நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியை சபரிமாலா அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள அதேநேரத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக தொடர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வழக்கமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து போராடுவார்கள். இப்போது ஆளுங்கட்சி உள்ள நிலையில் எப்போது போராடினாலும், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும், அதன்மூலம் சில பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற உள்ளார்ந்த கணக்கீடுகளும் ஜாக்டோ – ஜியோ அமைப்புக்கும் இருக்கலாம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ – ஜியோவின் பிரதான கோரிக்கை, பணப்பலன்களை பெறுவதே. குறிப்பாக, இப்போது அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது; 7வது ஊதியக்குழு அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயித்தல், அதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்குதல் ஆகியவைதான் முக்கிய கோரிக்கைகள்.
கோரிக்கைகளுக்காக போராடுவதும் ஜனநாயக வழிமுறைகளில் ஒன்றுதான். ஆனால், எத்தகைய சூழ்நிலையில் அந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உருவாகக்கூடும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராடுவது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி, இப்போது மதுரை உயர்நீதிமன்றமும் ஜாக்டோ – ஜியோவுக்கு குட்டு வைத்திருக்கிறது. அரசு ஊழியர்கள், வேலை நிறுத்தம் செய்வதை ஓர் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், காலவரையற்ற போராட்டத்திற்கு இடைக்காலத் தடையும் நேற்று (செப். 7) விதித்திருக்கிறது.
இதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத ஜாக்டோ – ஜியோ, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. பல அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் வெறுமனே பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
நாளையும், மறுநாளும் வார விடுமுறை என்பது இப்போதைக்கு கொஞ்சம் ஆறுதல். திங்கள் கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடருமேயானால், அரசு நிர்வாகப்பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கிவிடும் அபாயம் இருக்கிறது. அத்தகைய நிலை உருவாவதற்குள், அரசும் சுமூகமான முடிவுக்கு வர வேண்டும்; ஜாக்டோ – ஜியோவும் சற்று இறங்கி வர வேண்டும்.
இயல்பாகவே, அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மனுநீதி நாளன்று கொடுக்கப்படும் சாமானிய கோரிக்கை மனுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் யாதொரு நடவடிக்கையும் இல்ல £மல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. புதன் கிழமைக்கு மேல் ஏதேனும் கோரிக்கைகளுடன் செல்லும் மக்களிடம், நீங்கள் திங்கள் கிழமை வந்து விடுங்கள் என்று கருணையே இல்லாமல் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். வெள்ளிக்கிழமைகளில், மதியமே ‘ஹாலிடே மூட்’-க்கு வந்து விடுவார்கள். ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறும் கல்வித்துறை போன்ற இலாக்காக்கள் இதில் விதிவிலக்கு.
அரசு ஊழியர்கள் இப்படி என்றால், ஆசிரியர்களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களுக்கு 24/7 ஊதிய பற்றாக்குறை கவலைதான் வாட்டி வதைக்கும். கணவன் – மனைவி இருவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்களாக இருப்பார்கள். பட்டதாரி ஆசிரியர் தம்பதிகளின் மாத ஊதியம் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் இருக்கும். ஆனாலும், அன்றாடங்காய்ச்சிகளுக்கு இணையாக கஷ்ட ஜீவனம். அதனால்தான் அவர்களும் ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்களோ என்னவோ.
”எல்லோரையும் ஆசிரியர்களுக்கு இணையாகவே நீங்கள் பார்க்கக்கூடாது. அரசுத்துறையில் குரூப் – 4 அந்தஸ்திலான ஒரு கிளர் க்கின் சம்பளம் ரூ.15 ஆயிரத்தைத் தாண்டாது. அதற்குக்கீழும் ஊதியம் பெறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். டிஇஓ, சிஇஓ, கருவூலம் போன்ற அலுவலகங்களுக்கு சம்பள படிவங்களை எடுத்துக்கொண்டு அலைய வேண்டும். இதற்கெல்லாம் அரசு பயணப்படிகூட கொடுப்பதில்லை. 50 கொடு; 100 கொடு என்று தன்மானம் உள்ள ஊழியன் எவனும் ஆசிரியர்களிடம் போய் கெஞ்ச மாட்டான். அப்படி வாங்கினால் அவர்களின் தவறுகளுக்கு நாங்களும் துணை போக நேரிடும்.
இந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றும் கிளர்க்குகளுக்கு மாதம் ரூ.1500க்கு மேல் பயணச்செலவே ஆகிவிடும். நாங்களெல்லாம் கெத்தாக அரசு உத்தியோகம் என்று வந்துவிட்டோமே தவிர, வாங்கும் ஊதியம் கைக்கும் வாய்க்கும்கூட போதாது. எங்களைப்போன்ற கடைநிலையில் இருப்பவர்களின் குறைகளையும் அரசு உடனடியாக களைய வேண்டும். அதற்காக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். அதேநேரம், மக்களை பாதிக்கும் எந்த ஒரு போராட்டத்தையும் தனிப்பட்ட முறையில் நான் ஆதரிப்பதில்லை,” என்கிறார் ஈரோடு மாவட்ட செம்மம்பாளையம் அரசுப்பள்ளி இளநிலை உதவியாளர் ஜோதி.
