Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து ‘மீம்ஸ்’கள் மூலமாக ‘கிழி கிழி’ என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே ‘ராஜாராணி’, ‘தெறி’ மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது.

முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் ‘மெர்சல்’ படத்திலும் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மூன்று முகம்’, ‘சிவாஜி’, ‘ரமணா’ ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன.

படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்து வந்தன. படம் வெளியாகும் முதல் நாள் வரை பல்வேறு தடைகளைச் சந்தித்தது. இவையெல்லாமே படத்திற்கு செலவில்லா விளம்பரமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், படத்தில் ஒரு காட்சியில் 7 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் சிங்கப்பூரில் இலவசமாக மருத்துவ சேவை கிடைக்கும்போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் கிடைப்பதில்லை என்ற வசனம் இடம்பெறுகிறது.

மேலும், கோயில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனைகள் கட்டலாம் என்றும், உடலைக் கெடுக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு ஏன் ஜிஎஸ்டி வரி போடவில்லை என்ற வசனமும் இடம்பெறுகிறது.

இந்த வசனங்கள், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுப்பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் திரை ரசிகர்கள் வரவேற்கின்றனர். இதனால் அட்லீயின் ‘காப்பி + பேஸ்ட்’ காட்சிகள் இருந்தாலும், சமகால நிகழ்வுகளை ரசிக்கும்படி சாடுவதால் அவற்றுக்கு வரவேற்பு கிடைத்திருக்கின்றன.

ஜிஎஸ்டி குறித்த வசன காட்சிகளை படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று (அக். 19, 2017) காட்டமாக கூறினார். மேலும், கோயில்கள் பற்றியும் தவறான கருத்தை பரப்புகிறார்கள் என்றும் சொல்லி இருந்தார். உண்மையில் படத்தில் கோயில்கள் பற்றியோ, ஆன்மீகம் பற்றியோ தவறான காட்சிகளோ, வசனங்களோ இல்லை.

தமிழிசையின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டலடித்து ‘மீம்ஸ்’களை பதிவிட்டு வருகின்றனர்.

பலர் அவருடைய உடலை வைத்து கேலி செய்து கருத்துகளையும், ‘மீம்ஸ்’களை பதிவிட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இதுவும் ஒரு பெண் மீது நடத்தப்படும் தாக்குதலாகத்தான் நாம் கருதுகிறோம். ‘யோகி’ பாபு என்ற நடிகரின் சிகையலங்காரத்துடன் ஒப்பிட்டு தமிழிசையை கிண்டல் செய்வதெல்லாம் மூன்றாந்தரமானவை.

பலர், அவரை ஒருமையில் விளித்தும், தகாத சொற்களால் வசைபாடியிருப்பதையும்கூட சமூகவலைத்தளங்களில் காண முடிகிறது. ஆண்கள் சக ஆண்களைத் தூற்றும்போதும், அல்லது பெண்களைத் தூற்றும்போதும் பெண்ணின் அந்தரங்க அவயங்களைச் சொல்லி தூற்றுவதுதான் இங்கே தமிழனின் மரபாக இருக்கிறது. மேற்படி அவயங்கள், ஒவ்வொரு ஆண்மகனின் வீட்டிலும் இருக்கும் தாய், மனைவி, சகோதரிகளிடமும் இருப்பதை அவர்கள் ஏனோ மறந்து போய்விடுகின்றனர்.

தமிழனின் வீரம், கொடை, அறம், அறிவுத்திறம் இதெல்லாமே ‘ஒருகாலத்தில்’ என்ற சொல்லுக்குள் அடங்கி விடுமோ என்ற கவலையே மேலெழுகிறது. எதிர்காலத்தில், தமிழிசை போன்றோர் மீது நடத்தப்பட்ட சமூகவலைத்தள தாக்குதலையே தமிழர்களின் நாகரீக அடையாளமாக இந்த உலகம் ‘ரெஃபரன்ஸ்’ ஆக எடுத்துக் கொள்ள நேரிடலாம்.

அந்த வசனத்தில் உண்மை இல்லை என்று பாஜக தரப்பினர் சிலரும் விஜய்க்கு எதிராக ‘மீம்ஸ்’களை வெளியிட்டுள்ளனர். எனினும், பாஜகவின் சமூகவலைத்தள தொழில்நுட்பப் பிரிவு ரொம்பவே சவலையாகத்தான் இருக்கிறது. விஜய் ரசிகர்களின் வேகத்திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பாஜக ஆதரவாளர்களின் எதிர் தாக்குதல்…

அல்லது, இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் கல்வியும், மருத்துவமும் இன்னும் கட்டணமின்றி கொடுப்பதற்கு இயலாத அரசுகள்தானே இதுவரை இருந்து வந்திருக்கிறது? இதில் உள்ள உண்மைத் தன்மையை பாஜக அல்லது மெர்சலை விமர்சிக்கும் எந்த ஓர் அரசியல் கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாஜக ஆதரவாளர்களின் எதிர் தாக்குதல்…

இவை ஒருபுறம் இருக்கட்டும்.

