Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

வானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) ‘டூடுல்’ (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது.

கூகுள் வெளியிட்ட டூடுல்

பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர்.

கூகுள் வெளியிட்ட டூடுல்

சந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் – சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும்.

அப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. பதினோறாம் வயதில்தான் அவர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். பிறகு மாநிலக் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அங்கேயே பிஏ., (ஹானர்ஸ்) இயற்பியல் (1927) படிப்பில் சேர்ந்து படித்தார்.

சுப்பிரமணியன் சந்திரசேகர்

இவர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் சர்.சி.வி.ராமன், இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுகிறார். அவர் வேறு யாருமல்ல. சந்திரசேகரின் சித்தப்பாதான் சி.வி.ராமன். ஆனால், சித்தப்பாவின் புகழ் வெளிச்சம் சந்திரசேகரின் இயல்பான ஆர்வத்துக்கும், பின்னாளில் அவர் நோபல் பரிசு பெறுவதற்கும் எந்த வகையிலும் உறுதுணையாக இல்லை என்பதே உண்மை.

அவர் ஈர்க்கப்பட்டதெல்லாம், பேராசிரியர் ஆர்னால்டு சம்மர்ஃபெல்டை பார்த்துதான். அவருடைய சொற்பொழிவுகள், அவர் எழுதிய நூல்களைப் படித்தும் வானியல் இயற்பியல் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1929ல் முதன்முதலாக தனது ஆராய்ச்சிக் கட்டுரையையும் சந்திரசேகர் வெளியிட்டார்.

பின்னர், 1930ம் ஆண்டில் இந்திய அரசு உதவியுடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு மேப்படிப்பு படிக்க பயணப்பட்டார். அதன்பின்னர் அவருடைய ஆராய்ச்சி தீவிரம் அடைகிறது.

எதற்காக அவருக்கு நோபல் பரிசு என்கிறீர்களா? அவருடைய ஆராய்ச்சிக்கு ‘சந்திரசேகர் எல்லை’ என்று கூட விஞ்ஞான உலகம் பெயரிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது.

அதென்ன சந்திரசேகர் எல்லை? பார்ப்போம்.

சந்திரசேகர் எல்லை (Chandrasekhar’s Limit) என்பது ஒரு வெண்குறுமீனின் (White Dwarf) நிறைக்கான கருத்தியல் பெரும எல்லை – இது சூரியனின் நிறையைப் (Solar Mass) போல ஏறக்குறைய 1.4 மடங்காகும். இது கோட்பாட்டு (கருத்தியல்) இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரை நினைகூரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த எல்லை நிறைக்கு மேல், சமவாற்றல்-நிலை எலக்ட்ரான் அழுத்தத்தினால் (அவ்வமைப்பை) உள்நோக்கி வீழ்த்தும் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த இயலாது. அவ்விண்மீன் நியூட்ரான் விண்மீனாக மாறிவிடும்; அல்லது ஓப்பனைமர்-வோல்க்காப் எல்லையையும் கடந்த அமைப்பு எனில், அது ஒரு கருந்துளையாக (Black Hole) உருமாறுவதைத் தடுக்க முடியாது.

இந்த ஆராய்ச்சிக்காகத்தான் அவருக்கும், உடன் பங்களித்த வில்லியம் ஏ.ஃபவுலர் என்பவருக்கும் 1983ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வானியல் இயற்பியல் (Astro Physics) துறையில் நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். தமிழர்.

உலகில் பிரபலமானவர்களை கூகுள் நிறுவனம் அதன் முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் வெளியிட்டு கவுரவப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக அவருடைய உருவப்படத்துடன் டூடுல் வெளியிட்டுள்ளது.

பின்னாள்களில், அவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். அவர், 1985ம் ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி மரணம் அடைந்தார். கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தியதற்கு, அறிவியல் ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.