Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

தமிழகத்தில் ஆயுதப் புரட்சி வெடிப்பதற்கான சூழல் உருவாகும் என்று ‘இந்திய கம்யூனிஸ்ட் – மாவோயிஸ்ட்’ கட்சியின் முக்கிய தளபதியான விவேக் கூறினார்.

 

மாவோயிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் சிபிஐ – மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான விவேக் என்கிற விவேக் மாவோயிஸ்ட், தான் எழுதி வரும் நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு பணிகளுக்காக கடந்த மாதம் (ஆகஸ்ட்) சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். தகவல் அறிந்து நாமும் அவர் தங்கியிருந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ராஜலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

 

அது ஒரு மழை நாள் இரவு. கியூ பிராஞ்ச் மற்றும் உள்ளூர் காவல்துறை என பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சாதாரண உடையில், அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். நாம் சென்றதையும் மோப்பம் பிடித்துவிட்ட உளவுத்துறையினர், பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்றும், விவேக்கை வெளியூர் கிளம்பிச் செல்லும்படியும் ராஜலிங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தனர். விவேக் உடனான உரையாடலில் இருந்து…

விவேக்

புதிய அகராதி: மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகள் எனச்சொல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொன்னதாக அறிகிறேன். இருந்தும், ஏன் காவல்துறை அவர்களை ஒடுக்குகிறது?

 

விவேக்: மாவோயிஸ்டுகள்
என்பவர்கள், பொதுவுடைமைக்
கொள்கைகளை தீவிரமாக
பின்பற்றக்கூடியவர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட்
சித்தாந்தங்களை முழுமையாக
ஏற்காமல், அதிலிருந்து
பிரிந்து ‘சிபிஐ – மாவோயிஸ்ட்’
கட்சியாக செயல்படுகிறோம்.
இந்தியாவில் உள்ள
கம்யூனிஸ்டுகள், நாடாளுமன்ற
பாதையை நம்பக்கூடியவர்கள்.
எங்கள் இயக்கம் அப்படியல்ல.
தேர்தல் பாதையில் எங்களுக்கு
நம்பிக்கை கிடையாது.
ஆயுத புரட்சி மூலம்தான்
தீர்வு கிடைக்கும் என்பதை
நம்புகிறோம். உழுபவனுக்கே
நிலம் சொந்தம்.
இங்குள்ள தரகு
முதலாளிகளையும்,
அரச முதலாளித்துவத்தையும்
தீவிரமாக எதிர்க்கிறோம்.
அதனால் காவல்துறையின்
ஒடுக்குமுறைக்கு
ஆளாக நேரிடுகிறது.

 

புதிய அகராதி: உங்கள் மனைவியும் பெண் மாவோயிஸ்டுமான பத்மா, சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தனவே?

பத்மா

விவேக்: அப்படித்தான்
உளவுத்துறை போலீசார்
சொன்னார்கள். கைது
செய்திருந்தால்
நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தியிருக்கலாமே?
தோழர் பத்மா கைது
செய்யப்படவில்லை.
அவர் பாதுகாப்பான
இடத்தில்தான் இருப்பார்
என நம்புகிறேன்.

 

புதிய அகராதி: தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் வளரவில்லையே?

 

விவேக்: ஆந்திரா,
தெலங்கானா, பீஹார்,
உத்தரபிரதேசம் போன்ற
மாநிலங்களில் பண்ணை
அடிமைமுறை அதிகம்.
அதனால் அங்கெல்லாம்
மாவோயிஸ்டுகள் ஆதிக்கமும்
இருக்கின்றன. தமிழகத்தில்
அத்தகைய முறை
இல்லாவிட்டாலும், மதுரை,
தஞ்சை பகுதிகளில்
பெரு நிலவுடமையாளர்களின்
ஆதிக்கம் அதிகமாக
இருக்கிறது. அந்தப்
பகுதிகளில் மாவோயிஸ
இயக்கமும் வளர்ந்திருக்கிறது.
புறம்போக்கு நிலம் என்ற
பெயரில் அரசு கையகப்படுத்தி
வைத்திருப்பதும் தவறு.
நிலமற்ற விவசாயிகளுக்கு
அதை பிரித்து
வழங்க வேண்டும்.

 

தமிழகத்தில் கந்து வட்டி,
சாதி ரீதியிலான பிரச்னைகளும்
அதிகம். இங்கு சாதிகளின்
பெயரில் உழைப்புச் சுரண்டல்
அல்லது அரசியல் சுரண்டல்
நடக்கிறது. சாதி ஒடுக்குமுறை
காரணமாக பாப்பாப்பட்டி,
கீரிப்பட்டி பஞ்சாயத்துகளில்
தேர்தலே நடத்த முடியாத
நிலை அண்மைக்காலம்
வரை இருந்ததுதானே?

 

புதிய அகராதி: என்ன இருந்தாலும் தமிழகத்தில் மாவோயிஸ்டுகளால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லைதானே?

