Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

 

முட்டுக்கட்டை:

 

முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.

 

ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதிலும் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

பதவி உயர்வு நடைமுறை:

 

பல்கலையில் பி.ஹெச்டி., கல்வித்தகுதி இல்லாமல் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகள் கழித்து செலக்ஷன் கிரேடு நிலைக்கு உயர்த்தப்படுவார். பி.ஹெச்டி., முடித்தவராக இருப்பின், நான்கு ஆண்டுகளில் செலக்ஷன் கிரேடுக்கு வந்துவிடுவார். இந்த நிலையில் அவர்களுக்கு மொத்த தர ஊதியம் ரூ.6000ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்.

(மேல்வரிசை இடமிருந்து)லட்சுமி மனோகரி, ஜனகன், சூரியவதனா. (கீழ்வரிசை) திருமூர்த்தி, சாரதி, சுப்ரமணியபாரதி.

செலக்ஷன் கிரேடு நிலையில் உள்ள உதவி பேராசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து, சீனியர் கிரேடு அந்தஸ்து வழங்கப்படுகிறது. அப்போது அவர்களின் தர ஊதியம் ரூ.7000ல் இருந்து ரூ.8000 ஆக உயர்கிறது. அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து, இணை பேராசிரியராக பதவி உயர்வும், அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து பேராசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். பேராசிரியராக பதவி உயர்வு பெறும்போது அவர்களின் மொத்த தர ஊதியம் ரூ.10000 ஆக இருக்கும்.

 

வெறுமனே காலத்தைக் கடத்திவிட்டால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுமா என்றால் அதுதான் இல்லை. பதவி உயர்வுக்காக மேலும் சில அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படும்.

 

துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள், துறை ரீதியாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவைவும் கருத்தில் கொள்ளப்படும். முன்னதாக, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

சுந்தரமூர்த்தி, கிருஷ்ணகுமார்

உதவி / இணை பேராசிரியர்களின் விண்ணப்பங்கள், அத்துடன் இணைக்கப்பட்ட இதர ஆவணங்கள் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும். அக்குழு பரிந்துரைத்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். அதற்கும் மாநில அரசின் நிதிக்குழு ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்துமே யுஜிசி எனப்படும் பல்கலை மானியக்குழு விதிகளின் அடிப்படையிலானது.

 

இந்த நிலையில், பெரியார் பல்கலையில் கடந்த 2009ம் ஆண்டு சீனியர் கிரேடு / இணை பேராசிரியர் பதவி உயர்வு பெற்ற 22 ஆசிரியர்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன், பதவி உயர்வு நேர்காணல் நடத்தப்பட்டு உள்ளது. 2009ம் ஆண்டு பதவி உயர்வின்போது நாம் மேற்சொன்ன எந்த நடைமுறைகளையுமே பல்கலை நிர்வாகம் பின்பற்றவில்லை.

 

22 ஆசிரியர்கள்:

 

இது ஒருபுறம் இருக்க, பதவி உயர்வு பட்டியலில் உள்ள 22 உதவி / இணை பேராசிரியர்களில் கிருஷ்ணகுமார் (வணிகவியல்), ஜனகம் (பொருளியல்), சூரியவதனா (உயிர் வேதியியல்), லட்சுமி மனோகரி (ஆடை வடிவமைப்பியல்) மற்றும் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த திருமூர்த்தி, சாரதி, சுப்ரமணியபாரதி ஆகியோர் பணியில் சேர்ந்தபோது பி.ஹெச்டி., முடிக்கவில்லை எனறும், அவர்களுக்கு விதிகளை மீறி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

உதாரணத்திற்கு சில…

 

பெரியார் பல்கலையில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராக உள்ள கிருஷ்ணகுமார், 25.11.2004ல் பணியில் சேர்ந்தார். அந்த தேதியில் அவர் எம்.ஃபில்., பி.ஹெச்டி., ஆகிய படிப்புகளை நிறைவு செய்திருக்கவில்லை. அவர், தனது எம்ஃபில்., படிப்பையே 18.5.2005ல் தான் நிறைவு செய்திருக்கிறார்.

 

உயர்கல்வித்துறை அரசாணை எண். 111, நாள்: 24.3.1999ன் படி, பணியில் சேர்ந்த நாளில் எவர் ஒருவர் எம்.ஃபில்., பி.ஹெச்டி., நிறைவு செய்திருக்கிறாரோ அவருக்குதான் ஊதிய உயர்வு (அட்வான்ஸ் இன்க்ரீமென்ட்) வழங்க முடியும். அல்லது, எம்.ஃபில்., தகுதியுடன், ஆசிரியர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பி.ஹெச்டி., முடித்திருந்தால் அவர்களுக்கு ஓர் ஊதிய உயர்வு அளிக்கலாம்.

