Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாணவி வளர்மதி விடுதலை

குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேலம் மாணவி வளர்மதி இன்று (செப். 7) மாலை பிணையில் விடுதைல செய்யப்பட்டார்.

சேலம் பள்ளிக்கூடத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி. பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி திட்டங்களைக் கண்டித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார்.

கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாகன மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவர் அரசுக்கு எதிராக மாணவர்களை போராடத் தூண்டுவதாகக் கூறி, சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த சில நாள்களில், நக்சல், மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி வளர்மதி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, வளர்மதியின் தந்தை மாதையன் தன் மகள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த இரு நாள்களுக்கு முன், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை கோவை மத்திய சிறையில் இருந்து மாணவி வளர்மதி, பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பறை இசை முழங்க வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த சில நிமிடங்களில் கோவை மத்திய சிறை அருகே, வளர்மதி தலைமையில் சமூக ஆர்வலர்கள் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர், ”அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்,” என்றார்.

இதற்கிடையே, மாணவி வளர்மதி எம்.ஏ., இதழியல் படிப்பை தொடர்ந்து படிக்கலாம் என்று பெரியார் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.