Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும்.

இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும் (மூன்றாம் பாலினத்தவர்கள்) விண்ணப்பிக்கலாம். அவர்கள், தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியத்தில் இருந்து அடையாள அட்டை பெற்று, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

கல்வித்தகுதி: அனைத்துப் பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை உண்டு. அச்சலுகையைப் பெற விரும்புவோர், பத்தாம் வகுப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை விண்ணப்பதாரர் படித்த பள்ளியில் இருந்து பெற்று, காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதாவது, 1.7.1999 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். அதாவது, 1.7.1993க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகையும் உண்டு.

தேர்வு செய்வது எப்படி?:

எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, உடற்திறன் போட்டி ஆகிய மூன்று வகையான தேர்வுகளின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு ஆள்தேர்வு நடைபெறும். எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களும், உடல்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்களும், சிறப்பு தகுதிக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டுகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றிருந்தால் அவற்றையும் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உடற்கூறு அளவுகள்:

உயரம் குறைந்த அளவு 170 செ.மீ. இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி பிரிவினர் 167 செ.மீ. இருந்தால் போதுமானது. மார்பளவு (அனைத்துப் பிரிவினரும்) சாதாரண நிலையில் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சை உள் வாங்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் பெற வேண்டும். பெண்கள் குறைந்தபட்ச உயரம் 159 செ.மீ. இருக்க வேண்டும்.

கடைசி தேதி:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும இணையதளமான www.tnusrbonline.org மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இன்று (டிசம்பர் 28, 2017) முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 27.1.2018. தேர்வுக்கட்டணம் ரூ.130. ஆன்லைன், நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம். அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் 31.1.2018.

மேலும் விரிவான தகவல்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.