 

ஆனால், உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமாருக்கு அவர் பணியில் சேர்ந்த நாளன்றே, எம்.ஃபில்., தகுதிக்கும் சேர்த்தே இரண்டு ஊதிய உயர்வு முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது. நாளது தேதிவரை அவருக்கு வழக்கப்பட்ட மிகை ஊதியமான ரூ.2.64 லட்சத்தை திரும்பப் பெற வேண்டிய நிலை உள்ளது.

 

மேலாண்மைத் துறை:

 

மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர் திருமூர்த்தி, 20.6.2005ல் பணியில் சேர்ந்தார். அப்போது அவர் பி.ஹெச்டி., படிப்பை பூர்த்தி செய்திருக்கவில்லை. ஆனாலும் விதிகளை மீறி அவருக்கு செலக்ஷன் கிரேடு அந்தஸ்து அளித்து, 27.11.2009ம் தேதியே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அரசாணைப்படி, அவருக்கு 21.1.2010ம் தேதிதான் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

 

உதவி பேராசிரியர் திருமூர்த்தி விவகாரத்தில் என்ன முறைகேடோ, அதே விதிமீறல்தான் உதவி பேராசிரியர் சுப்ரமணிய பாரதிக்கும் நடந்துள்ளது. பணியில் சேரும்போது பி.ஹெச்டி., கல்வித்தகுதி இல்லாத அவருக்கு 1.10.2010ல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, முன்னதாக 1.4.2010ம் தேதியே வழங்கப்பட்டு உள்ளது.

 

இவர்கள் உதாரணங்கள் மட்டுமே. இப்போது பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ள 22 உதவி / இணை பேராசிரியர்களுமே, ஏற்கனவே விதிகளை மீறி பதவி உயர்வு பெற்றவர்கள்.

 

இரண்டு வகையான விதிமீறல்கள். ஒன்று, முந்தைய காலக்கட்டத்தில் துறை வல்லுநர்கள் குழு பரிந்துரையின்றி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இன்னொன்று, அதாவது, ஐந்து ஆண்டுகள் கழித்து வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, செலக்ஷன் கிரேடு அந்தஸ்து ஆகியவை ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர் குழந்தைவேல்

இந்த பட்டியலில் உள்ள ஆடை வடிவமைப்பியல் துறை இணை பேராசிரியர் லட்சுமி மனோகரி விவகாரம் வேறு வகையிலானது. அவர், 30.4.2014ம் தேதி பணியில் சேர்ந்தார். அப்போது அவர் பல்கலையில் சமர்ப்பித்த அனுபவ சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.

 

அந்த சான்றிதழ்களில் இதுவரை கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெறப்படாதது குறித்தும் தணிக்கை தடையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 

அதேபோல், தமிழ்த்துறையில் உள்ள இணை பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் பணி நியமனத்தில் 200 புள்ளி இனச்சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை என்பதால், அத்தகைய பணி நியமனமே செல்லாது. ஆனாலும், அதுகுறித்த யாதொரு விசாரணையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, அவருக்கும் இப்போது பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

 

இப்போது பதவி உயர்வு பட்டியலில் உள்ள 22 பேரின் விண்ணப்பங்களும் 2010ம் ஆண்டின் யுஜிசி விதிகளுக்கு உட்பட்டுதான் பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பதவி உயர்வு விதிகளில் யுஜிசி கடந்த 2016ல் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளும் இப்போது மீறப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

 

நிதிக்குழு கூட்டம்:

 

இந்நிலையில், வரும் செப். 18ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலர் (செலவினம்) தலைமையில் பெரியார் பல்கலை நிதிக்குழு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், பட்டியலில் உள்ள 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

 

போலி பணி அனுபவ சான்றிதழ் வழங்கியவர்கள், இனச்சுழற்சி விதிகளுக்கு முரணாக நியமிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே விதிகளை மீறி பதவி உயர்வு பெற்றவர்கள் அடங்கிய இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால், பெரியார் பல்கலை நிர்வாகம் வரலாற்றில் தவறான நடைமுறையை பதிவு செய்துவிடும் ஆபத்து உள்ளதாக நடுநிலையான பேராசிரியர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

கல்வியில் சீர்திருத்தம் செய்வதில் பெரிய அளவில் மெனக்கெடும் துணை வேந்தர் குழந்தைவேல், புரையோடிக் கிடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் உரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் பேரவா.

 

– பேனாக்காரன்.