”எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,” என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது.
அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறிப்போனது. கிட்டத்தட்ட, கள் அருந்திய குரங்குகள்போல.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே அணியாக இணைந்து விட்டாலும், பன்னீர்செல்வம் தரப்புக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய அளவில் கவனிப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தங்கள் மனக்குமுறல்களை அவரிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.
குறிப்பாக கே.பி.முனுசாமி, செம்மலை ஆகியோர் பன்னீரிடம் ரொம்பவே முறுக்கிக் கொண்டு இருப்பதாகத்தான் கேள்வி. ஏனெனில் அவர்கள் இருவருமே, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவதில் ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் காட்டவில்லை.
ஆனால், பாஜக முதலாளிகளின் அழுத்தம் காரணமாக பன்னீர்செல்வம் எடப்பாடியாருடன் இணைய வேண்டியதாயிற்று. உண்மையில், எடப்பாடி பழனிசாமிக்கும் அதே மனநிலைதான். அப்போது டிடிவி தினகரன், சசிகலா ஆசீர்வாதத்தில் கட்சியையும், ஆட்சியையும் ஆறு மாத காலமாக எடப்பாடியார் ஓரளவு திறம்பட சமாளித்துதான் வந்தார்.
இருவரும் ஓரணியில் இணைந்தால்தான் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சி க்கலின்றி பெற முடியும் என்பதுதான் பாஜக கொடுத்த ஆலோசனை. ஆனாலும், கடந்த பிப்ரவரி மாதம் தனது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பன்னீர்செல்வம் கொண்டு வந்ததுடன், எதிர்த்து வாக்களித்ததால் அதற்கு வஞ்சம் தீர்க்க எடப்பாடி பழனிசாமியும் மனதுக்குள் கருவிக்கொண்டே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் அவர் பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைவதில் பட்டும்படாமல் இருந்தார் என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டால், அதன்பின்னர் எப்படியாவது பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்பதும் எடப்பாடியாரின் செயல்திட்டங்களில் ஒன்று.
ஆனால் அவராக எதையும் நேரடியாக சொல்ல மாட்டார். அவருடைய மனசாட்சியாக இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் ஆகியோர் செயல்படுத்துவார்கள்.
எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குதான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கடுத்த இரண்டாவது நாளே, மதுரை தோப்பூரில் ஓ.பன்னீர்செல்வம் இல்லாத கட்சி நிகழ்வை நடத்திக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா, இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கான வெற்றி விழா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்னவோ, அமைச்சர் உதயக்குமார்தான். நினைவுக் கம்பத்தில்கூட ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்படவில்லை.
பன்னீருக்கே இந்த நிலை என்றால், அவருடைய ஆதரவாளர்களின் நிலையை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதுரையில் விழா. ஆனால் மதுரையில் உள்ள பன்னீரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை. இதில் ஏதும் சர்ச்சை ஆகிவிடும் என்பதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள், அவசர அவசரமாக நினைவுத்தூண் கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரையும் வேண்டாவெறுப்பாக பொறித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி, நேற்று (நவம்பர் 25, 2017) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய சகாக்கள் மீது புகார் புஸ்தகம் வாசிக்கத்தான் சென்றார் என்கிறார்கள்.
பாஜகவின் ஏவல் வேலைகளை சென்னையில் இருந்து செய்து முடிப்பது மைத்ரேயன் எம்பிதான். அவர் முன்பு, பாஜகவில் இருந்து வந்தவர் என்பதால், அக்கட்சியின் முக்கிய தலைகளுடன் இன்னும் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறார்.
அவர் மீண்டும் பாஜகவுக்கே திரும்பும் மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அப்படி தாய்க்கட்சிக்கு திரும்பினார் என்றால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய முக்கிய தளபதிகளையும் இழுத்துச் செல்லும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முப்பெரும் விழா விவகாரம் வேறு பாதையில் திசை திரும்புவதை புரிந்து கொண்ட அமைச்சர் ஆர்பி உதய க்குமார், ‘இரட்டை இலையில் ஓர் இலை இபிஎஸ்; இன்னொரு இலை ஓபிஎஸ். எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை என்று டைமிங் ஆகவும், ரைமிங் ஆகவும் வசனம் பேசினார். ஊஹூம். ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை.
ஓபிஎஸ் தரப்பு, அமைச்சர் உதயக்குமார் மீது உச்சக்கட்ட சினத்தில் இருக்கிறார்கள். ஏனெனில், அவர் ஏற்பாட்டில் நெல்லை, தேனியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களிலும், தேவர் சிலைக்கு மலை அணிவிக்கும் நிகழ்விலும்கூட ஓ.பன்னீர்செல்வமும், அவருடைய ஆதரவாளர்களும் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். இது எல்லாமே, எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது ஆழம் பார்த்த வேலைகள்தான் என்பதை ஓபிஎஸ் தரப்புக்கும் புரியாமல் இல்லை.
இப்படி ஒதுக்கும் வேலைகள் தொடர்ந்ததால்தான் மைத்ரேயன் வெடித்துக் கிளம்பிவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஓபிஎஸ் ஆதரவாளரான தொழில்நுட்ப அணியின் தலைமை நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன், ‘யாருக்கும் அழைப்பும் இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உள்பட. மனங்கள் உருண்டு கொண்டுதான் இருக்கும்போல,’ என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மதுரை முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதைத்தான் அவர் இப்படி கூறியிருந்தார்.
தொழில்நுட்பப் பிரிவின் இன்னொரு நிர்வாகியான ஹரி பிரபாகரன், ‘அதிமுக தொண்டன் என்பவன் எப்போதும் தலைமைக்குக் கட்டப்பட்டவன். கட்டப்பட்ட கைகளோடு காத்திருக்கிறோம். தலைவரின் பதிலுக்காக,’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இதுபோன்ற அதிருப்திகள் இப்போது பகிரங்கமாக வெளிப்பட ஆரம்பித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைப் பற்றி இன்னொரு தகவலும் கசிகிறது. அதாவது அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சசிகலா முகாமிற்கு மாறலாம் என்கிறார்கள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதல் கூவத்தூர் விடுதியில் பலன் அடைந்த எம்எல்ஏக்களில் பெரும்பான்மையினர் மன்னார்குடி கும்பலின் மீது இன்னும் பாசகமாகத்தான் இருக்கிறார்களாம்.
அதேநேரம் டிடிவி தினகரனை மட்டும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்களாம். ஒருவேளை, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தியானம், தர்ம யுத்தம் என்று நாடகம் நடத்தினால் அப்போது தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் திட்டமும் எடப்பாடியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு ஆவதையொட்டி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவு அஞ்சலி பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அந்த நாளில், பன்னீர்செல்வம் இன்னொரு தர்ம யுத்தத்தைத் (!) தொடங்கினாலும் ஆச்சர்யமில்லை.
– அகராதிக்காரன்.