Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ பத்திரிகை ஆசிரியருமான நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 20, 2018) இரவு 1.35 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.

சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

நடராஜன் மரணம்:

இந்நிலையில், நெஞ்சக பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த 15ம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவருடைய உடல் கவலைக்கிடமாக மாறியது. சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் எம்பாமிங் செய்வதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்யப்பட்டு, பின்னர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய வீட்டில் நடராஜன் சடலம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராமகிருஷ்ணன், நடராஜனின் உறவினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான டிடிவி தினகரன், தி.க.தலைவர் கி.வீரமணி, மற்றும் கவிஞர் வைரமுத்து, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாஜக எம்பி தருண் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு பரோல்:

கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு 15 நாள்கள் அவசரகால பரோல் விடுப்பு அனுமதிக்கப்பட்டு உள்ளது.