Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!; ”விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்”

சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை

”பாம்புகள் பற்றிய தவறான அபிப்ராயங்களால்தான் அவற்றை மனிதர்கள் கொல்லத் துடிக்கின்றனர். அதைப் புரிந்து கொண்டால் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,” என்கிறார் டேவிட் மாறன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் டேவிட் மாறன். அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி அழகேஸ்வரி. ஹைம் ஸ்கை, வெண்ணிலா என இரண்டு பெண் குழந்தைகள். டேவிட் மாறன் என்று சொன்னால்கூட பலர் ஒரு கணம் யோசிக்கக் கூடும். ஆனால், ‘ஸ்னேக்’ டேவிட் என்ற அடைமொழியுடன் கேட்டால், சின்னக் குழந்தைகூட அவருடைய வீட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

இந்தக் காலத்தில் சக மனிதர் ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட ‘உச்’ கொட்டிவிட்டு கடந்து சென்று விடுவோர்தான் அதிகம். ஆனால், பாம்புகளுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் முதல் ஆளாக பறந்து சென்று மீட்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார், டேவிட்.

தன் இருப்பிடத்தை விட்டு வீடு, அலுவலகம் என தவறுதலாக நுழைந்த 3000க்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டு, அதற்குரிய வாழிடத்தில் சேர்த்திருக்கிறார்.

நள்ளிரவு நேரம். அந்த நேரத்தில் யாராவது அவசர உதவி என்று கேட்டால் மறுக்காமல் சென்று உதவுவார்களா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. இங்குதான் டேவிட் தனித்து தெரிகிறார்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது. அது கட்டு விரியனோ, கண்ணாடி விரியனோ. கடித்தால் உயிர் போய்விடும். ஈரக்குலை நடுங்க வைக்கும் அச்சம் மட்டுமே அந்த வீட்டுக்குள் இருப்பவர்களைக் கவ்வி இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நள்ளிரவு நேரம், தூக்கம் என்றெல்லாம் டேவிட் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.

அந்த வீட்டுக்குள் சிக்கிக் கொண்டிருப்பது மனிதர்கள் மட்டுமல்ல. அந்த வாயில்லா ஜீவனும்தான். அறியாமையாலோ அச்சத்தாலோ அங்குள்ளவர்கள் அந்த பாம்பை அடித்துக் கொன்று விடக்கூடாது.

அதேநேரம் பாம்பிடம் சிக்கியிருக்கும் மனிதர்களை மீட்பதும் முக்கியம். அதனால், எந்த நேரமாக இருந்தாலும் பாம்பை பிடிக்க வேண்டும் என்று போன் வந்தால் உடனடியாக கிளம்பி விடுகிறார் டேவிட். இப்படித்தான் சாதாரண டேவிட், ‘ஸ்னேக்’ டேவிட் ஆக நாமகரணம் பெற்றார்.

பாம்புகளை சக உயிரினமாக கருதி எப்போதும் வாஞ்சையுடன் பழகி வரும் டேவிட், மக்களின் அபயக்குரல் கேட்ட மாத்திரத்தில் ஓடிப்போய் உதவ வேண்டும் என்பதாலேயே அசோக் லேலன்ட் நிறுவனத்தில் தினமும் இரவு 1 மணி முதல் காலை 8 மணி வரையிலான ஷிஃப்டில் பணியாற்றுவதை அண்மைக் காலமாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

பாம்புகள் மீதான ஈர்ப்பு என்பது அவருக்கு இப்போது ஏற்பட்டதல்ல. அதிலும் ஒரு சின்ன ஃபிளாஸ்பேக் கதையைச் சொல்கிறார் டேவிட்டின் அம்மா, தேவகி. ”எல்கேஜி படிக்கும்போதே தவறுதலாக வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போதே அவனுக்கு பாம்பைக் கண்டால் பயமே இல்லை,” என்கிறார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்குள் நுழைந்த ஒரு நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, காம்பவுண்டு சுவருக்கு வெளியே சென்று விட்டுள்ளார். அதை ஆசிரியர்கள் கண்டித்ததுடன், பெற்றோரையும் அழைத்து வரச்சொல்லியுள்ளனர். ஆசிரியர்களிடமும், டேவிட்டின் எல்கேஜி வயதில் நடந்த ஃபிளாஷ்பேக்கை சொல்லி இருக்கிறார் அவருடைய அம்மா.

