Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

-சிறப்புக் கட்டுரை-

 

முறையான பயிற்சியும்,
முடியும் என்ற நேர்மறையான
சிந்தனையும் இருந்தால்
இயற்கை வேளாண்மையில்
உறுதியாக சாதிக்க முடியும்
என்கிறார் சேலம் ஷாஜஹான்.

சேலம் கோட்டையைச் சேர்ந்த ஷாஜஹான் (62), எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறார். விவசாயப் பின்னணி ஏதுமில்லை. பல்வேறு சுயதொழில்களைச் செய்து வந்தவர் கடைசியாக, ஆடியோ தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நன்றாக வளர்ந்த நிலையில், தன் நண்பர்களிடம் விட்டுவிட்டு முழுநேர விவசாயத்திற்கு மாறினார்.

 

சேலம் மாவட்டம் அடிமலைப்பட்டி கிராமத்தில் போதமலை அடிவாரத்தில் அமைத்திருக்கிறது அவருடைய மாந்தோப்பும் சப்போட்டா தோப்பும். பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதுவும் வெற்றிகரமாக.

 

முழுக்க முழுக்க இயற்கையை நேசிக்கும் மனிதராக தென்பட்டார். அவர் பேச்சிலும், நீண்ட நேர உரையாடலிலும் பழுத்த அனுபவங்களும், இயற்கை மீதான அளவற்ற பற்றுதலும் வெளிப்பட்டன.

ஷாஜஹான்

தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நண்பன் ராக்கியின் ஏற்பாட்டின்பேரில் இயற்கை விவசாயி ஷாஜஹானைச் சந்தித்து உரையாடினோம்.

 

”சுயமாக தொழில் செய்யக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த தொழில் பெரிய அளவில் கைகொடுக்கும். நானும் அப்படித்தான்.

 

ஆடியோ தொழிலில் சிறப்பாகத்தான் இருந்தேன். அதுவும் இசைஞானி இளையராஜா வருகைக்குப் பிறகு என் தொழில் அமோகமாக இருந்தது. இசை உலகமே கிராமபோன் டிஸ்கில் இருந்து பிறகு கேசட், அதன்பின் சிடி, பிறகு பென்டிரைவ் என மாறிவிட்டது.

 

சரி.
எல்லா காலக்கட்டத்திலும்
ஏற்ற ஒரு தொழில் வேண்டும்.
அது, எல்லாருக்கும்
பயனளிக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டும்
என யோசித்தேன்.
அப்படி அமைகின்ற
தொழில் நானும்
என் மனைவியும்
ஓய்வுக்காலத்தைக்
கழிக்கக்கூடிய தொழிலாகவும்
இருக்க வேண்டும்.
எங்களின் எல்லா கேள்விக்கும்
விடையாக வந்தது
விவசாயத் தொழில்தான்.
அதுவும், இயற்கை
விவசாயம்தான் செய்ய
வேண்டும் என்று
ஆரம்பத்திலேயே
தீர்மானித்து விட்டோம்.

போதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆர்கானிக் மாந்தோப்பு.

எடுத்த எடுப்பிலேயே கிடைத்த இடத்தில் விவசாய நிலம் வாங்கிட முடியாது. விவசாயத்திற்கேற்ற நல்ல மண் கண்டம் (நிலத்தின் மேற்பரப்பில் இருந்து அடியில் தாய்ப்பாறை உள்ள பல்வேறு விதமான மண் படிவுகளை மண் கண்டம் என்கின்றனர்) உள்ள நிலமாக தேடி அலைந்தோம்.

 

மலையை ஒட்டியுள்ள
பகுதிகளில் நல்ல
மண் கண்டமுள்ள நிலம்
இருக்கும் எனக் கேள்விப்பட்டோம்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்
இப்படி தேடினோம். பிறகுதான்
போதமலை அடிவாரத்தில்
இந்த நிலத்தை
வாங்கினோம்.

 

மண் கண்டம் நன்றாக
இருக்கும் நிலம்,
ஈரப்பதத்துடன் இருக்கும்.
வறட்சியைத் தாங்கும்.
எதிர்பார்த்த நிலம் வாங்கியாச்சு.
விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதும்,
தண்ணீர் பற்றாக்குறையும்
வேளாண்மை முன்புள்ள
சவால்கள். அப்படியெனில்,
பராமரிப்பு குறைவாகத்
தேவைப்படக்கூடிய,
வறட்சியைத் தாங்கி
வளரக்கூடிய பயிர்களை
மட்டுமே பயிரிடுவது
என்று முடிவெடுத்தோம்.

 

யார் யாரெல்லாம் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்களோ அவர்களை எல்லாம் நேரில் சென்று நானும், என் மனைவியும் சந்தித்து ஆலோசனைகள் பெற்றோம். ஒரு மரத்தில் இருந்து மாம்பழத்தை எப்படி அறுப்பது என்பதைக்கூட நேரில் சென்று பயிற்சி பெற்றோம் என்றால் பாருங்கள். இந்த மண்ணுக்கு மா, சப்போட்டா பழ மரங்கள் நன்றாக வளரும் எனத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார் ஷாஜஹான்.

