Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

 

யுவராஜ்

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டம்
ஓமலூரைச் சேர்ந்த சித்ரா – வெங்கடாசலம்
தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23).
பொறியியல் பட்டதாரி.
கடந்த 2015ம் ஆண்டு
ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால்
கொடூரமாக கழுத்து அறுத்துக்
கொலை செய்யப்பட்டார்.
அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில்
சடலத்தை வீசிவிட்டுச்
சென்றுவிட்டது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த
கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த
கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த
சுவாதியை காதலித்ததால், அவரை
கொடூரமாக கொலை செய்திருப்பது
விசாரணையில் தெரிய வந்தது.

 

இதுகுறித்த வழக்கில்,
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை
நிறுவனத் தலைவர் யுவராஜ்,
கார் ஓட்டுநர் அருண், அருள் செந்தில்,
செல்வகுமார், குமார் என்கிற சிவகுமார்,
சங்கர், செல்வராஜ், ஜோதிமணி,
ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார்,
சுரேஷ், பிரபு, கிரிதர், தங்கதுரை, அமுதரசு,
சந்திரசேகரன் ஆகிய 17 பேரை
சிபிசிஐடி காவல்துறையினர்
கைது செய்தனர்.

வழக்கு விசாரணையில்
இருக்கும்போதே சொத்து தகராறில்
ஜோதிமணியை அவருடைய கணவரான
சந்திரசேகரன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
செய்து விட்டார். பிணையில் வெளியே
வந்த அமுதரசு தலைமறைவாகி விட்டார்.
அதனால் இவர்கள் இருவரையும் தவிர்த்து
யுவராஜ் உள்ளிட்ட மற்ற 15 பேர் மட்டும்
தொடர்ந்து விசாரணைக்கு
ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.
அமுதரசு மீது இதே வழக்கு
தனியாக நடந்து வருகிறது.

 

இந்த வழக்கில் சாட்சி விசாரணை,
ஆரம்பத்தில் நாமக்கல் மாவட்ட முதன்மை
நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர்,
மதுரை மாவட்ட வன்கொடுமை
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கோகுல்ராஜை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட டாடா சபாரி கார்

கோகுல்ராஜ் தாயார் சித்ரா தரப்பில்
பவானியைச் சேர்ந்த பிரபல
வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வாதாடினார்.
யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில்
மதுரையைச் சேர்ந்த பிரபல கிரிமினல்
வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ
ஆஜராகி வாதாடினார்.

 

இருதரப்பு வாதங்களும்
கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முடிந்து,
தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கறிஞர் மோகன்

இதையடுத்து,
கடந்த 5.3.2022ம் தேதி இந்த
வழக்கில் யுவராஜ், அருண்,
குமார் என்கிற சிவகுமார், செல்வராஜ்,
ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார்,
பிரபு, கிரிதர், சந்திரசேகரன் ஆகிய
10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி
சம்பத்குமார் தீர்ப்பு அளித்தார்.

 

அதேநேரம்,
குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை
எனக்கூறி அருள்செந்தில், செல்வகுமார், சங்கர்,
சுரேஷ், யுவராஜின் தம்பி தங்கதுரை
ஆகிய ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள்
மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படும்
என்றார் நீதிபதி சம்பத்குமார்.

கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ

கடந்த 8.3.2022ம் தேதி, குற்றவாளிகள் 10 பேருக்கும் மாலை 3.30 மணியளவில் தண்டனை விவரங்களை நீதிபதி வாசித்தார்.

 

முதல்குற்றவாளி யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார் நீதிபதி சம்பத்குமார். அதாவது அவர், இறுதிமூச்சு உள்ளவரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கொலை குற்றம், ஆள்கடத்தல், குற்றமுறு சதி உடன் இணைந்த வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இதே குற்றங்களின் கீழ் கார் ஓட்டுநர் அருண் (ஏ2), குமார் என்கிற சிவகுமார் (ஏ3), சதீஸ்குமார் (ஏ8), ரகு என்கிற ஸ்ரீதர் (ஏ9), ரஞ்சித் (ஏ10), செல்வராஜ் (ஏ11) ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு அளித்தார்.