ஆனால், அதே பள்ளிக்கூடத்தின் ஆய்வகத்திற்கு பாம்புகள் தேவை என்றபோதுகூட பிறரால் கொல்லப்பட்ட அல்லது வேறு வகையில் மரணித்த பாம்புகளை பிடித்து வந்தே ஒப்படைத்திருக்கிறார். அறியாமல்கூட இதுவரை எந்த பாம்பையும் கொன்றிராத டேவிட், அவற்றை பத்திரமாக காப்பாற்றுவதுதான் முதல் கடமை என்கிறார்.

பாம்புகளில் எத்தனை வகை, எது எது விஷம் உடையவை, கடித்தால் என்ன செய்ய வேண்டும், பாம்புகளை எப்படிப் பிடிக்க வேண்டும் என பிஹெச்.டி பண்ணும் அளவுக்கு தகவல்களை அனுபவ ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறார், டேவிட்.

நாம் அவரிடம் பேசினோம்.

”இந்திய பாம்புகளில் ‘பிக் 4’ என்று சொல்லக்கூடிய நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே விஷம் உடையவை. கடித்தால் மரணம் நிச்சயம். தமிழகத்தைப் பொருத்தவரை ராஜநாகம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உண்டு.

நான் இதுவரை பிடித்ததிலேயே அதிகமானவை நாகப்பாம்புதான். வீடுகளில் நாகம் புகுந்துவிட்டது. அதை பிடிக்க வேண்டும் என்று எனக்கு கூப்பிடுவார்கள். அங்கு சென்றால், இன்று வெள்ளிக்கிழமை. பாம்பை அடித்தால் தெய்வக்குத்தம் ஆகிடும். அதனால்தான் உங்களைக் கூப்பிட்டோம். வேறு நாளாக இருந்தால் நாங்களே அடித்துக் கொன்றிருப்போம் என்பார்கள்.

அப்படி பலர் சொல்லும்போது எனக்கு சிரிப்புதான் வரும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளைத் தவிர மற்ற நாள்களில் பாம்பை அடித்தால் தெய்வக்குத்தம் ஆகாதா? என்று கேட்பேன். நாகப்பாம்பை மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். அதே நாகம் கடிக்க வந்தால் அடித்துக் கொல்கிறார்கள். கடவுளாக இருந்தாலும் கடிக்க வந்தால் கொன்று விடுவார்கள் மக்கள்.

இன்னும் சிலர், பாம்பு படம் எடுத்துவிட்டால் அப்புறம் எத்தனை வருஷம் ஆனாலும் எங்களைப் பழி வாங்கி விடும் என்றும் சொல்வார்கள். உண்மையில், பாம்புக்கு நினைவுத்திறன் எல்லாம் கிடையாது. பாம்பின் கண்களுக்கு நமது உருவத்தை தெளிவாகப் பார்க்கும் திறனும் கிடையாது. வெப்பத்தின் மூலமே ஓர் உருவத்தை அது அனுமானிக்கிறது.

மக்களிடம் இப்படி நாகம் பற்றியும் பிற பாம்பு இனங்கள் பற்றியும் தவறான அபிப்ராயங்கள் இருக்கின்றன. பச்சைப் பாம்பு பறந்து வந்து கண்களைக் குறிவைத்துக் தாக்கும் என்றும் சொல்கின்றனர்.

அப்படியெல்லாம் பச்சைப் பாம்புக்கு சக்தி கிடையாது. மரங்களின் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும்போது உடைந்த கிளைகள், குச்சிகள் கண்களில் குத்தி விடக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வைத்திருக்கலாம்.

நாகப்பாம்பு விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் நாகத்தைக் கொல்லக்கூடாது என்று பயமுறுத்தி வைத்ததாலோ என்னவோதான் அந்த இனம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

பாம்பு இனமே இல்லாவிட்டால் நாட்டில் எலிகள் அதிகரித்திருக்கும். அதனால் பிளேக் போன்ற கொல்லை நோய்கள் ஏற்பட்டு மனித இனமே அழிந்திருக்கும். எலிகளைக் கொல்ல இயற்கை கொடுத்த வரம்தான் பாம்புகள்.

பாம்புகளைப் பற்றிய போதிய புரிதல் வந்துவிட்டால் நாம் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளையும் வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,” என்கிறார் டேவிட்.