தனக்குச் சொந்தமான 33 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 25 ஏக்கரில் மாவும், 3 ஏக்கர் பரப்பளவில் சப்போட்டாவும் பயிரிட்டுள்ளார். ஏற்றுமதிக்கு உகந்த ரகங்களான அல்போன்ஸா, இமாம்பசந்த் போன்ற மாம்பழங்களை சாகுபடி செய்கிறார். 5 ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்காக தீனி பயிரிடுகிறார்.

 

சப்போட்டாவைப் பொருத்தவரை பிகேஎம்-1 மற்றும் ‘கிரிக்கெட் பால்’ ரகங்களைப் பயிரிட்டுள்ளார். இங்கு விளைந்த மாம்பழம் மற்றும் சப்போட்டா சுவையை வேளாண் துறை அதிகாரிகளே வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 

தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திருக்கிறார். எனினும் மாந்தோப்பு, சப்போட்டா தோப்புகளுக்கு குழாய்கள் மூலம் சொட்டுநீர்ப் பாசனம் செய்து வருவதால், தண்ணீர் சிக்கனத்தையும் கடைப்பிடிக்கிறார். பழ வகை பயிர்களை பயிரிடுவதற்கு முன்பு, முட்டுவலிச் செலவுகளுக்காக மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டு சாகுபடி செய்துள்ளார்.

 

”இயற்கை விவசாயம்
என்றால் அங்கே நாட்டு
மாடுகள் இருப்பது அவசியம்.
எங்களிடம் இப்போது
7 நாட்டு மாடுகள் இருக்கின்றன.
அவற்றிலிருந்து கிடைக்கும்
சாணத்தில் இருந்து நாங்கள்
பஞ்ச காவ்யா தயாரித்து,
மரங்களுக்கு நுண்ணூட்டச்
சத்துகளை அளிக்கிறோம்,”
என்றவரிடம், பஞ்ச காவியா
எப்படி தயாரிக்கிறீர்கள்
எனக் கேட்டோம்.

 

”நாட்டு மாடுகளின்
சாணத்தையும், அவை
கொடுத்த பாலில் இருந்து
தயாரிக்கப்பட்ட சுத்தமான
நெய்யையும் கலந்த கரைசலை
5 நாள்ளுக்கு அப்படியே
வைத்து விடுவோம்.
ஐந்தாம் நாளில், அத்துடன்
நாட்டு மாடுகளின்
சிறுநீர், பால், மோர், இளநீர்,
தண்ணீர், வாழைப்பழங்கள்,
வெல்லம் ஆகியவற்றை
ஒன்றாக கலந்து, அந்த
கலவையை 21 நாள்களுக்கு
ஊற வைக்க வேண்டும்.

 

நான்கு நாள்களில்
அந்தக் கலவையில் இருந்து
ஒருவித இனிப்பு மணம் வீசும்.
21 நாள்களில் அந்தக் கலவையில்
நுண்ணுயிர்கள் நன்றாக
பல்கிப் பெருகியிருக்கும்.
அந்தக் கரைசல் 6 மாதங்கள்
ஆனாலும் கெடாது.
அதை நுண்ணூட்டமாக
பயிர்களுக்கு தெளிக்கலாம்,”
என்றார்.

 

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த
பாலசுப்ரமணியம் என்ற
இயற்கை விவசாயி,
‘ஒன்றின் கழிவு, மற்றதன் உணவு.
அதனால் பூச்சிக்கொல்லி
மருந்து அடித்து பூச்சிகளைக்
கொல்லத் தேவையில்லை.

 

ஒவ்வொன்றையும் அழிக்க
எதிர் உயிரிகளை இயற்கையே
படைத்திருப்பதன் தத்துவத்தையும்’
சொல்லியிருக்கிறார். அதையும்
தனக்கான கற்றலாகக்
கொண்டிருக்கிறார் ஷாஜஹான்.

பஞ்ச காவியா தயாரிப்புக்கான டிரம்கள்.

நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பால், நகர்ப்புறங்களில் லிட்டர் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஷாஜஹானோ, அதை லிட்டர் வெறும் 40 ரூபாய்க்கே வழங்குகிறார்.

 

”சார்… எதற்காக நாட்டு மாடுகளை வளர்க்கிறோமோ அதற்கான லாபத்தை அதன் சாணத்தில் இருந்தும், சிறுநீரில் இருந்தும் எடுத்துக் கொள்கிறோம்.

 

அப்படியிருக்கும்போது அதன் பாலை லாப நோக்கத்துடன் விற்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. அதை பெரிய இழப்பாகவும் கருதுவதில்லை,” என்கிறார் ஷாஜஹான்.

 

தன் தோப்பில் விளைந்த மாம்பழங்களை, முதன்முதலில் சேலம் பழச்சந்தைக்குக் கொண்டு சென்றபோது அவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதையும் அவர் சொல்லிய பாங்கு நகைப்பை ஏற்படுத்தியது.

 

ஷாஜஹான் கொண்டு சென்ற மாம்பழங்களை சேலத்தில் உள்ள ஒரு பழ வியாபாரி, மூன்று கிரேடுகளாக தரம் பிரித்தாராம்.

 

முதல் கிரேடு பழங்களை கிலோ 30 ரூபாய்க்கும், இரண்டாவது கிரேடுக்கு 20 ரூபாயும், மூன்றாவது கிரேடு பழங்களுக்கு கிலோவுக்கு 10 ரூபாயும்தான் தர முடியும் என்று அவரே விலையை நிர்ணயித்தாராம்.

 

இதைக்கேட்டு அதிர்ந்துபோன ஷாஜஹான், ”சார்…இதெல்லாம் இயற்கை விவசாயத்தில் விளைந்தவை. சுவையும் அதிகம்” என்று சொல்லிப் பார்த்தார். ஊஹூம். வேலைக்கே ஆகவில்லை. அதற்கு அந்தக் கடைக்காரர், ”எது வேணா சொல்லிக்குங்க… இங்கே இந்த பழங்களுக்கு இதுதான் ரேட்” என்று கறார் காட்டியிருக்கிறார், உறைந்து போனார் ஷாஜஹான்.

 

எல்லா தொழிலிலும் உற்பத்தியாளரே விலை நிர்ணயம் செய்யும் உரிமை இருக்கும்போது, உழவர்களுக்கு மட்டும், தான் விளைவித்த பொருளுக்கு தன்னால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்ற இயலாமையும், கவலையுமாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார் ஷாஜஹான்.

 

அதன்பின், தன் தோப்பில் விளைந்த மாம்பழங்களை சொந்தக்காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து தன் ஏமாற்றத்தை மகிழ்ச்சியின் விளைநிலமாக மாற்றி ஆற்றுப்படுத்திக்கொண்டார்.

 

முதல் ஆண்டில் கிடைத்த ஏமாற்றத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார் ஷாஜஹான். இரண்டாம் ஆண்டு விளைந்த மாம்பழங்களை அவரே நேரடியாக சந்தைப்படுத்தத் தொடங்கினார். சில வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.

 

அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், ஒரு கிலோ ஆர்டர் கொடுத்திருந்தாலும்கூட சளைக்காமல் பார்சலில் அனுப்பி வைத்தார். அதை சுவைத்தவர்கள், சொக்கிப் போனார்கள்.

 

விளைவு… வாடிக்கையாளர்கள் கணிசமாக பெருகினர். முன்பு வாங்கியவர்கள் மறுமுறையும் சுவைக்கத் தொடங்கினர். மூன்றாம் ஆண்டிலிருந்து தனக்கென ஒரு நேரடி சந்தையை தக்க வைத்துக்கொண்டார் ஷாஜஹான். அவருடைய மகன், ஆரம்பத்தில் பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இப்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

 

மகனின் நட்பு வட்டம் மற்றும் தன்னுடைய நேரடி வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் அளவுக்குக்கூட உற்பத்தி இல்லை என்கிறார் ஷாஜஹான். அதாவது சந்தையில் அவருடைய மாம்பழத்திற்கு தேவை அதிகரித்திருக்கிறது; ஆனால் அந்தளவுக்கு விளைச்சல் இல்லை என்கிறார்.

 

சுவையும், தரமும் இருந்தால் வாடிக்கையாளர்கள் விலையை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதற்கு இவருக்கே கிடைத்திருக்கும் வரவேற்பே ஆகச்சிறந்த சான்று.

 

அல்போன்ஸா மாம்பழங்களை கிலோ 100 ரூபாய்க்கும், இமாம்பசந்த் மாம்பழங்களை கிலோ 140 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார். சப்போட்டா கிலோ 30 ரூபாய்க்கு கொடுக்கிறார். ஒருவரும் பேரம் பேசுவதில்லை. அது சரி… அமிர்தம் உண்ண யார்தான் பேரம் பேசுவார்?

 

”இயற்கை விவசாயத்தின் மீது பொது சமூகத்திற்கு இன்னும் போதிய அளவு புரிதல் ஏற்படவில்லை. அதனால்தான் பேரம் பேசுகின்றனர். பொருளின் தரத்தை உணர்ந்தவர்கள் பேரம் பேசுவதில்லை.

 

இப்போது மரச்செக்கு எண்ணெய்க்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. காரணம் அதன்மீதான விழிப்புணர்வுதான். இயற்கை விவசாய விளை பொருள்களுக்கும் தனிச்சந்தை இருக்கிறது.

போதமலை

ஆரம்பத்தில் நாம்தான் வாடிக்கையாளர்களை தேட வேண்டும். பழகிவிட்டால் பிறகு அவர்களே தேடி வருவார்கள். இயற்கை விவசாயம் என்றில்லை… பொதுவாக எதிர்மறை எண்ணம் வந்துவிட்டால் எதிலுமே ஜெயிக்க முடியாது. நேர்மறை சிந்தனையுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்,” என்கிறார் ஷாஜஹான்.

 

அவருடைய ஒவ்வொரு சொற்களும்கூட பஞ்ச காவ்யாபோல ஊட்டச்சத்து மிகுந்ததாகவே தெறித்து விழுந்தன.

 

– வழிப்போக்கன்