Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

 

பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.

 

நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன. அதில் பெரியார் பல்கலையும் சிக்கிக்கொண்டு தவிக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.

தங்கவேல்

ஒரே பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களை, நிர்வாக அதிகாரிகளை வேறு பிரிவுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என்று பல்கலை ஆசிரியர்கள் தரப்பில் இருந்தே பலமுறை சொல்லி வந்த நிலையில், 29 பணியாளர்களை திடீரென்று நேற்று (ஆகஸ்ட் 28, 2018) வெவ்வேறு பிரிவுக்கு இடமாறுதல் செய்து பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் தங்கவேல் பதிவாளராக கூடுதல் பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை இது.

 

இடமாறுதலை வரவேற்கும் பலரும், அதில் பல்வேறு உள்குத்துகள் அரங்கேறியிருப்பதாக உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கின்றனர். வரும் நாள்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் கிளர்ந்து எழக்கூடும் என்றும் தெரிகிறது. அந்த உள்குத்துகள் என்னென்ன…

முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ள தற்கொலை குறிப்பில், முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் மணிவண்ணன், ‘மூளை’ என்ற அடைமொழியுடன் சுட்டப்பட்டுள்ள டீன் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவல கண்காணிப்பாளர்கள் குழந்தைவேலு, நெல்சன், ராஜமாணிக்கம், ஸ்ரீதர் ஆகிய 7 பேரும்தான் தன் சாவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பல்கலையில் பணி நியமன கோப்புகள் மாயமானதில் அலுவலக கண்காணிப்பாளர்கள் குழந்தைவேலு, நெல்சன் ஆகியோருக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக அங்கமுத்து மறைவுக்கு முன்னர் கைப்பட புகார் கடிதமும் கொடுத்துள்ளார்.

அப்படி புகாரில் சிக்கிய நெல்சன் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். கண்காணிப்பாளர் குழந்தைவேலுவும் தேர்வாணையர் அலுவலகத்தில் வினாத்தாள் பிரிவில் 8 ஆண்டுகளாக காலம் தள்ளி வருகிறார். இதைவிடக் கொடுமை என்னவெனில், செல்வராஜ் என்பவர் தேர்வு முடிவுகள் வெளியிடும் பிரிவிலேயே கடந்த 15 ஆண்டுகளாக ஒருமுறைகூட இடமாறுதலில் செல்லாமல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறார்.

 

யார் யார் எந்தெந்த பிரிவில் தொடர வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் பல்கலை மேல்மட்டத்தினர் மட்டுமின்றி, சுயநிதி கல்லூரி தாளாளர்களின் விருப்புரிமையும் அடங்கியிருப்பதாகவும் பெரியார் பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.

நெல்சன், குழந்தைவேலு

அதேநேரம், இப்போது இடமாறுதல் செய்யப்பட்ட 29 பணியாளர்களில், மீராதேவி, பிரபு, கிருஷ்ணவேணி, சிவகுமார், சிவராமன், சுசீலா, லாவண்யா ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முறை இடமாறுதல் செய்யப்பட்டிருக்கும் கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது. இதில் ஓர் ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே ஒரே பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

 

இந்த இடமாறுதலின் பின்னணியில் முக்கியமான சதிதித்திட்டமும் இருக்கலாம் என்ற யூகங்களும் எழாமல் இல்லை. இடமாறுதல் சூட்சுமங்கள் குறித்து இரண்டு சங்கங்களையும் சாராத பேராசிரியர்கள் சிலர் விரிவாகவே நம்மிடம் பேசினார்கள்.

ராஜமாணிக்கம், ஸ்ரீதர்

”பெரியார் பல்கலையில் பணியாற்றும் ஊழியர்களில் 18 பேர் மட்டும் பெரியார் பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரி நிர்வாகப்பணியாளர்கள் முன்னேற்றச்சங்கம் என்ற பெயரில் செயல்படுகின்றனர். அந்த சங்கத்தின் தலைவராக விஷ்ணுமூர்த்தி இருந்து வருகிறார். இந்த இடமாறுதல் உத்தரவே முழுக்க முழுக்க விஷ்ணுமூர்த்தியின் சங்கத்திற்கு ஆதாயம் அளிக்கக்கூடிய அல்லது ‘எல்லாவற்றிலும்’ கைதேர்ந்த அவர்களை வைத்துக் கொண்டால் பல்கலையின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் நடந்துள்ளது.

 

பதிவாளர் அலுவலகத்தில் (ஆர்5) ஆசிரியர் தொகுதி பிரிவில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம், ‘வளம் கொழிக்கும்’ கிளெய்ம்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜமாணிக்கம் இருந்த பிரிவுக்கு பெண் உதவி பதிவாளரான பாரதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவரை மட்டும் அங்கே நியமித்தால் ஆசிரியர்களை வளைப்பதில் சிக்கல் நேரக்கூடும் என்பதால், அதே பிரிவுக்கு விஷ்ணுமூர்த்தியின் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும், திட்டமும் விரிவாக்கமும் பிரிவில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் மோகன் என்பவரை மாறுதல் செய்துள்ளனர்.

 

கடந்த 10 ஆண்டுகளாக ஆர்6 பிரிவில் காலம் தள்ளிய ஸ்ரீதரை கல்வி மற்றும் விரிவாக்கம் பிரிவுக்கு மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு முன்னேற்ற சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய விஷ்ணுமூர்த்தியையே நியமித்துள்ளார் பதிவாளர். முக்கிய பிரிவுகளுக்கு மாறுதல் பெற்ற விஷ்ணுமூர்த்தி உள்ளிட்ட பலரும் பதிவாளர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த இடமாறுதலில் சாதிய பின்னணிக்கும் முக்கியத்துவம் உள்ளது.

விஷ்ணுமூர்த்தி, செல்வராஜ்

இந்த பாரபட்சமான இடமாறுதல்கள் ஒரு விஷயத்தை தெளிவாக்குகின்றன. ஒன்று, புதிய ஊழல்களை அரங்கேற்ற ஏதுவாக இருக்கும். அல்லது, ஏற்கனவே நடந்த முறைகேடுகளை மூடி மறைக்கவும் பயன்படும்.

 

சார்….இப்போதுள்ள துணைவேந்தர் குழந்தைவேல் கல்வித்தளத்தில் கெட்டிக்காரர். ஆனால் பல்கலை நிர்வாகம் என்பது அவருக்கு ரொம்பவே புதியது. எல்லா நிர்வாக ஊழியர்களுக்கும் எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என்று அவரே சொன்னார். அதை வரவேற்கிறோம். ஆனால், இங்குள்ளவர்கள் துணைவேந்தருக்கே தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்யும்போது அவருடைய பெயரும்தானே சேர்ந்து கெடும்? பதிவாளர் (பொ) தங்கவேல் இப்போதுள்ள போட்டுள்ள இடமாறுதல் உத்தரவின் முழு பின்னணியும் துணைவேந்தருக்கு தெரிந்திருக்குமா என்பதுகூட சந்தேகம்தான்,” என்றனர்.

 

முக்கியத்துவம் வாய்ந்த பதிவாளர் அலுவலகத்தின் நிர்வாக வசதிக்காகத்தான் உதவி பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பதிவாளர் அலுவலகத்தில் உதவி, துணை பதிவாளர்கள் நியமிக்கப்படாத விந்தையையும் பல்கலை வட்டாரத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

தண்ணீருக்குள் அமிழ்த்து வைக்கப்பட்ட பந்து மேலே வந்துதானே ஆகவேண்டும்!

 

– பேனாக்காரன்.