பாம்பு பிடிப்பாளர்களுக்கு எப்போதும் உயிர் அபாயமும் இருக்கிறது. டேவிடுக்கும் அப்படியொரு அனுபவம் உண்டு.

ஒரு வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டது குறித்து டேவிட்டுக்கு தகவல் கிடைக்கிறது. அவரும் அங்கு விரைந்து சென்று வெற்றிகரமாக, ஊடுருவிய நாகப்பாம்பை பிடித்து விடுகிறார்.

டேவிட்டின் வலது கையில் பாம்பின் தலைப்பகுதி. இடது கையில் வால் பகுதி. அங்கே இருந்த சிறுவர்கள் பாம்பை பார்க்கும் ஆர்வத்துடன் அருகில் வர, டேவிட் விலகிச் செல்ல முயற்சித்தபோது பின்னால் இருந்த மரத்தின் மீது அவருடைய கை பலமாக இடித்துக்கொண்டது.

அப்போது நழுவிய பாம்பு, சிறுவர்களை தாக்கிவிடக்கூடாது என்ற சுதாரிப்பில் அவசரமாக பாம்பின் தலையைப் பிடிக்க முயற்சிக்க, பதற்றத்தில் இருந்த பாம்பு வாயைப் பிளக்க, அதில் அவருடைய வலது கையின் ஆள்காட்டி விரல் மாட்டிக்கொண்டது.

கடிவாய் வழியாக நன்றாக விஷம் ஏறிவிட்டது. உடனடியாக மருத்துவம் பார்த்தாக வேண்டிய சூழல். அப்போதும் அந்த பாம்பை ஓசூர் ஏரி பகுதிக்குள் சென்று பத்திரமாக உலாவ விட்டுவிட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.

அவருடைய போதாத நேரமோ என்னவோ, அங்கு சிகிச்சை அளிக்கும் வசதி அன்றைய தினம் இல்லை எனக்கூற, 4 மணி நேரம் தாமதமாக தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால், அதற்குள் விஷம் விரலின் தசைநார்களை சிதைத்து விட்டிருந்தது. வேறு வழியின்றி ஆள்காட்டி விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இறுக்கமான மோதிரம் அணிந்திருந்ததால் மேற்கொண்டு விஷம் பரவாமல் விரலிலேயே தேங்கியதும் அதற்கு முக்கிய காரணம்.

டேவிட், பாம்புகளிடம் மட்டும் நேசம் காட்டுபவர் அல்ல. மிகச்சிறந்த மனிதநேயரும்கூட. அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றப்பட்டு, தையல் போடப்பட்டு இருக்கிறது. அந்த தையல்கூட பிரிக்கப்படாத நிலையில், ஒரு வீட்டுக்குள் நாகம் புகுந்துவிட்டதாக அவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அபயக்குரல். அப்போது இரவு 10 மணி.

”விரல் ஆபரேஷன் முடிஞ்சி தையல்கூட பிரிக்கலமா. என்னால வண்டி ஓட்டக்கூட முடியாதேம்மா,” என்றாரே தவிர, வர முடியாது என்று சொல்லவில்லை. ஆனால், பதற்றத்தின் உச்சியில் இருந்த அந்த பெண்ணோ, ”சார் எப்படியாவது, ஆட்டோ பிடிச்சாவது வந்துடுங்க சார்,” என்றுகூற, அந்த நேரத்தில் ஓர் ஆட்டோவைப் பிடித்து அடுத்த முக்கால் மணி நேரத்தில் அழைப்பு வந்த இடத்திற்குச் சென்று விட்டார்.

வீட்டிற்குள் இருந்த பாம்பை பிடித்து விட்டார். டேவிட் சென்று பாம்பை பிடிக்கும் வரை அவரை அழைத்த அந்தப்பெண், கையில் பச்சைக்குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியிலேயே பரிதவித்துக் கொண்டிருந்தாராம்.

”நம்மை நம்பித்தான் ஒருவர் கூப்பிடுறார். அந்த நம்பிக்கைய காப்பாத்தணும் இல்லையா… அதுமட்டுமில்ல… பாம்பு புகுந்த நேரத்தில அவங்களுக்கு வேறு எந்த உதவியும்கூட கிடைக்காது. அதனால எந்த நேரமானாலும் யார் கூப்பிட்டாலும் போய் பிடிச்சிட்டு வந்துடுவேன்,” என புன்னகையுடன் சொல்கிறார்.

