Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காலமானார் கலைஞர் கருணாநிதி!

 

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.

 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, ‘எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா…’ என்று முழக்கமிட்டபடியே இருந்தனர்.

 

அனைத்து உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் குறைந்து போனதால் வயது மூப்பு காரணமாக அவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதில் கடும் சவால்கள் நிலவியதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். வெளியூர்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள், தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. தனியார் நிறுவன ஊழியர்கள் முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கருணாநிதி மறைவையொட்டி, திமுக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஏழு நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடும்படியும் திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

 

கருணாநிதியின் உடல், இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும், பின்னர் சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையிலும் வைக்கப்படும் என்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்படுகிறது.

 

தொடர்ந்து 13 முறை தோல்வியே காணாமல் எம்எல்ஏ பதவி, ஐந்து முறை முதல்வர் பதவி, 80 ஆண்டுகள் அரசியல் பணி, 50 ஆண்டுகள் திமுக தலைவர் பதவி என அரசியல் உலகில் வெற்றி நடைபோட்ட கருணாநிதியின் மறைவுக்கு திமுகவினர் மட்டுமின்றி அனைத்து கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.