அரசியல் சாடல்களும், பகடி செய்வதும் கலை வடிவத்தின் ஓர் அங்கம்தானே. சார்லி சாப்ளின் செய்யாததா? நம்ம ஊர் நடிகர்கள் என்எஸ்கே முதல் சோ வரை எல்லோருமே அரசியல் பகடி பேசியிருக்கிறார்கள். தங்கப்பதக்கம் படத்தில்கூட நடிகர் சோ, ‘ஒரு ரூபாய்க்கு இரண்டு கிளி’ என்று, பேரறிஞர் அண்ணாவின் ‘படி அரிசித் திட்டம்’ பற்றி பகடி செய்திருப்பார்.

கமல் நடிப்பில் 1988ல் வெளியான ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் வரும் ஒரு பாடலில், ‘கள்ளுக்கடை காசிலேதான்டா கட்சிக்கொடி ஏறுது போடா…’ என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியிருப்பார். அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படம்கூட, இலவச கழிப்பறை கட்டுவதில் நடக்கும் ஊழலையும், அரசியல் அவலங்களையும் தோலுரித்த படம்தானே!. அந்தப் படத்தை மக்கள் ஆராதிக்காத்தானே செய்தார்கள். தேசிய விருதுகூட கிடைத்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

எனக்குக் தெரிந்து, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படமளவுக்கு அரசியலை பகடி செய்த படம் இன்னும் வரவில்லை என்றே சொல்லுவேன். காட்சிக்குக் காட்சி அன்றைய ஆளும் திமுக அரசின் திட்டங்கள், மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியையும் ருசிகரமாக எள்ளி நகையாடும். அந்தப்படமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வடிவேலுவை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

சமகால பிரச்னைகளை மையப்படுத்துதல் அல்லது பகடி செய்யும் படங்களை மக்கள் கொண்டாடவே செய்கின்றனர். அதற்குள் அரசியல்வாதிகள் நுழைந்து கத்திரி போட முயலும்போது, ரசிகர்களிடம் இருந்து மூர்க்கத்தனமான தாக்குதலைச் சந்தி க்க வேண்டியிருக்கிறது.

அதுவும் சமூகவலைத்தள புரட்சியுகத்தில், இந்தத் தாக்குதலை தாங்கிக்கொள்ள யாருக்குமே தடித்தத் தோல் தேவைப்படுகிறது. கொஞ்சம் பலவீனமாக இருந்தால்கூட, தற்கொலையில் போய் முடிந்துவிடும். அந்தளவுக்கு விமர்சகர்களின் மூர்க்கத்தனம் தெறிக்கிறது.

ஒரு சினிமா, அரசியல் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று நம்பும் அளவிற்கு பாஜக தலைவர்கள் பலவீனமாக இருக்கிறார்களா என்ன? இதிலெல்லாம் கவனம் செலுத்துவதன் மூலம் மெர்சல் படத்திற்கு இன்னும் கூடுதல் விளம்பரம் தேடித்தருவதாக வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.

இப்படி எடுத்ததற்கெல்லாம் அரசியல்வாதிகள் கம்பு சுழற்றினால், அடிப்படை பேச்சுரிமையைப் பறிக்கும் செயலாகாதா? என்பதை அவர்களும் கணப்பொழுதேனும் சிந்திக்க வேண்டும். கலை வடிவத்தில் உயிர்ப்புடன் இருப்பது சினிமா மட்டும்தான். அதையும் அரசியல்வாதிகள் கொன்றுவிடக் கூடாது.

 

முக்கியமாக ரசிகக் கண்மணிகளிடம் நாம் விரும்புவது. திரை ரசிகர்கள் தங்களின் தலைவராக வரித்துக்கொண்ட ஒருவரைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் எழும்போது, அதற்கு எதிர்வினையாற்றுவது என்பதெல்லாம் சரிதான். ஆனாலும், அறம் தேவைப்படுகிறது. கருத்தியல் ரீதியாக எதிர்த்தாக்குதல் நடத்த நாம் இன்னும் பழகிக்கொள்ளவில்லையோ என்ற அய்யமும் எழுகிறது.

அதுவும், ட்விட்டர், முகநூல் போன்ற எல்லோரும் பார்க்கும் பொதுத்தளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது யாராக இருந்தாலும் ‘நா காக்க’ வேண்டும் என்பதே நமது அவா. இத்தகைய விமர்சனங்கள் பூமராங் போல. ரசிகர்களை, ‘வாத்தியார்’ பாணியில் நல்வழிப்படுத்துவதும் தளபதிகளின் அடிப்படை கடமைகளுள் ஒன்றுதானே?

– பேனாக்காரன்.