Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

 

கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை தமிழ்ச்சமூகத்திலும் இருத்திருக்கிறது என்பதற்கான நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

 

உடன்கட்டை என்றாலே நமக்கான அண்மைய வரலாற்றில் அடிபடும் ஒரே பெயர் ராஜாராம் மோகன் ராய்தான். வங்கத்தில் பிறந்த அவர், சதி என்னும் பெண்கள் உடன்கட்டை ஏறும் அவலத்தை அடியோடு ஒழிக்க பெரிதும் பாடுபட்டார். அவருடைய தொடர் முயற்சிகளால், 1833ம் ஆண்டில் அப்போதைய வங்க ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதி’யை ஒழித்து சட்டம் கொண்டு வந்தார். வங்கம் மட்டுமின்றி ராஜஸ்தானிலும் சதி நடைமுறை அதிகமாக இருந்தது.

ஆறகழூர் வெங்கடேசன்

 

உண்மையில் தமிழ்ச்சமூகத்திலும் பரவலாக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருத்திருக்கிறது. பூதப்பாண்டியனின் ஈமத்தீயில் மனைவி பெருங்கோப்பெண்டு பாய்ந்து இறந்ததாக புறநானூற்றுப்பாடல் (246) ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் இலக்கிய சான்றுகள் மட்டும்தானா என்றால் அதற்கும் வலுவான சாட்சி ஒன்றைக் கொண்டு வந்துள்ளார் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் ஆறகழூர் வெங்கடேசன்.

 

வரலாற்று ஆர்வலர்களான ஆத்தூர் செந்தில்குமார், சேலம் ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் சேலத்தை அடுத்துள்ள வட்டமுத்தான்பட்டியில் ஒரு நடுகல்லை வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சதுர வடிவில் உள்ள அந்த நடுகல்லில் புடைப்பு சிற்பமாக ஒரு போர்வீரன், அருகில் அவனுடைய மனைவியின் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இதை ‘சதி கல்’ என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

 

ஆநிறை கவர்தல், காத்தல் போன்ற செயல்களின்போது மடிந்த வீரனின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் பழந்தமிழர்களிடம் இருந்துள்ளது. போரில் உயிர்நீத்த வீரனுக்கும் நடுகல் நடப்படும். புலி, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடும்போது நிகழும் மோதலில் இறக்கும் வீரனுக்கும் நடுகற்கள் நடுவது நடைமுறைதான். உதாரணமாக புலி தாக்கி இறந்த வீரனின் நடுகல்லை ‘புலிக்குத்திப்பட்டான்’ நடுகல் என்றும், ‘காட்டுப்பன்றிகுத்திப்பட்டான்’ நடுகல் என்றும், மானால் தாக்கப்பட்டு இறந்தால் ‘மான்குத்திப்பட்டான்’ என்றும் சொல்கின்றனர்.

 

நடுகல்லில் கையில் ஆயுதத்துடன் வீரன் நின்று இருந்தால் அவன் போரில் மடிந்தான் என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம். அந்த வீரனோடு பெண்ணின் உருவமோ அல்லது அவளின் கை, கால் போன்ற உறுப்புகளோ இருந்தால் அது நிச்சயமாக சதி கல்தான் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.

சரி. இப்போது வட்டமுத்தான்பட்டியில் கண்டறியப்பட்ட சதி கல் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பார்ப்போமே…

 

இந்த சதி கல்லின் உயரம் 68 சென்டிமீட்டர். இதில் செதுக்கப்பட்டுள்ள வீரனின் உயரம் 56 சென்டிமீட்டர். அருகில் இருக்கும் பெண்ணின் உயரம் 50 சென்டிமீட்டர். இந்த நடுகல் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.

 

வீரன், தன் கூந்தலை அள்ளி முடிந்து மேல்புறமாக கொண்டை போட்டிருக்கிறான். ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி…’ என்ற பாடலின்போது ரஜினிகாந்தின் சிகை அலங்காரம் நினைவில் இருக்கிறதா? அதே போலதான் இந்த சதி கல் வீரனின் சிகை அலங்காரமும் இருந்தது.

