Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் ‘இளங்கம்பன்’ கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.

 

மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. ‘நண்பேன்டா (2015)’ என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா… உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா …’ என்ற அழகான மெலடி.

பழங்கால கோயில், தாமரை தடாகத்தின் பின்னணியில் படமாக்கப்பட்டு இருந்தது. இயல்பிலேயே அழகான நயன்தாராவுக்கு, ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர்களின் கைவண்ணத்தால் பாடலுக்கேற்றபடி ஊரெல்லாம் வியக்கும் வகையில் இன்னும் பேரழகாய் காட்சி அளிக்கிறார்.

 

கர்நாடக சங்கீத ஜாம்பவான்களான பாம்பே ஜெயஸ்ரீயும், உன்னிகிருஷ்ணனும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை தேன் குரலால் குழைத்துக் கொடுத்திருந்தது, ரசிகர்களை ‘மெஸ்மரைஸ்’ செய்தது போலிருந்தது.

 

இந்தப் பாடலின் ஒரு சரணத்தில்,

 

”வானத்தைக் கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை”

 

என்று எழுதி இருப்பார் வைரமுத்து.

 

பூமியை, பத்மாசூரன் பாயாக சுருட்டிய கதைகள் ஹிந்து புராணங்களில் உண்டு. ஆனால் வைரமுத்துவோ வானத்தைக் கட்டி வைக்க முடியும் என்கிறார். அது சாத்தியம் இல்லை என்பதை அவரும் அறிவார். ஆனால் எந்த வகையிலும் சாத்தியமற்ற வானத்தைக் கூட கட்டி வைத்து விடலாம்; ஒரு பெண்ணால் நாணத்தைக் கட்டி வைக்க முடியாது என ஆணித்தரமாகச் சொல்கிறார். பெண்மைக்கே உரிய நாணத்தின் வலிமையை உயர்த்திச் சொல்வதற்காக, வானத்தைக் கட்டி வைக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து.

 

நாணம் என்பது பெண்களுக்கு இயற்கையிலேயே அமைந்த அணிகலன் என்கிறான் வள்ளுவன்.

 

காமம், காதல் கொண்ட ஒரு பெண்ணால், தன் தலைவனைக் கண்டதும் கட்டித்தழுவிக் கொள்ள முடியாது. காரணம், பெண்ணுக்கே உரிய நாணம் அவளை கட்டிப்போட்டு விடுகிறது. ஆசை, கடல் அளவு இருந்தாலும், துளி அளவு நாணம் அவளை தடுத்தாட் கொள்கிறது. கண்ணாளனைக் கண்டும் கூட அவனை தழுவிக்கொள்ள முடியாமல் நாணமே அவளைக் கொல்கிறது.

 

கவிஞன் என்பவன், கற்பனையில் பெண்ணாகவும் மாறி விடுகிறான். அதனால்தான் பெண்ணின் வலியை பாடல் மூலம் மிகச்சரியாக வெளிப்படுத்த முடிகிறது. வானத்தைக் கட்டி வைக்கும் வழிகளை அறிந்த பெண்களுக்கு, நாணத்தைக் கட்டி வைக்கும் வழிகள் தெரியவில்லை.

 

வைரமுத்து தன் கவிதை வரிகளை, அவரே வேறு சில பாடல்களிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

 

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான வேதம் புதிது (1987)’ படத்தில்,

”கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா
நாணம் விடவில்லை
இன்னும் தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை”

 

என்று இந்தப் பாடலிலும் வைரமுத்து, பெண்ணின் நாணத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். நாணம் கொண்டதாலேயே, ஊரார் எங்கே தம்மீது பழிச்சொல் சுமத்தி விடுவார்களோ என அஞ்சி பெண்ணானவள், தன் காதலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொள்கிறாள். தலைவன் மீது ஆசை இருந்தும், அவனை தீண்டாமல் விலகியே நிற்கிறாள்.

 

‘வேதம் புதிது’ படத்தில், கிட்டத்தட்ட இளையராஜாவை நகல் எடுத்தாற்போல இசைத்திருப்பார் தேவேந்திரன். எஸ்பிபி, சித்ரா குரல்களில் கைக்குட்டையையும் காதல் கடிதத்தையும் மறக்காத தலைமுறை இப்போதும் உண்டு.

ஆக, ‘ஒரு பெண்ணுக்கு ஒன்று… காதலைக் கொடுத்துவிடு; இல்லாவிட்டால் அவளுக்கே உரிய நாணத்தை அவளிடம் இருந்து நிரந்தரமாக நீக்கி விடு,’ என்கிறான் வள்ளுவன். காதலையும், நாணத்தையும் ஒருசேர ஒரு பெண்ணால் எப்படியய்யா தாங்கிக் கொண்டிருக்க முடியும்? என வினவுகிறான். பெண்ணின் உளவியலை உள்புறமாக பார்த்தவனாயிற்றே வள்ளுவன்.

 

அதனால்தான், ‘நெஞ்சொடு கிளத்தல்’ அதிகாரத்தில்,

 

”காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு” (1247)

 

எனப் பாடுகிறான்.

