்.

 

ஆனால் ஓர் ஆணும், பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் நாள் கணக்கில் இரவில் தங்குவதும், தங்களின் நிர்வாண படங்களை பகிர்ந்து கொள்வதும் என்ன மாதிரியான ஃபிரண்ட்லி உறவுமுறைக்குள் வரும் என்று நமக்கும் புரியவில்லை.

 

இறுதியாக நாம், மேனகாவிடம் பேசினோம்.

 

நாம் அவரிடம் அறிமுகப்படுத்தி விட்டுத்தான் பேசினோம் என்றாலும், நீங்கள் எங்கே இருக்கீங்க? உங்க ஆபீஸ் எங்கே இருக்கு? பாலமுருகன் உங்களை எங்கே சந்தித்துப் பேசினார்? என்றெல்லாம் நம்மிடம் அடுத்தடுத்து வினாக்கள் எழுப்பி விசாரித்துவிட்டுத்தான் பதில் சொல்ல தொடங்கினார்.

 

”என்னிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக உங்களிடம் பாலமுருகன் சொல்கிறார். சிலரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார். இதில் எதை நம்புவது? இதையெல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. எது எதுக்கோ ஆதாரம் வைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், அவர் பணம் கொடுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டட்டும்.

 

இது பரவாயில்லை. அவர் பல பேரிடம் என்னை ஒரு ‘கால் கேர்ள்’ என்றுகூட சொல்லி இருக்கிறார். பல பேருக்கு வாட்ஸ்அப் மூலம் என் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் சொல்வதைக் கேட்டு எனக்கு ஷாக் ஆக இருக்கிறது,” என்றார் சிரித்தபடியே.

 

அவர் உங்களைப் பற்றி தவறாக சித்தரித்து இருந்தால் நீங்கள் அவர் மீது புகார் தரலாமே? என்று கேட்டதற்கு, ”சார்… இவங்க மேல புகார் கொடுக்கறது என் வேலை கிடையாது. நான் சம்பாதிச்சாதான் என் குடும்பம் சாப்பிட முடியும். நாமளே அன்றாடங்காய்ச்சி. இதுல எங்க போய் புகார் கொடுக்கறது? சார்… ஓப்பனாக சொல்லணும்னா பாலமுருகன் என்னை லவ் பண்ணினாருங்க…,” என்றவர் என்ன நினைத்தாரோ திடீரென்று, ”சார், நான் பேசுவதை நீங்கள் ரெக்கார்டு செய்யறீங்கனு தெரியுது. நான் உங்களை நேர்ல சந்திச்சுப் பேசறேன்,” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

 

இதற்கிடையே, பணத்தை பறிகொடுத்ததோடு, பெண்ணிடம் ஏமாந்து விட்டோமே என்ற தவிப்பிலும் இருந்த பாலமுருகன், மேனகா யார் யாருக்கெல்லாம் தன்னுடைய படங்களை அனுப்பி இருந்தாரோ அவற்றையும்,, சிலருடன் நெருக்கமாக இருந்த படங்களையும் மேனகாவின் நட்பு வட்டத்தில் இருந்த அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். மேலும், மேனகாவின் பேஸ்புக் பக்கத்தையும் முடக்கி இருக்கிறார்.

 

பாலமுருகன் புகார் அளித்தபோதே, ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து இருந்தால், ஒரு பெண்ணின் நிர்வாணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது தடுக்கப்பட்டிருக்கலாம். வழக்கம்போல் அலட்சியம் செய்திருக்கிறது சேலம் மாவட்ட காவல்துறை. பல மாதங்கள் கழித்து, திடீரென்று பாலமுருகனிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி மே 24, 2019ம் தேதியன்று சேலம் ஊரக டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகும்படி அழைத்திருக்கிறது காவல்துறை. எங்கே விசாரணை என்ற பெயரில் அழைத்து, தன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தலைமறைவாகிவிட்டார் பாலமுருகன்.

 

சில நேரங்களில் மான்கள் விரித்த வலையில் வேடன்களும் அகப்படுவதுண்டு.

 

– பேனாக்காரன்