 

கி.பி. 16ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டம் அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கெட்டி முதலிகளின் சிகை அலங்காரம்கூட இப்படித்தான் இருக்குமாம். கொண்டையை பிணைத்திருக்கும் மெல்லிய கயிறு இடப்புறம் பறந்த நிலையில் சிற்பம் காட்சி அளிக்கிறது. வீரனின் காதுகளில் அணிகலன்கள் தொங்குகின்றன.

 

வீரனின் கழுத்திலும் அணிகலன்கள் உள்ளன. இரு புஜங்களிலும் தோள்வளையம் அணிந்திருக்கிறான். அவனுடைய வலது கரத்தில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. வாளின் முனை இந்த மண்ணைப் பார்த்து குத்திட்டு நிற்கிறது. அவனுடைய வலது கால் நேராகவும், இடது கால் புறப்படும் நிலையில் சற்றே முன்னோக்கிய நிலையிலும் இருக்கிறது.

 

வீரனின் இடது புறத்தில் அவனுடைய மனைவி தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில் இருக்கிறாள். தன் கூந்தலை இடப்புறமாக அள்ளி முடிந்திருக்கிறாள். காதுகளில் அணிகலன்கள், கழுத்தணி, தோள் வளையம் ஆகியவையும் அணிந்த நிலையில் அந்த சிற்பம் உள்ளது. சற்றே இடையை வளைத்த நிலையில் நிற்கின்றாள்.

வட்டமுத்தான்பட்டியில் கண்டறியப்பட்ட சதி கல்

கழுத்தில் சவடி, சரபளி போன்ற அணிகலன்கள் உள்ளன. இரு புஜங்களிலும் தோள்வளையம் உள்ளது. வலது கையில் வாளினை பற்றியவாறும், வாள் முனை பூமியை நோக்கியும் உள்ளது. இடது கையானது தொடையின் மேல்பகுதியில் வைத்த நிலையில் கடியஸ்த முத்திரையில் உள்ளது. இது போருக்குச் செல்லும் நிலையைக் குறிப்பதாகும். அரையாடை மட்டுமே அணிந்திருக்கிறான் வீரன். வலது கால் நேராகவும், இடது கால் முட்டி சற்று புடைத்து முன்னோக்கிய நிலையிலும் உள்ளது.

 

அவனது இடது கை தொடையின் மேற்பகுதியில் கடியஸ்த முத்திரை நிலையில் உள்ளது. போருக்குப் புறப்படும்போது ஒரு வீரனின் உடல்மொழி இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முழு உடலுக்கும் உடை அணியாமல் இடுப்புக்கீழே மட்டும் ஆடை அணிந்திருக்கிறான் வீரன்.

 

வீரனின் இடதுபுறம் வீரனின் மனைவி இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளனர். இடது பக்கம் கூந்தல் அள்ளி முடியப்பட்டுள்ளது. காதுகளில் அணிகலன், கழுத்தணி, தோள் வளையம் உள்ளன. வளையல் அணிந்துள்ளாள். மார்புக்கச்சை காட்டப்படவில்லை. கைகளில் வளை அணிந்திருக்கிறாள். ஆனால் அந்நாளில் மார்புக்கச்சை அணியும் வழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஏனெனில் சிற்பத்தில் அதற்கான விளக்கம் இல்லை. கால்களில் கழல் அணிந்திருந்தாள்.

 

வட்டமுத்தான்பட்டியில் சதி கல் நிருவப்படுவதற்கான மேலும் வலுவான கூற்றையும் முன்வைக்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.

 

”கி.பி. 1659 மற்றும் 1667ம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும், மைசூர் மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நாயக்க மன்னர் அணியில் குறுநில மன்னரான கெட்டி முதலி மன்னரும் கலந்து கொண்டார். அந்தப் போரில் இறந்த வீரனின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டிருக்கலாம். கூடவே, மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளதால் இது ஒரு சதி கல்லும் ஆகும்,” என்கிறார்.

 

சதி கற்களை இரண்டு வகைப்படுத்தலாம். முதலாவது, கணவன் இறந்த பின் உயிர் துறக்கும் மனைவிக்கு எடுக்கப்படும் நடுகல். கணவனுடன் வாழும் பெண்ணோ, கைம்பெண்ணோ கற்புக்கு பங்கம் நேரும்போது தீயில் விழுந்து தன் கற்பை நிலை நாட்டுதல் இரண்டாவது வகை. இவர்களுக்கு சில இடங்களில் கோயில்களும் எழுப்பப்பட்டு உள்ளன. அத்தகைய கோயில்களைத்தான் தீப்பாஞ்சாயி கோயில்கள் என்கிறோம். இப்போதும் சில இடங்களில் தீபாய்ந்த அம்மன் கோயில் இருப்பதை நாம் காணலாம்.