 

வள்ளுவனின் வரிகளை வைரமுத்து, தனக்கேற்ற நடையில் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். வைரமுத்து மட்டுமின்றி, பல கவிஞர்களும் வள்ளுவத்தை பாடல்களில் புகுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் ‘திரை இசையில் வள்ளுவம்’ தொடர் வழியாக பார்த்து வருகிறோம்.

 

போரில் ஆமூர் மல்லனை வீழ்த்திய சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி மீது நக்கண்ணையார் என்ற பெண் புலவருக்கு காதலோ காதல். அவனை எண்ணி எண்ணி உடல் மெலிந்தது. கை வளையும் கழன்று விழுந்ததாம். இந்த இன்னலைத் தீர்க்க, தான் விரும்பும் சோழனின் தோள்களைத் தழுவிக் கொள்ளுதல் ஒன்றுதான் வழி என்பதை அவளும் அறியாமல் இல்லை. ஆனால் அவளையும் அவ்வாறு தழுவிக் கொள்ளாதபடி நாணம் தடுக்கிறது.

 

அதை நக்கண்ணையார், ‘அடுதோள் முயங்கல் அவை நாணுவலே’ என சோகமாகக் குறிப்பிடுகிறார் (புறம்: 83).

 

வைரமுத்துவே இப்படி என்றால், காதல் மன்னன் கண்ணதாசன் லேசுபட்ட ஆளா என்ன…

 

‘காதலிக்க நேரமில்லை (1964)’ படத்தில், ‘அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…’ என்றொரு பாடல். 20ம் நூற்றாண்டின் கம்பன் அவர். கண்ணதாசன் வரிகளும், பி.பீ.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா ஆகியோரின் குரல்களும், எம்எஸ்வியின் இசையும் இந்தப் பாடலைக் கேட்கும் ரசிகர்களை கற்பனையின் உச்சிக்கே கொண்டு சென்று விடும். இப்போதும் எவர்கிரீன் பாடல்தான்.

 

அனுபவம் புதுமை… பாடலின் முதல் சரணத்தில்,

”தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா… சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்…
மனம் தாளாதென்றாள்…
ஒன்று நானே தந்தேன்…
அது போதாதென்றாள்…
போதாதென்றாள்…”

 

என்று ரசனையாக எழுதியிருப்பார் கண்ணதாசன். காதலனும், காதலியும் இரவுக்குறியில் ரகசியமாக ஓரிடத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். தலைவனை நோக்கி நாயகி வருகிறாள். அதுவும் எப்படி…. தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள் என்கிறான் கண்ணதாசன்.

 

அவள் ஏன் தள்ளாடி தள்ளாடி நடமிட்டு வர வேண்டும்? மது போதையில் இருந்தாளா என்ன? இல்லை. தலைவனைப் பார்த்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் அந்த இரவு அவளுக்கு நரகமாகி விடும். பஞ்சு மெத்தையும் முள் படுக்கையாகி விடும். பாலும் கசக்கும். ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் வந்துவிட்டாள். ஆனாலும், அந்த இரவிலும் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பு ஒருபுறம்; ஒருவர் கூட இல்லாத அந்த நேரத்திலும் கூட அவளுடைய நாணம் அவளைத் தடுக்கிறது மற்றொருபுறம். அந்த நாணத்தால்தான் அவள், போகலாமா வேண்டாமா… என தள்ளாடி தள்ளாடி நடமிட்டு நடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

திருமணம் முடிந்த நாள். அன்று முதலிரவு. அந்த அறையில் தலைவன் காத்திருக்கிறான். அந்த அறைக்குள் புதுமணப் பெண்ணே தனியாக நடந்து சென்று விடலாமே? ஆனால் ஏன் அவளை தோழிகள் கைத்தாங்கலாக பிடித்து அழைத்துச்சென்று விட்டுவிட்டு வருகிறார்கள்?

 

ஏனெனில், கணவனாக ஆகிவிட்டாலும் கூட. முதன்முதலில் தனித்த அறையில் ஒரு ஆணைச் சந்திக்கப் போகிறாள் புதுப்பெண். அப்போது அவளுக்குள் சட்டென்று துளிர்க்கும் நாணம் எனும் வெட்கப்பூ, அவளை மேற்கொண்டு நடக்க விடாமல் உடலை தளர்த்தி விடுகிறது. நாணத்தால் அவள் கீழே விழுந்து விடுவாளோ என எண்ணியே, அவளை பாங்கியர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார்கள். இதையும் கண்ணதாசன் அவர்களே ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

பெண்கள் பொன்நகைகள் அணியாதபோதும், நாணமே அவர்களை பேரழகியாக காட்டுகின்றன. மனம் கவர்ந்த தலைவனைக் கண்டதும் நாணத்தால் தலைவியின் முகம், ரோஜாவைப் போல சிவந்து போவதைக் கண்ட ஆண்களுக்குத் தெரியும் அந்த நாணம், எந்த ஒரு தங்கம், வைரம், வைடூரியத்தை விடவும் விலைமதிப்பற்றவை என.

 

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா என வைரமுத்து பாடலாம்; இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலாம். தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால் நயன்தாரா பற்றி நாம் பாடுவது என்பது, எந்த விதத்திலும் நமக்கு பயன்தாரா.

 

– செங்கழுநீர்

 

30.5.2021
02.31 மணி
வைகறை