Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மழையால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 610 – 6 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோஹித் ஷர்மா 102 ரன்களும், கேப்டன் விராட் கோலி 213 ரன்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நான்காம் நாளான இன்று (நவம்பர் 27, 2017) 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமால் 61 ரன்களும், சுரங்கா லக்மல் 31 ரன்களும் எடுத்தனர்.

அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அஷ்வின் சாதனை:

இலங்கையின் காமகே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். 54 போட்டிகளில் விளையாடி இச்சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.