விரலை இழந்த பின்னும் தொடர்கிறது அவருடைய பயணம். டேவிட்டின் தணியாத ஆர்வத்துக்கு அவருடைய மனைவி அழகேஸ்வரியின் தார்மீக ஆதரவும் முக்கிய காரணம்.

”ஒவ்வொரு முறை அவர் பாம்பு பிடிக்கப் போகும்போதும் எனக்கு உள்ளூர லேசான பயம் இருக்கும். ஆனாலும், அதை அவர் எளிதாகச் செய்து விடுவதால் இப்போது பயம் குறைந்திருக்கிறது,” என்கிறார்.

ஒரு பாம்புபிடி வீரராக அவர், பலரை பாம்பின் பிடியில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும், சிலர் அவரை ஏதோ தீண்டத்தகாதவர் போல நினைப்பதாகவும் கூறி வருத்தப்படுகிறார்.

”இப்படித்தான் ஒருமுறை வீட்டு முன்பு காருக்குள் பாம்பு புகுந்து விட்டதாக ஒரு போன் வந்தது. நானும் அங்கு சென்று பாம்பைப் பிடித்து விட்டேன். அந்த பாம்பை பிடிப்பதில் கொஞ்சம் சவாலும் இருந்தது. பாம்பை பிடித்த பிறகு அந்த வீட்டுக்காரர்களிடம் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்றபடியே உள்ளே நுழைந்தேன்.

அவர்கள் உடனே, ‘வெளியே போ…. வெளியே போ….உள்ளே எல்லாம் வரக்கூடாது,’ என்று என்னை துரத்தி விட்டனர். பாம்பு பிடித்த கையோடு உள்ளே வரக்கூடாது என்று நினைத்தார்களோ அல்லது என்னை தீண்டத்தகாதவனாக நினைத்தார்களோ தெரியவில்லை.

மூன்று மாத இடைவெளியில் அதே வீட்டில் மீண்டும் ஒருமுறை பாம்பு புகுந்து விட்டது. அப்போதும் பாம்பை பிடித்து விட்டேன். ஏதாவது செலவுக்கு காசு வேணுமா என்றுகூட கேட்டார்கள். நீங்கள் குடிக்கக்கூட தண்ணீர் தராதவர்கள். உங்களிடம் காசை எதிர்பார்க்க முடியுமா? ஒன்றும் வேண்டாம் என மறுத்துவிட்டேன்.

அதேநேரம், பாம்பு பிடித்து வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் என்னை குடும்பத்துடன் வரவழைத்து வீட்டில் விருந்து வைத்தவர்களும்கூட உண்டு,” எனக்கூறும் டேவிட், பாம்பு பிடிப்பதற்காக யாரிடமும் கட்டணம் வசூலிப்பதில்லை. அதேநேரம், தாமாக முன்வந்து கொடுத்தால் பெற்றுக்கொள்ளவும் மறுப்பதில்லை. கொடுப்பதை பெற்றுக்கொள்கிறார்.

ஒருமுறை அவர் 20 அடி நீளமான மலைப்பாம்பைக் கூட பிடித்திருக்கிறார். எனக்குப் பிறகும் என் பணி தொடரும் என்று கூறும் டேவிட், பாம்புகளைப் பிடிக்க தன் இரு மகள்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

பாம்பைப் பிடித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள், ”கடவுள் போல வந்து நல்லவேளையாக பாம்பை பிடித்து, எங்களோட உசுர காப்பாத்திட்டப்பா…” என்று சொல்லும்போது அதில் கரைந்து விடுகிறார் டேவிட்.

குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களின்போது தகுதியே இல்லாதவர்களை எல்லாம் விருது கொடுத்து கவுரவிக்கும் அரசு, டேவிட் போன்ற மீட்பர்களை வசதியாக மறந்துவிடுவதுதான் இந்த சமூகத்தின் ஆகப்பெரிய சாபக்கேடு.

பாம்புகள் மட்டுமின்றி கழுகு, குரங்கு என எந்த ஒரு வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படும்போதும் துடித்துப் போகிறார் டேவிட். காயம் அடைந்த பறவைகள், உயிரினங்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் தவறுவதில்லை.

பாம்புகளுக்காக ஒரு சரணாலயம் அமைக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய நீண்டகால ஆசை என்கிறார் ‘ஸ்னேக்’ டேவிட்.

‘ஸ்னேக்’ டேவிட்டுடன் பேச: 99943 39662.

– பேனாக்காரன்.