Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’ என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள்.

தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது ‘என் இனிய உடன்பிறப்புகளே’தான்.

திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் ‘டிரெண்டி’யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது.

தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இருப்பினும், தொண்டர்கள் அவரை நேரில் சந்திக்க ஓராண்டுக்கும் மேலாகவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்கும் படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் அவர், திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திடும் படமும் வெளியானது.

முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தை அடுத்து, கடந்த மாதம் பவள விழா கொண்டாடப்பட்டது. அதில், பல்வேறு மரபுகளை உடைக்கும் விதமாக அனைத்து முன்னணி பத்திரிகை ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கண்காட்சி அரங்க வளாகத்தில்….

இதையொட்டி, முரசொலி நாளிதழ் பவள விழா சிறப்புக் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 10 முதல் அக். 10ம் தேதி வரை மட்டுமே இந்தக் கண்காட்சி அரங்கம் செயல்படும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. ‘இந்து’ ராம், கி.வீரமணி ஆகியோர் கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முதன்முதலாக கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நடந்து வரும் பவள விழா கண்காட்சியை இன்று (அக். 19, 2017) மாலை 7 மணியளவில் அவர் நேரில் கண்டு ரசித்தார். சுமார் 20 நிமிடங்கள் அவர் கண்காட்சியை பார்த்து ரசித்தார்.

தன்னைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகுச் சிலையைப் பார்த்து ரசித்த கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் அதை பகிர்ந்து கொண்டார். அந்த தருணம் மறக்க முடியாத அனுபவமாக தி.மு.க. முன்னோடிகள் சொல்கின்றனர்.

கண்காட்சியை பார்வையிடுவதற்காக அவர் மிகவும் பாதுகாப்பாக காரில் அழைத்து வரப்பட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்து கவனித்துக் கொண்டார்.

கண்காட்சி அரங்குகளில் அண்ணா எழுதிய கட்டுரைகள், கருணாநிதியின் கட்டுரைகள், அவருடைய ஒலி-ஒளி தொகுப்புகள், நாற்காலியில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்ட கருணாநிதியின் மெழுகுச்சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்தார்.

தன்னைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகுச் சிலையைப் பார்த்து ரசித்த கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் அதை பகிர்ந்து கொள்கிறார்.

 

கருணாநிதி, முரசொலி நாளிதழை தன் ‘முதல் குழந்தை’ என்று எப்போதும் சொல்லி வந்தவர். அவர் உடல்நலம் சீராக இரு ந்தவரை உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதாமல் இருந்ததில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முரசொலி வாயிலாக தொண்டர்களுடன் எப்போதும் தன்னை தொடர்பில் வைத்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று அவர் பவளவிழா கண்காட்சியைக் காண வந்ததை அறிந்த திமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ”தலைவர் (கருணாநிதி) கண்காட்சியைக் காண வ ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முரசொலியை எப்போதும் தனது தலைப்பிள்ளை என்று சொல்லுவார். அவருடைய சிந்தனை, செயல் எல்லாமே முரசொலியும், தொண்டர்களும் பற்றித்தான் இருக்கும்.

முரசொலியில் தலைவரின் எழுத்து மூலம் கவரப்பட்டு, எத்தனையோ பேர் எழுத்தாளர்களாகவும், சொற்பொழிவாளர்களாகவும் ஆகியிருக்கின்றனர். தொண்டர்களை வீறு கொண்டு எழச்செய்யும் ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே’ என்ற தலைவரின் குரல் விரைவில் ஒலிக்கும்,” என்றார்.