‘மக்கள் முன்னேற்றம்’ அமைப்பைச் சேர்ந்த தோழர் ராஜலிங்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் என்பது அப்பட்டமான சுயநலம் என்று சாடுகிறார்.
”நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் போராடி வரும்போது, ஆசிரியர்கள் சம்பளத்திற்காக போராடுவது சரியல்ல. இப்பிரச்னையில் அவர்கள்தான் மாணவர்களை வழிநடத்தியிருக்க வேண்டும். மேலை நாடுகளில் மட்டுமல்ல; இந்தியாவிலும் சுத ந்திர போராட்டத்தின்போது ஆசிரியர்கள் பெருமளவில் பங்கெடுத்தனர். அத்தகைய உணர்வு இப்போது அவர்களிடம் இல்லை. சபரிமாலா என்ற ஒரு ஆசிரியை தன்னெழுச்சியாக போராடுவதுபோன்ற உணர்வு எல்லா ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களு க்கும் வேண்டும். அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக போராடினால் போதும் என்று கட்டமைத்து விட்டதும், இதுபோன்ற பின்னடைவுக்கு முக்கிய காரணம்,” என்றார் ராஜலிங்கம்.
நிதியுதவி பெறும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர், ஜாக்டோ –
ஜியோ போராட்டம் குறித்து தனது இரட்டை மனோநிலையை வெளிப்படுத்தினார். பி.இ., படித்த பொறியாளர்கள் இன்றைக்கு ரூ.10000 சம்பளத்தில் பணியாற்றுவதுடன் ஒப்பிடுகையில், ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறது. அதற்குரிய நியாயம் செய்யவில்லை என்பதுதான் தனது கருத்து என்றார் அவர்.
எனினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எடுத்த எடுப்பிலேயே காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவில்லையே. ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குமுன், கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். அப்போதே, அரசாங்கம் இதை சுமூகமான முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே என்றும் கேட்கிறார் அவர்.
”அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போல் விவசாயிகளும் தொடர் வேலைநிறுத்தம் செய்தால் நம்மால் எப்படி சாப்பிட முடியும்? மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் நோயாளிகளின் நிலை என்னாவது?,” என்று கேள்வி எழுப்புகிறார் சிவராணி. இவர் ஓர் என்ஜிஓ நிறுவன ஊழியர்.
அவர் மேலும் கூறுகையில், ”எனக்குத் தெரிந்த ஒருவர் 17 ஆண்டாக ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் தற்போது ரூ.52000 சம்பளம் வாங்குகிறார். இன்றைய காலக்கட்டத்தில் அது போதாதா? நீட் தேர்வு பிரச்னையால் தமிழ்நாடே பற்றி எரியும்போது, ஊதியம் போதவில்லை என்று போராடுவதில் எந்த நியாயமும் இல்லை. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருக்கப் போவதில்லை. முதலில் அவர்கள் லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்,” என்றார்.
ஆத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், நீட் தொடர்பான பிரச்னைகளையும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதை அந்த அமைப்பு புறக்கணித்ததால் தானும் போராட்டத்தை புறக்கணித்து, பள்ளிக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.
ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வர்க்கமும் ஊதிய பிரச்னைகளை முன்னிறுத்தி போராடி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தனி மனுஷியாக மகனுடன் போராடி வரும், விழுப்புரம் ஆசிரியை சபரிமாலா மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றுள்ளார். அரசுப்பள்ளி ஆசிரியையான இவர், நீட் போராட்டத்திற்காக பணியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரிடம் நாம் பேசினோம்.
”ஆசிரியர்களை சம்பளத்துக்காக போராட வைத்ததே அரசுக்கு பெரும் தலைக்குனிவுதான். ஆசிரியர்களை கையேந்த வைக்கும் எந்த சமுதாயமும் முன்னேறி விடாது. அவர்களுக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்களிடம் தரமான கல்வியைக் கேட்பது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத எம்எல்ஏக்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் தரும்போது, நெஞ்சு ஆவி போக உழைக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதில் தவறில்லை,” என்றவர், நீட் தேர்வுக்கு ஆதரவாக தன்னுடன் ஒரு ஆசிரியர்கூட போராட முன்வராதது குறித்து கவலை தெரிவித்தார்.
”நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கு என்னுடைய ஆசிரியர் பணி தடையாக இருந்ததால்தான் அதை ராஜினாமா செய்தேன். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என்னை செல்போனில் தொடர்புகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் ஒருவர்கூட இங்கு வரவில்லை. நானும், என் மகனும்தான் இங்கு போராடி வருகிறோம். தார்மீகப்படி, நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியர்கள்தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவர்களின் வகுப்பிலும் அனிதாக்கள் படித்து வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட முன்வராததற்கு, வேலை போய்விடும் என்ற பயமா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை,” என்கிறார் சபரிமாலா.
கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை கைது செய்தார். எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு அப்போது வெகுசன மக்களிடம் இருந்து எத்தகைய ஆதரவும் கிடைக்கவில்லை. இப்போதும் அதே நிலைதான். போராட்ட வடிவத்தை மாற்றுவது குறித்து அவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது.
– இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: 9840961947
E-mail: selaya80@gmail.com