 

அதேபோல், பிரபு (ஏ13), கிரிதர் (ஏ14) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் பொய் சாட்சியம் அளித்தது ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் இருவருக்கும் கூடுதலாக தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

 

மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு (ஏ12) ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

 

 • வழக்கின் முந்தைய நிகழ்வுகள்:

 

 • திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில்
  பி.இ., முடித்திருந்த கோகுல்ராஜ்,
  கடந்த 23.6.2015ம் தேதி தனது தோழி
  சுவாதியைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
  மலைக்கோயிலில் இருவரும் சந்தித்துப்
  பேசிக்கொண்டு இருந்தனர்.
  அன்று இரவு கோகுல்ராஜ்
  வீடு திரும்பவில்லை.
சுவாதி
 • கோயிலில் நெருங்கி அமர்ந்து
  பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த
  யுவராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள்
  சுவாதியின் செல்போனை பறித்துக்கொண்டு,
  அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
  கோகுல்ராஜை மட்டும்
  ‘தீரன் சின்னமலை பேரவை’ என்று
  எழுதப்பட்டிருந்த சபாரி காரில்
  கடத்திச் சென்றுவிட்டனர்.

 

 • மகன் காணாமல் போனதாக
  கோகுல்ராஜின் தாயார் சித்ரா,
  24.6.2022ம் தேதி திருச்செங்கோடு
  நகர காவல்நிலையத்தில்
  புகார் அளிக்கச் சென்றார்.
  ஆனால் அன்று மாலை,
  அவருடைய மகன் தலை வேறு உடல்
  வேறாக நாமக்கல் மாவட்டம் கிழக்கு
  தொட்டிப்பாளையம் அருகே ரயில்
  தண்டவாளத்தில் சடலமாகக்
  கிடப்பதாக தகவல் கிடைத்தது.

 

 • உடற்கூராய்வில் கோகுல்ராஜ்,
  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது
  தெரிய வந்தததால் கொலை வழக்காக
  பதிவு செய்யப்பட்டது.
வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன்
 • விடுதலை சிறுத்தைகள் கட்சி,
  பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட
  இயக்கங்கள் கோகுல்ராஜ்
  ஆணவக்கொலைக்கு
  நீதி கேட்டு போராடின.

 

 • யுவராஜ் உள்ளிட்டோர் சேர்ந்துதான்
  கோகுல்ராஜை கொலை
  செய்திருப்பதாகக் கூறி
  திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா
  முக்கிய குற்றவாளிகளை கைது செய்திருந்தார்.
  வழக்கு விசாரணையில் இருந்தபோதே
  முகாம் அலுவலகத்திலேயே
  விஷ்ணுபிரியா, செப். 18, 2015ம் தேதி
  திடீரென்று தற்கொலை
  செய்து கொண்டார்.

 

 • அதன்பிறகு இந்த வழக்கின்
  தொடர் விசாரணை சிபிசிஐடி
  காவல்துறைக்கு மாற்றப்பட்டு,
  தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

 

 • சம்பவம் நடந்து தொடர்ந்து
  100 நாள்களுக்கு மேலாக காவல்துறையிடம்
  பிடிபடாமல் போக்குக் காட்டி வந்த யுவராஜ்,
  அக். 11, 2015ம் தேதி சிபிசிஐடி காவல்துறையில்
  நேரில் சரண் அடைந்தார். அதற்கு முன்பு
  அவர் ஆடியோ, வீடியோ பதிவுகள் மூலம்
  காவல்துறைக்கு சவால் விட்டு பேசியிருந்தார்.

 

 • கடந்த 30.8.2018ம் தேதி அன்று,
  நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்
  இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை
  தொடங்கியது. நீதிபதி இளவழகன்
  முன்னிலையில் விசாரணை நடந்தது.
  கோகுல்ராஜ் தாயார் சித்ரா தரப்பில்,
  சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்
  கருணாநிதி ஆஜராகி வாதாடினார்.
  யுவராஜ் தரப்பில் மதுரையைச் சேர்ந்த
  ஜிகே என்கிற கோபாலகிருஷ்ண
  லட்சுமண ராஜூ ஆஜராகி வாதாடினார்.

