நடிகர் ரஜினிகாந்த், தான் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் இன்று (நவம்பர் 29, 2017) தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ். அவர் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்,” என்றார்.
மேலும், ”ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று அவர் அரசியல் முடிவுகள் குறித்து எதுவும் அறிவிக்கப் போவதில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்,” என்றும் கூறினார்.
முன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் மனைவி லதா, அரசியல் கட்சி தொடங்குவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்றார். கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுக் கிடக்கு. போர் வரட்டும் பார்க்கலாம். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள்’ என்று தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.
இதனால் அவருடைய ரசிகர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, அவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்றும், அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.
இது ஒருபுறம் இருக்க, சில நாள்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஊடகத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த், ”அரசியலில் இப்போது இறங்க வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லை,” என்று கூறினார். இந்நிலையில், ஜனவரி மாதம் ரஜினி புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற அவருடைய சகோதரரின் பேச்சு, ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம் நெட்டிஸன்கள் வழக்கம்போல் இந்த அறிவிப்பையும் கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
ஒருவர், ‘ஏன் அப்போதுதான் 2.0 படம் ரிலீஸ் ஆகப்போகுதா?’ என்றும், இன்னொருவர், ‘எந்த ஆண்டு ஜனவரி மாதம் என்று சொல்லவில்லையே’ என்றும் கேலியாக பதிவிட்டுள்ளனர்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய போர் அறிவிப்பு குறித்தும் கிண்டல் செய்துள்ளனர். மனுநீதி என்ற படத்தில் நடிகர் வடிவேலு, முரளிக்கு பெண் பார்க்கப்போகும் இடத்தில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், ”முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகியிருக்க வேண்டியவ, இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா…” என்பார்.
அந்தக் காட்சியை ரஜினியின் அரசியல் வருகையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.