 

வாமனக்கல்:

வாமனக்கல்

அதென்ன வாமனக்கல் என்கிறீர்களா? கிருஷ்ணரின் அவதாரங்களுள் ஒன்றான வாமன அவதாரத்தோடு தொடர்புடையது என்பதால் வந்த காரணப்பெயர்தான் வாமனக்கல். மன்னர்கள் காலத்தில் சிவன், பெருமாள் கோயில்களில் பூஜைகள் செய்யவும், விளக்கு எரிக்கவும் பக்தர்கள் நிலங்களை தானமாக வழங்குவர்.

 

அவ்வாறு வழங்கப்படும் நிலத்தின் எல்லைகளை அளந்து நடப்படும் முட்டுக்கற்களைத்தான் அக்காலத்தில் சூலக்கல், திருவாழிக்கல், வாமனக்கல் என்கின்றனர்.

 

சிவன் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுக்கப்பட்டால் அதன் எல்லையைக் குறிக்க நடப்படும் கற்களில் புடைப்பு சிற்பமாக சூலத்தை செதுக்கி இருப்பார்கள். இதுதான், சூலக்கல். பெருமாள் கோயில்களுக்கு தானம் அளிக்கப்படும் நிலங்களின் எல்லைகளில் நடப்படும் கற்களில் விஷ்ணுவின் கரத்தில் இருக்கும் சங்கு சக்கரம் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கும். இதை திருவாழிக்கல் என்றும் கூறுவர்.

 

சேலத்தை அடுத்துள்ள கோட்டைகவுண்டன்பட்டியில் மாரியம்மன் கோயில் அருகில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கல்லின் உயரம் 90 செ.மீ., அகலம் 50 செ.மீ., வாமனன் உருவம், புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டு இருந்தது. வாமனன் உயரம் 35 செ.மீ., அகலம் 20 செ.மீ., ஆக உள்ளது. இதுவும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தான் என்கிறார்கள்.

 

வாமனின் இடது கையில் குடையும், வலது கையில் கமண்டலமும், மேற்பகுதியில் சூரியனும், பிறை நிலாவும் காட்டப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக்கூடாது என்பது இதன் பொருளாகும்.

 

இப்போதுபோல் ஏரி, குளங்களின் நிலங்களைக்கூட வகைதொகை இல்லாமல் ஆக்கிரமிக்கும் போக்கு கெட்டிமுதலிகள் காலத்தில் இல்லை. நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு தொடங்கப்படும் அளவுக்கு நிலக்கொள்ளையர்கள் மலிந்துவிட்ட காலம் இது. அப்போது கடவுளின் பெயரால் அச்சம் கலந்த அறத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் தமிழர்கள்.

 

பெருமாளின் ஐந்தாவது அவதாரம்தான் வாமன அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கும் வகையில் வாமனன் குள்ள வடிவம் கொண்டு, மூன்று அடி நிலம் கேட்பார். ஒரு அடியில் வானத்தையும், இரண்டாவது அடியில் பூமியையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை வைக்க இடமின்றி அந்த அடியை மகாபலியின் தலையில் வைத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.

 

(ஆமாம்… பூமியில்தானே மகாபலி சக்கரவர்த்தியும் இருந்தார். பூமியை அளந்தபோதே அதற்குள் மகாபலியும் அடங்கிவிடுவார். அப்படி இருக்கையில் மூன்றாவது அடியை ஏன் வாமனன், மன்னனின் தலையில் வைக்க வேண்டும்? என்ற சந்தேகம் எனக்கு இன்றளவும் உண்டு).

 

அதன் அடிப்படையில் பெருமாள் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுத்ததற்காக எல்லைகளில் வாமன உருவம் செதுக்கப்பட்ட கற்களை நட்டு வைத்துள்ளனர். நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்கவும் இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளதாக ஆறகழூர் வெங்கடேசன் கூறினார்.

 

– நாடோடி