Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா?: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்

தமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.

நாமக்கல் அருகே நேற்று முன்தினம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற முடியாத விரக்தியில் தாய், பாதிக்கப்பட்ட குழந்தையுடன் கிணற்றில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது. மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் டெங்குவை மறைப்பதைக் காட்டிலும், அதுபற்றிய விழிப்புணர்வை தீவிரப்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது.

ஆனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தாத தமிழக அரசு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதில்தான் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்களில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கேலி கிண்டலாகவும், கடுமையான வார்த்தைகளாலும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றிய விமர்சனங்களின்போது அவரின் அரசு மீதான இரட்டை நிலைப்பாட்டையும் கேலி செய்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கரூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்த படம் ஒன்றை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விழா தொடர்பான பல படங்களை ஒருங்கிணைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஒருவர், ”மக்கள் டெங்குவால் அவதிப்படுவது உன் கண்ணிற்கு தெரிகிறதா?;” என்று முதல்வரை பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.

இன்னொருவர் துணை முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், ”மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் தேவையா?,” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் ஒரு அவரின் அரசியல் வளர்ச்சி குறித்தும் கேலியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

”சாதாரண டீக்கடை வைத்து, அரசியலில் குதித்து, பொதுச்சேவைக்கு வந்தவரின் வீட்டில் இப்போது இரண்டு ஆடி கார்களும், பிஎம்டபிள்யூ கார்களும் அணிவகுத்து நிற்கின்றன. குடியிருக்கும் வீட்டிற்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுக்கும் அளவுக்கு இந்த நபர் எப்படி செல்வந்தர் ஆனார்? என்று எந்த நாயும் கேட்கமாட்டான். ஆனாலும், ஓபிஎஸ் தங்கமாம். அவர்தான் முதல்வர் ஆக வேண்டுமாம். சசிகலா குடும்பத்தை ஒழித்துக்கட்டிவிட்டு நீதி, நியாயம், தர்மத்தை ஓபிஎஸ்தான் நிலை நாட்டுவாராம். தமிழ்நாட்டில் எத்தனை முட்டாள்களும், மூடர்களும் இருக்கிறார்கள்….!?” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர் துணை முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், ”மக்கள் டெங்குவால் நாள்தோறும் அவதிப்படுகிறார்கள். அதிலும் அதிக கவனம் செலுத்துங்கள். எம்ஜிஆர், அம்மா இருவரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்,” என்றும் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பக்கத்தில் ஒருவர், ”சிவகங்கை மாவட்டம் மு-ழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கொசு மருந்து அடித்து, கொசுக்களை ஒழிக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படாததால், தேவையான நிதியை கேட்டுப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி சாலைகள், குடிநீர் விநியோகம், சாக்கடைக் கால்வாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகள் முடங்கியுள்ளன.

தேங்கியுள்ள சுத்தமான நீரில்தான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் எஜிப்ட் வகை கொசுக்கள் முட்டையிட்டு, வளர்கின்றன. பல இடங்களில் வாரத்திற்கு ஒரு முறையும், பத்து நாள்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் தண்ணீரை பாத்திரங்கள், தொட்டிகளில் சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால்தான் டெங்கு கொசுக்களின் பெருக்கமும் அதிகரிக்கிறது. தினமும் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியையும் கட்டுக்குள் கொண்டு வரலாம்.