சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்காகவே தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியருமான எம்.நடராஜன் (74), உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும், விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் சில நாள்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. உறவினர்கள் வட்டாரத்தில் உறுப்பு தானம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற 22 வயது இளைஞர், கடந்த செப். 30ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு முதலில் அறந்தாங்கி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததால் பின்னர், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பிழைப்பது கடினம் என்று கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவரை உறவினர்கள் திடீரென்று மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அரசு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, தஞ்சையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக கார்த்திகேயனை சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடராஜன் சிகிச்சை பெற்று வரும் குளோபல் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சைக்கு சேர்த்த சில நிமிடங்களிலேயே, கார்த்திகேயன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக குளோபல் மருத்துவர்கள் கூறியதுடன், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்தும் கார்த்திகேயனின் உறவினர்களிடம் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக அம்மருத்துவமனை நிர்வாகம் ஓர் அறிக்கையும் வெளியிட்டு இருந்தது. உறவினர்களின் ஒப்புதலுடன், கார்த்திகேயனிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் நடராஜனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இதயம், 43 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நுரையீரலை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஒருவருக்கும் பொருத்தப்பட்டதாக குளோபல் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அந்த அறிக்கையில் 74 வயதான ஒருவருக்கு சிறுநீரகமும், கல்லீரலும் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எந்த இடத்திலும் பயனாளியின் பெயர் (அதாவது, நடராஜன்) குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை, பெயர் குறிப்பிடக்கூடாது என்பது அடிப்படை விதியாகக்கூட இருக்கலாம்.
ஆனால், குளோபல் மருத்துவமனையில் வைத்துதான் உடல் உறுப்பு தானம் குறித்து சம்மதம் பெற்றோம் என்று கூறும் அந்த மருத்துவமனை அறிக்கையில்தான் பல்வேறு சந்தேக வினாக்கள் எழுந்துள்ளன.
சாதாரண தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவே பொருளாதார வசதி இல்லாத கார்த்திகேயனை, தஞ்சையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்குக் கொண்டு சென்றது யார்?. அந்த ஏர் ஆம்புலன்ஸில் எந்த மருத்துவமனை ஊழியர்கள் உடன் சென்றனர்?. ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டது யார்? கார்த்திகேயன் மூளைச்சாவு அடைந்துவிட்டார் அல்லது அடைந்து விடுவார் என்று தெரிந்து, முன்கூட்டியே அவருடைய உறவினர்கள், பெற்றோர்களை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளனரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உடல் உறுப்பு தானம் கேட்டு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், நடராஜனுக்கு உடனுக்குடன் உடல் உறுப்புகள் தானம் பெற்று, பொருத்தப்பட்டது எப்படி? என்ற அய்யமும் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே சசிகலா குடும்பத்துடன் தீவிர விசுவாசம் காட்டி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் மற்றும் உடல் உறுப்பு தான ஆணையத் தலைவர் மருத்துவர் பாலாஜி (இவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை பதிந்ததாக சான்றளித்தவர்) ஆகியோரும் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதில் தீவிர அக்கறை காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் உறுப்புகள் தானமாகத்தான் பெறப்பட வேண்டுமே தவிர, விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும், நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் தானம் வழங்கியதற்காக கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டு, வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
அந்த தொகையும் முழுமையாக கார்த்திகேயன் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இடையில் அமைச்சருக்கு நெருக்கமான சில எம்எல்ஏக்கள் பெரும்பகுதியை சுருட்டிக்கொண்டு, சில லகரங்களை மட்டுமே அந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர், இளைஞர் கார்த்திகேயனை திட்டமிட்டே விபத்தில் சிக்க வைத்திருக்கக்கூடும் என்றும் திகில் கிளப்புகின்றனர். கடந்த 30ம் தேதி நடந்த விபத்து குறித்து இதுவரை உள்ளூர் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறி உள்ளதாக சந்தேகங்களை முன்வைத்துள்ளார். உறுப்பு மாற்று என்பது ஒரு வணிகமாக நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உரிய விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரலாம். வராமலும் போகலாம்.
– பேனாக்காரன்.