 

விவேக்: அப்படி
ஒட்டுமொத்தமாக
சொல்லிவிட முடியாது.
ஆனாலும் எங்களுக்கு
இங்கு சில பின்னடைவுகள்
இருப்பது உண்மைதான்.
தமிழககத்தில் தொழிற்சங்க
நடவடிக்கைகள்
‘ஸ்ட்ராங்’ ஆக இருக்கின்றன.
ஆனால் அவை
சந்தர்ப்பவாதத்துடன்
செயல்படுவதுடன் சுல்தானிய
போக்கையும் கொண்டிருக்கின்றன.
அரசைப் பொறுத்தவரை இதில்
ஒருவித தெளிவான
கொள்கையை வைத்திருக்கிறது.
அதாவது, புரட்சிகர இயக்கங்களை
ஆரம்பத்திலேயே ஒடுக்குவது;
அவர்களை கால் பதிக்க
விடாமல் விரட்டியடிப்பது
என்பதில் உறுதியாக
இருக்கின்றன.

 

எம்ஜிஆர்
காலத்திலேயே அதற்கான
வேலைகள் தொடங்கி விட்டன.
இதெல்லாம் எங்களுக்கு
பலவீனமானவை. இப்போதுள்ள
நிலைமைகளை
எதிர்கொள்வதற்கேற்ப
எங்களை தகவமைத்து
வருகிறோம். எங்கள்
உத்திகளில் இருந்து வந்த
தவறுகள் குறைந்துள்ளன.

 

புதிய அகராதி: தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருப்பதும் மாவோயிஸ இயக்கத்திற்கு பின்னடைவுதானே?

 

விவேக்: தமிழகம் வளர்ச்சி
அடைந்ததாக ஒரு தோற்றம்
உருவாக்கப்பட்டு இருக்கிறது
என்று வேண்டுமானால்
சொல்லலாம். நகர்ப்புற
வறுமை இங்கு அதிகம்.
நகர்ப்புற வறுமையில்
தமிழகம் முதல் இரண்டு
இடத்திற்குள் இருக்கிறது.
இங்கு 70 சதவீதத்திற்கும்
மேற்பட்ட நிறுவனங்கள்
கடனில் மூழ்கியவைதான்.
தமிழ்நாட்டில் இருந்து
கர்நாடகா உள்ளிட்ட
மாநிலங்களுக்கு பிழைப்பு
தேடிச் செல்வது
அதிகரித்துள்ளது.
உணவு, கல்வி, சுகாதாரத்தில்
இங்கு ஏகாதிபத்தியம் அதிகம்.
தமிழ்நாட்டில் பத்தாவது,
பன்னிரண்டாவது மட்டும்
படித்தவர்களுக்கு,
பத்தாயிரம் ரூபாய்
சம்பளத்தைக் கொடுத்து
விலங்கு தன்மையை
விடக் கேவலமாக
நடத்துகிறார்கள்.

 

சென்னைக்கு வெளியே
இருப்பவர்கள், சென்னையை
எப்படி பார்க்கிறார்கள்
என்று தெரியாது.
அங்கு ஒரு குடும்பத்தில்
மூன்று, நான்கு பேர்
வேலைக்குப் போனாலும்
குடும்பத்தை கடனில் இருந்து
மீட்க முடியாத போராட்ட
வாழ்க்கை முறைதான்
இருக்கிறது. மருத்துவச்
செலவுகளை ஒருவர் கடன்
வாங்காமல் சமாளிக்க
முடியாத நிலையில்தான்
தமிழகம் இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள்
வசிக்கும் சென்னை
செம்மஞ்சேரி பகுதி,
தனித்தீவு போல் இருக்கிறது.

 

புதிய அகராதி: திராவிட ஆட்சிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

விவேக்: 1967ல் இருந்து
திராவிட கட்சிகள்தான்
தமிழகத்தை ஆளுகின்றன.
அவர்கள் சுயாட்சி என்ற
பெயரில் தரகு
முதலாளிகளுக்குதான்
சலுகைகளை அளிக்கின்றனர்.
இப்போது, பிஜேபி
ஏஜன்டுகளின் ஆட்சி
நடக்கிறது. ஈழத்தமிழர்களின்
இறுதி யுத்தம் முதல் நீட்
தேர்வு வரை எல்லாவற்றிலும்
திராவிட கட்சிகள் துரோகம்
செய்திருக்கின்றன.
மக்களை திரட்டி,
ஆளும் அரசை தூக்கி
எறிவதுதான் எங்களின்
நோக்கம்.

 

புதிய அகராதி: தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

 

விவேக்: தனித்தமிழ்நாடு என்பது தனி நபர்களின் ஆசை. எங்களைப் பொருத்தவரை அனைத்து தேசிய இனங்களும் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். பாதுகாப்பு, நாணயம் போன்ற விவகாரங்களில் கூட்டரசு தத்துவம் இருக்கலாம். மொழித்திணிப்பு கூடவே கூடாது. அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

 

புதிய அகராதி: தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆயுதப்புரட்சி சாத்தியமா?

விவேக்: 1985களில் தமிழகத்தில் ஈழப்போராளிகள் மீதான ஆதரவு அதிகமாக இருந்தது. பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார் என்பதையும் மீறி, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் தூக்கில் போடக்கூடாது என்ற கருத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு போராட்டம் என தமிழக மக்களிடம் அரசியல் முதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி, ஆயுதப்புரட்சியாக வெடிக்கவும் சாத்தியம் இருக்கிறது. அதற்கு நீண்ட காலம் ஆகாது. இணைப்பு.

 

– பேனாக்காரன்.