தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம்.

ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் டாக்டர் மதிவேந்தன், ஓர் அமைச்சராக தனக்கென வலுவான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை கள விசாரணையில் அறிய முடிந்தது.

கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த முதல் அமைச்சரவையில் 36 வயதே ஆன மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து வனத்துறை அமைச்சரானார். அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து அமைச்சரவை மாற்றத்தின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆனார் மதிவேந்தன்.
ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது.
முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா, கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று சொன்னதோடு சரி. ஆட்சியில் இருந்தவரை அத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.
மதிவேந்தன் அமைச்சரான பிறகு, தொகுதி மக்களின் நீண்ட கால கனவான கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார். 854 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தால், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், அத்தனூர், மல்லசமுத்திரம் உள்பட 600க்கும் மேற்பட்ட சிற்றூர்கள் பயன்பெறுகின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், போதமலை பழங்குடி மக்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள் இருக்கின்றன. மருத்துவம், தரமான கல்வி வசதி வேண்டுமானால் தினமும் 10 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் நடந்துதான் நகரத்திற்கு வர வேண்டும். பிரசவம் உள்ளிட்ட அவசர மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில், பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டிதான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் செல்வதில் பல நேரம் உயிரிழப்புகள்கூட ஏற்பட்டு உள்ளன.
போதமலை பழங்குடி மக்களுக்கு, முதன்முதலாக 140 கோடி ரூபாயில் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார் அமைச்சர் மதிவேந்தன். இதில், ராஜேஷ்குமார் எம்.பி.யின் பங்களிப்பும் முக்கியமானது. வடுகத்தில் இருந்து கீழூர் வழியாக மேலூருக்கு ஒரு சாலையும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரை மற்றொரு சாலையும் என 31 கி.மீ. தூரத்திற்கு போடப்பட்டுள்ளது. இந்த சாலை வசதியால் போதமலை பழங்குடி மக்களுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் என்றாலே ஓட்டு கணக்கு இல்லாமல் இருக்காது. எனினும், அரசியல் ஆதாயம் கருதாது சில நூறு குடும்பங்களே வசிக்கும் போதமலை பழங்குடி மக்களுக்காக சாலை வசதி செய்து கொடுத்தது அமைச்சரின் ‘பெஞ்ச் மார்க்’ சாதனை.
அதேபோல, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு பகுதியில் 800 விவசாயிகளுக்கு நிலத்தை அளந்து பட்டா வழங்க வேண்டும் என்று 50 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், அந்தப் பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளதை அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

”அமைச்சர் மதிவேந்தன், கணினி தொழில்நுட்பம் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ராசிபுரம் ஆண்டகளூர் கேட் அரசுக்கல்லூரி வளாகத்தில், 42 கோடியில் டைடல் பார்க் கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற டைடல் பார்க்குகள், பெரு நகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், ராசிபுரத்திற்குக் கொண்டு வந்ததில் அமைச்சரின் பங்கு அளப்பரியது.
ராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம் மின்சார பாதையில் உள்ள 11 கிராமங்களில் 14 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராசிபுரத்தில் 54 கோடியில் புதிதாக, மாவட்ட அரசு மல்டி ஷ்பெஷாலிட்டி தலைமை மருத்துவமனை கொண்டு வந்துள்ளார். 6 தளங்கள் கொண்ட இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. இனி உயர் சிறப்பு சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களைத் தேடி ஓட வேண்டியதில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், நகர சாலை பணிகளை அமைச்சர் ஆன சூட்டோடு முழுமையாக நிறைவேற்றியபோதே மக்களின் அபிமானத்தையும் முழுமையாகப் பெறத் தொடங்கிவிட்டார் மதிவேந்தன்.
பட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களையும் கவனத்தில் கொண்டு, புதிதாக பட்டுக்கூடு ஏல மையமும் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்கிறார்கள் ராசிபுரம் தொகுதி மக்கள்.
திமுக நிர்வாகி ஒருவர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைக் கூறினார்…
”கூனவேலம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகனுக்கு, பிறந்ததில் இருந்தே தாடை எலும்பு கோணலாக இருந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம்தான் சரி செய்ய முடியும். இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தனிடம் கூறி உதவி கேட்டேன். உடனடியாக அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
சுகாதாரத்துறை அமைச்சரும் எங்களை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உரிய சிகிச்சை அளிக்கும்படி அதன் டீனுக்கும் உத்தரவிட்டார். இதற்கிடையே, அந்தச் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் நல்லபடியாக சிகிச்சை முடிந்தது. என்றாலும், அமைச்சரிடம் உதவி என்று கேட்டால் தன்னால் முடிந்த அளவுக்கு உடனடியாக செய்து கொடுத்து விடுகிறார் என்பதற்காகச் சொல்கிறேன்.

பெரும்பாளி மலை கிராமத்தில் 50 குடும்பத்தினர் குடிநீர் வசதி இல்லாமல் தடுமாறி வந்தனர். இதுகுறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதை அடுத்து, அங்கு மேல்நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளார். மக்களிடம் அதிர்ந்துகூட பேசாத மென்மையானவர்,” என்றார் அந்த மூத்த உடன்பிறப்பு.
இவை மட்டுமின்றி, வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இவை ஒருபுறம் இருக்க, அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் மற்றும் மா.செ. ராஜேஷ்குமார் மீது வணிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
”ராசிபுரம் நகர விரிவாக்கத்திற்காக தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் காலம் காலமாக ராசிபுரம் பேருந்து நிலையத்தை நம்பி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளி, நகை வர்த்தகர்கள் முதல் சில்லரை வணிகர்கள், சாலையோர கடைக்காரர்கள் வரை பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் தொலைவில் இருப்பதால் இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,” என்கிறார்கள்.
இது தொடர்பாக, தீவிர பரப்புரையில் இருந்த அமைச்சர் மதிவேந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
”ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தபோது ராசிபுரம்தான் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி. இந்த நகரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதன்மூலம் அரசிடம் நிதியைப் பெற்று உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, மக்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளூரிலேயே கிடைக்கச் செய்திட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
அதைக் கருத்தில் கொண்டே அணைப்பாளையத்தில் புறநகர் பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்போதுள்ள ராசிபுரம் பேருந்து நிலையம் ஒருபோதும் மூடப்படாது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். அது, நகரப் பேருந்து நிலையமாக வழக்கம்போல் இயங்கும். இப்போதும் வெளியூர், வெளிமாவட்ட பேருந்துகள் போக்குவரத்து நெரிசல் கருதி, ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதில்லை.
தற்போது வெளிமாவட்டம் செல்லும் பயணிகள் ஆண்டகளூர் கேட் சென்றுதான் ஏறிச்செல்கின்றனர். அதற்கு மாற்றாக இனி, மதுரை, திருச்சி, சேலம், பெங்களூர் உள்பட வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் அணைப்பாளையம் புறநகர் பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்தில் ஏறிச்செல்லலாம்.
புறநகர் பேருந்து நிலையத்தில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ராசிபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு எந்நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். சிலர் தவறாக புரிந்து கொண்டு இத்திட்டத்தை விமர்சனம் செய்கின்றனர்,” என்று பொறுமையாக விளக்கம் அளித்தார்.
ராசிபுரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார் திமுக வேட்பாளரான அமைச்சர் மதிவேந்தன். தொகுதியில் அவர் மீது மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைக் காண முடிந்தது. மதிவேந்தன், ராசிபுரத்தை மீண்டும் தக்க வைப்பாரா? என்பது மே 4ம் தேதி தெரியும்.
- பேனாக்காரன்
