விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் வரும் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் உள்பட 25 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் இன்று (மார்ச் 19, 2018) இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென்று கைது செய்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில் சில மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஏற்கனவே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களைக் கடந்து, ரத யாத்திரை நாளை (மார்ச் 20, 2018) திருநெல்வேலி மாவட்டம் புளியரை வந்து சேர்கிறது. அங்கு ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ரத யாத்திரைக்கு தமி-ழகத்தில் தடை விதிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ரத யாத்திரையை முற்றுகையிடுவோம் என்று வேல்முருகன் கூறியிருந்தார்.
இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 23ம் தேதி வரை காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, இன்று இரவு 9 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 25 பேர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்குச் செல்வதற்காக ரயிலில் ஏற சென்றனர். அங்கு ஏற்கனவே செங்கல்பட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தயாராக இருந்த 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வேல்முருகன் மற்றும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து வேல்முருகனிடம் நாம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மதவாத ரத யாத்திரைக்கும் தடை போட்டுத் தடுத்தார்கள் என்றால் இது ஜனநாயக நாடு என்று சொல்லலாம். அப்போதுதான் அரசும், காவல்துறையும் நியாயமாக நடக்கிறது என்று அர்த்தம்.
அந்த தடை உத்தரவு மதவாத ரதயாத்திரை கும்பலுக்கு பொருந்தாது. ஆனால் போராடும் ஜனநாயக சக்திகளுக்கு மட்டும் பொருந்தும். அதனால் அங்கே செல்லக்கூடாது என இங்கேயே வழிமறித்து கைது செய்வது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றுகூடும் உரிமை, போராடும் உரிமை இருக்கிறது. அதை மறுக்கிற இந்த செயல் ஜனநாயகப் படுகொலையாகப் பார்க்கிறேன்.
ஏற்கனவே ஒருமுறை ரத யாத்திரை சென்றுதான் பாபர் மசூதி இடிப்புக்கும், மிகப்பெரும் வன்முறைக்கும் வழிவகுத்தனர். அதுபோன்ற வன்முறைக்கு வழிவகுத்துவிடும் என்பதால்தான் ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிஜிபியிடம் முறைப்படி மனு கொடுத்திருந்தேன். இந்த நிலையில் எங்களை கைது செய்துள்ளனர். இதை எப்படி நாம் ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும்?,” என்றார்.