 

 • இந்த வழக்கில் மொத்தம்
  17 பேர் கைது செய்யப்பட்டனர்.
  இவர்களில் சந்திரசேகரனும், ஜோதிமணியும்
  கணவன், மனைவி ஆவர்.
  சொத்து தகராறில் சந்திரசேகரன்
  துப்பாக்கியால் சுட்டதில் ஜோதிமணி
  உயிரிழந்தார். ஜாமினில் விடுதலை
  ஆகியிருந்தபோது கைது செய்யப்பட்டவர்களில்
  ஒருவரான அமுதரசு தலைமறைவானார்.
  இதனால் அமுதரசு, இறந்து போன ஜோதிமணி
  ஆகியோர் தவிர கடைசி வரை யுவராஜ்
  உள்ளிட்ட 15 பேர் மட்டுமே விசாரணைக்கு
  ஆஜர் படுத்தப்பட்டனர். தற்போது
  அமுதரசு மீது தனியாக இதே வழக்கு
  நடந்து வருகிறது.

 

 • அரசுத்தரப்பில் மொத்தம் 116 சாட்சிகள்
 • சேர்க்கப்பட்டு இருந்தனர்.
  1318 பக்க குற்றப்பத்திரிகை
  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
  500 சாட்சி ஆவணங்களும்,
  74 சான்று ஆவணங்களும் நீதிமன்றத்தில்
  பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

 

 • திருச்செங்கோடு கோயிலில் இருந்து
  கோகுல்ராஜை கடத்திச் சென்றதை
  நேரில் பார்த்த ஒரே சாட்சியான சுவாதி,
  பிறழ் சாட்சியம் ஆனார். மேலும்
  சில அரசுத்தரப்பு சாட்சிகளும்
  பல்டி அடித்தனர். நாமக்கல்
  நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால்
  சாட்சிகள் மிரட்டப்படலாம் என்பதால்
  இந்த வழக்கை மதுரை வன்கொடுமை
  சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி
  கோகுல்ராஜின் தாயார் சித்ரா
  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
  அதன்படி இந்த வழக்கு நாமக்கல்
  நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு
  நீதிமன்றத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு
  செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது.

 

 • அதேபோல்,
  சித்ரா தரப்பில் ஆரம்பத்தில்
  ஆஜராகி வந்த வழக்கறிஞர்
  கருணாநிதியை நீக்கிவிட்டு,
  அரசுத்தரப்பு வழக்கறிஞராக
  பவானி பா.மோகனை நியமிக்கும்படி
  சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்
  சந்தியூர் பார்த்திபன்
  பெரிதும் மெனக்கெட்டார்.
  அவருடைய ஆலோசனையின்பேரில்
  சித்ராவும், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில்
  முறையிட்டதை அடுத்து, ப.பா.மோகனை
  அரசுத்தரப்பு வழக்கறிஞராக
  நியமித்தது உயர்நீதிமன்றம்.

 

 • கொலையை நேரில் பார்த்த சாட்சிகள்
  இல்லாமலேயே முக்கிய குற்றவாளிகளுக்கு
  சாகும்வரை ஆயுள் தண்டனை என்னும்
  கடுமையான தீர்ப்புப் பெறப்பட்டுள்ள
  அரிதினும் அரிதான வழக்குகளில்
  இதுவும் ஒன்றாகும்.
  அதுவும் அரசுத்தரப்பின் முக்கிய
  சாட்சியான சுவாதி, சிசிடிவி பதிவுகளில்
  கோகுல்ராஜுடன் இருப்பது
  தான் அல்ல என்றும்,
  கோகுல்ராஜை சக மாணவன் என்ற
  அளவில் மட்டுமே தெரியும் என்றும்,
  சம்பவத்தன்று திருச்செங்கோடு
  கோயிலுக்குச் செல்லவில்லை என்றும்
  பிறழ் சாட்சியம் அளித்த நிலையிலும்,
  இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு
  கடுமையான தண்டனை
  பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: