Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்

கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது.

இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும்.

சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ்க்கை, பள்ளி, கல்லூரி வாழ்க்கை, திரை அனுபவங்கள், குடும்பம், அரசியல், விடுதலைப்புலிகள் உடனான தொடர்பு குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து…

”சின்ன வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு. அதைத்தவிர அப்போது வேறு பொழுதுபோக்கு கிடையாது. எங்க வீட்டிலும் என் விருப்பம் எதுவோ அதையே செய்யட்டும் என்று அப்பாவும் விட்டுவிட்டார். நான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். கராத்தே தெரியும்,” என்றவர் நேர்காணலின்போதே நேயர்களுக்காக சிலம்பம் சுற்றிக் காண்பித்தார். சிலம்ப வீச்சும் கனல் கக்கியது.

”நுண்கலை படிக்கும்போது என்னை செதுக்கியது தொ.பரமசிவன் அய்யாதான். பள்ளியில் படிக்கும்போது நான் எங்கள் வகுப்பில் முதல் மாணவன்தான். படிக்கும் காலத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கேன்,” என்றவரிடம், ‘அப்போது காதல் அனுபவங்களும் இருந்திருக்குமே?’ எனக் கேட்டதற்கு, சீமான் லேசான வெட்கத்தில் நெளிந்தார். பின்பு ஹா…ஹா….என ஓசையிட்டுச் சிரித்தார்.

”அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்குமா…? அதையெல்லாம் கேட்டு சிக்கல்ல விட்டுடாதீங்க” என்று சிரித்தபடியே காதல் அனுபவங்களை பகிராமல் நழுவினார். நெருப்பு போன்ற பிம்பத்தைக் கட்டியமைத்திருந்த சீமான், காதல் குறித்த வினாவிற்கு நெளிந்ததும், நழுவியதும்கூட ரசனையாகத்தான் இருந்தது.

”சினிமாவுக்குனு சென்றால் அப்பா சிவாஜி நடித்த படத்திற்குதான் போவோம். அதுல மனோரமாவும் கண்டிப்பா நடிச்சிருக்கணும். டி.ஆர்., பாக்கியராஜ் சார் படங்களை பார்த்து சினிமா ஆர்வம் வந்தது. அவர்களோட தாக்கம் எனக்குள்ள அதிகமாக இருந்தது.

சின்ன வயசுலேருந்து சிவாஜி அப்பா படம் பார்த்துதான் வளர்ந்தேன். அவர்கிட்டயே ‘பசும்பொன்’ படத்துக்காக கதை சொல்லப் போனது மறக்க முடியாத அனுபவம். நானும், அறிவுமதி அண்ணனும் சிவாஜி அப்பா வீட்டுக்கு போனோம்.

அப்பா, கமலாம்மாவை கூப்பிட்டு குடிப்பதற்கு கொண்டு வரச் சொன்னார். அவங்க குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்ததும், அதை வாங்கி என் பக்கத்துல கீழே வைத்தேன். அதைப் பார்த்த அப்பா, ‘அதை கீழே வைக்கறதுக்கு கொடுக்கல. எடுத்துக் குடி’னு சொன்னாரு. ‘இல்லப்பா… நான் டீ, காபி, குளிர்பானம்லாம் குடிக்கறதில்ல’னு சொன்னேன். உடனே அவரு, குடிக்கறதுக்கு வேற ஏதாச்சும் கொண்டு வந்து கொடுனு கமலாம்மாகிட்ட சொன்னாரு.

நான் கதை சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது. அப்புறம் படப்பிடிப்பு நாள்களில் நாங்க ரெண்டுபேரும் நல்ல நண்பர்களாகிட்டோம். அவர் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து நின்னது க்கப்புறம்தான் வசனமே எழுதுவோம். ‘எவ்வளவு பெரிய நடிகர வெச்சிக்கிட்டு வசனமே எழுதாம இருக்கான் பாரு’னு அப்பா (இயக்குநர் பாரதிராஜா) சத்தம் போடுவாரு.

என்ன பண்றது… நான் பாடம் படிச்சி வளர்ந்த இடம் அப்படி.

எங்க அப்பா மணிவண்ணன் (இயக்குநர்) எப்பவும் அப்படித்தான். ‘அமைதிப்படை’ படத்துல அவர்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகுதான் வசனமே எழுதுவாரு. அவரைப் பத்தி தெரிஞ்ச நடிகர்கள், அவரை தப்பாக நினைக்கிறதில்ல.

‘அமைதிப்படை’ கதைய அப்பா உருவாக்கினதேகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அந்தப் படத்துக்காக எங்களுக்கு அறைகள் ஒதுக்கிக் கொடுத்துட்டாங்க. ஒரு வாரம் ஆச்சு. கதை ஒண்ணும் இல்ல. அப்புறம்தான் அதைப்பத்தியே பேச ஆரம்பிச்சோம்.

‘ஒரு ஊருக்குள்ள ஒரு தொப்பி போட்ட போலீஸ்காரன் வர்றான்’னு அப்பா சொல்லுவாரு. உடனே நாம, ஏன்னு அவர்கிட்ட கேட்கணும். நாங்களும் ஏன்னு கேட்டோம். அதுக்கு அப்பா, ‘அந்த ஊர்ல உள்ள ஒரு தப்பான எம்எல்ஏ சாதி சண்டைய உருவாக்கிட்டா, அவன் பண்ணின தப்பை எல்லாம் மக்கள் மறந்துடுவாங்க. அதை அடக்கறதுக்காக அந்த போலீஸ்காரன் ஊருக்குள்ள வர்றான்’னு சொன்னாரு. இதுதான் ‘அமைதிப்படை’ படத்தோட ஒரு வரி கதை.

இப்படித்தான் நான் அப்பாகிட்ட பாடம் படிச்சேன். அப்பா நிறைய படிப்பாரு. எதையும் ஆழமாக சிந்திச்சுப் பேசக்கூடியவர்,” என இயக்குநர் மணிவண்ணன் பற்றிய நினைவுகளில் மூழ்கியவர், ”என்னோட முழு திறமைய வெளிக்கொண்டு வந்ததுனா அது ‘பசும்பொன்’ படம்தான்,” என்றார்.

”1987-88களில் சொந்த ஊரில் இருந்து ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில சென்னைக்கு வந்துட்டேன். எங்க அப்பா, மிளகாய் மூட்டைகளை வித்து அதுல கிடைச்ச காசுல இருந்து 150 ரூபாய் கொடுத்து அனுப்பினாரு.

எங்க ஊர்ல வள்ளுவர்னு ஒரு சோசியக்காரரு இருந்தாரு. இரும்பு புடிக்கிற வேலைக்குதான் போவான்னு சொல்லச்சொல்லி எங்கப்பா சோசியக்காரருக்கு காசு கொடுத்திருந்தாரு.

என்னை எப்படியாவது ராணுவத்துக்கு அனுப்பிடணும்னு அப்பாவோட ஆசை. ஆனால் நான் என்ன பண்ணினேன் தெரியுமா… எங்கப்பாவுக்கு முன்னாடியே நான் அந்த சோசியக்காரருக்கு காசு கொடுத்து, இவன் கேமரா புடிச்சாத்தான் சரியா வருவான்னு சொல்லச் சொல்லிட்டேன்.

நான் எது கற்றுக்கொள்ளனும்னாலும் அதுக்கு அப்பா இடையூறாக இருந்ததில்ல. எது பண்ணினாலும் நல்லதுதான் செய்வான்னு அவருக்கு நம்பிக்கை உண்டு.

சென்னைக்கு வந்து நானும், நண்பர் ஒருத்தரும் இங்குள்ள ஒரு சுடுகாட்டுலதான் படுத்துக் கிடந்தோம். அங்கே ஒரு சின்ன கொட்டகை இருந்தது. அதுலதான் தங்கிக்குவோம். என்ன பண்றது… அது நான் இஷ்டப்பட்ட கஷ்டம்தானே? திரை உலகம் மீது இருந்த வெறி. அதையெல்லாம் இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கு,” என்றார்.

பிறகு உரையாடல், விடுதலைப்புலிகள் உடனான தொடர்பு பற்றியும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றியும் திரும்பியது.

”இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வான் மார்க்கமாகத்தான் போனேன். அங்கிருந்து அண்ணன் பிரபாகரன் இருக்கும் இடத்திற்குச் செல்ல மூன்று நாள்கள் ஆகிவிட்டது. அந்தளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக என்னை மீசை எடுக்கச் சொன்னார்கள். தலையை மொட்டை அடிக்கச் சொன்னார்கள்.

நான் செத்தாலும் சாவேனே தவிர அதையெல்லாம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். பிறகு, தொப்பியும், கண்ணாடியும் அணிந்து கொண்டு அண்ணனை சந்திக்கச் சென்றேன்.

அங்கே தமிழேந்தி அப்பா, பொட்டு அண்ணன், நடேசன் அண்ணன் எல்லோருமே என்னிடம் சகஜமாக பேசினார்கள். அண்ணன் பிரபாகரன், அங்கே எப்படி எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தினேன் என்பதைச் சொன்னார். ஈழத்தில் எல்லா சொற்களையும் தமிழ்படுத்தியிருக்கிறார்.

நான் அண்ணனைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பே, என் செயல்பாடுகளை அவர் ஓர் ஆள் மூலம் உளவு பார்த்திருக்கிறார். ஆனால் அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த விவரமே அண்ணனை சந்தித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

அங்கே அவர் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்தார். முதலில் எனக்கு சுட வரவில்லை. நமக்கு கராத்தே எல்லாம் தெரியும் என்று போனேன். அங்கே போனால் நமக்கு நாக்கு தள்ளியிருச்சு.

பலமுறை சுட்டுப் பயிற்சி எடுத்தபோதும் ஏழு அல்லது எட்டு புள்ளிகளுக்கு மேல் என்னால் எடுக்க முடியவில்லை. துப்பாக்கி விசையை எப்படி, எந்தளவுக்கு அழுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தையும் அண்ணன்தான் கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னபடி சுட்டு பயிற்சி பெற்றேன்.

அவர் வீட்டில்தான் சாப்பிட்டேன். அண்ணிதான் (பிரபாகரனின் மனைவி) உணவு பரிமாறினார். நமக்கு என்ன பிடிக்குமோ அந்த உணவுகளை அவர்கள் பரிமாறினார்கள். ஈழத்தில் சாப்பிடும் மேசைகூட நீளமாக இருக்கிறது. அது அவர்களின் கலாச்சாரமாக…பண்பாடாக இருக்கலாம்.

பொதுவாக அண்ணன், சினிமா படமெல்லாம் பார்ப்பதில்லை. நண்பர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள் என்றால் படம் பார்ப்பார். அதுவும் சண்டை படம் என்றால் அவருக்கு உயிர். அதுவும் ராணுவம் சார்ந்த படம் என்றால் ரொம்ப பிடிக்கும்.

என் கையில் இருந்து பாயும் துப்பாக்கி தோட்டாவைப் போலத்தான் திரைக்கலையும், பேச்சும். அதனால் அவற்றை கைவிடக்கூடாது என்றார். அண்ணன் நல்லா ஓவியம் வரைவார். நல்லா சமைப்பார். நான் அவரை இரண்டு முறை சந்தித்துப் பேச முடிந்தது,” என்றார்.

சீமான் நல்ல குரல்வளம், பாடல் பாடும் திறமை குறித்து பேச்சு எழுந்தது.

அதற்கு அவர் நன்றாக சத்தமிட்டு சிரித்தார். பிறகு, ”நான் ஏதோ காட்டுத்தனமாக கிராமத்தில் பாடுவதுபோல பாடுவேன். நல்ல குரல் வளம் என்றெல்லாம் சொல்ல முடியாது,” என்றவர்,

‘கெண்ட காலழகி
கெறங்க வைக்கும் மேலழகி
காத்து கருப்பு அடிக்கும்
காட்டுப் பக்கம் போகாதே
என் அத்த மகளே பாப்பு
நீ அடிக்காதடி டூப்பு….’

என ராகமிட்டு பாடிக்காட்டினார்.

”பேசாம பேசாம இருந்து… கோழிக்குஞ்சுகள தூக்குதடா பருந்து…’னு ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்துல கூட ஒரு பாட்டு நானே எழுதி நானே பாடியிருக்கேனே…” என்றார்.

”நீங்க உப்புக்கறி நல்லா சமைப்பீங்களாமே?” எனக் கேட்டார் நெறியாளர்.

அதற்கும் சிரித்தார் சீமான். ”ஆமாம். கிராமத்துல திருட்டுக்கோழி சமைச்சி சாப்பிடுவோம். அப்போலாம் வெங்காயத்துல முள்ளை சொருகி கோழிக்கு போட்டுட்டோம்னா அதை சாப்பிடும்போது தொண்டைக்குழியில முள் மாட்டிக்கிரும். அப்புறம் அந்தக் கோழிய தூக்கிட்டுப் போயி உப்பு மிளகாய்த்தூள் எல்லாம் தடவி அப்படியே நெருப்புல சுட்டு சாப்பிடுவோம். என்னைக் காட்டிலும் கயல் (தன் மனைவியைக் குறிப்பிட்டுச் சொன்னார்) நல்லா சமைக்கும்.

செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவராமே என்ற வினாவுக்கு பதில் அளித்த சீமான், தன் வீட்டில் வளர்த்து வரும் வாத்து, கிளிகள் பற்றியும் குறிப்பிட்டார். கிளிகளுக்கு அறிவு, பட்டு சிட்டு, இயல் இசை, வெண்பா என தூய தமிழில் பெயரிட்டிருக்கிறார். பூனைகளும் உண்டு.

மணி என்ற வாத்து மீது சீமானும், அவர் மனைவி கயலும் மிகுந்த அன்பு செலுத்தி வந்துள்ளனர். அந்த வாத்து இறந்தபோது இருவராலும் தாள முடியவில்லை என்றும் கூறினார்.