Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

பெரியார் பல்கலை

 

சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார்.

அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.

 

அங்கமுத்து

 

குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. அத்தனையிலும் இனச்சுழற்சி, போலிச்சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்கள் உள்ளதாகவும், அவை பணத்தின் மூலம் சரிக்கட்டப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அப்போதைய பதிவாளர் அங்கமுத்துவின் பெயரும் சேர்த்தே அடிப்பட்டது. இந்த நிலையில்தான், பதிவாளர் பணியில் இருந்து 2015ம் ஆண்டு அங்கமுத்து ஓய்வு பெற்றார்.

அவர் விடுபட்ட நாளில் இருந்து, அதற்குமுன் பணி நியமனம் செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய முக்கிய கோப்புகள் பல்கலையில் இருந்து திடீரென்று மாயமாகின.

 

சுவாமிநாதன்

 

கோப்புகள் மாயமானது தொடர்பாக அங்கமுத்து மீது இப்போதைய பதிவாளர் மணிவண்ணன் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 16.12.2017ம் தேதி புகார் கொடுத்தார். அதற்கு அடுத்த இரு நாள்களில், அதாவது 18.12.2017ம் தேதி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சேலம் வந்திருந்தார்.

அன்றைய தினம் ஆளுநரிடமும் நேரடியாக அங்கமுத்து மீதான புகார் மனுவை அளித்து, மேலும் நெருக்கடியை உருவாக்கிடும் திட்டத்தில் இருந்தனர் பல்கலை முக்கிய புள்ளிகள்.

ஏற்கனவே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் அவரை கைது செய்யவும் காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

 

கிருஷ்ணகுமார்

 

‘இந்த வலையில் எப்படியும் சிக்கிவிடுவோம். அப்படி சிக்கிக்கொண்டால் தன் குடும்பத்தின் மானம் கப்பலேறி விடும்,’ என்பதை உணர்ந்திருந்த அங்கமுத்து, 18.12.2017ம் தேதியன்று வீட்டில் விஷ மாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

”பெரியார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நேர்காணலுக்கான பத்து பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் அங்கமுத்துவும் இருந்தார்.

எப்படியும் இதே பல்கலைக்கு மீண்டும் துணைவேந்தர் ஆகிவிட வேண்டும் என்று சுவாமிநாதனும், ஆளுநர் ஒருவரின் மகன் மூலம் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் இறுதி பட்டியலில் அவருடைய பெயர் விடுபட்டுப்போனது. அதேநேரம், அங்கமுத்துவுக்கு துணைவேந்தர் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

 

நெல்சன்

 

அவர் துணைவேந்தர் ஆகிவிட்டால், எங்கே தனது தகிடுதத்தங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக, அவருடைய சமூகத்தைச் சார்ந்த ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளிகள், முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் சக ஊழியர்கள் மூலம் அங்கமுத்துவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

சூரமங்கலம் காவல் நிலையத்தில் அங்கமுத்து மீது கோப்புகள் காணாமல் போனது குறித்து புகார் கொடுக்க, சுவாமிநாதன் கொடுத்த நெருக்கடிதான் காரணம்,” என விவரித்தார் பல்கலையின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர்.

 

ராஜமாணிக்கம்

 

அங்கமுத்து தற்கொலை செய்து கொண்ட சில நாள்கள் கழித்து, அவர் எழுதி வைத்திருந்த 7 பக்கங்கள் கொண்ட ஒரு ‘தற்கொலை குறிப்பு’ கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தை அங்கமுத்து தனது மரண வாக்குமூலமாகவே பதிவு செய்திருந்தார். அதில், முறைகேடான பணி நியமனங்களுக்காக தானே 10 கோடி ரூபாய் லஞ்சமாக வசூலித்துக் கொடுத்துள்ளதாகவும், தான் பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகியபின்னர் துணைவேந்தர் சுவாமிநாதன் மேலும் 15 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

தவிர, கல்லூரிகளுக்கு இணைவு வழங்கவும், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் சுவாமிநாதன் பட்டியலிட்டு கையூட்டு பெற்றார் என்ற விவரங்களையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட அங்கமுத்து, சுவாமிநாதனுக்கு லஞ்சம் வசூலித்துக்கொடுக்கும் தரகு வேலையைச் செய்து வந்திருப்பதும் அந்த கடிதம் நமக்கு உணர்த்தியது.

இத்தனை முறைகேடுகளுக்கும் மூளையாக இருந்து இயக்கியது என்று இப்போது பெரியார் பல்கலை டீன் ஆக இருக்கும் பேராசிரியர் கிருஷ்ணகுமாரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

 

குழந்தைவேல்

 

பதிவாளர் மணிவண்ணன், அலுவலக ஊழியர்கள் நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம், ஸ்ரீதர் ஆகியோரும் தனது தற்கொலைக்குக் காரணமாகச் சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக, கோப்புகள் காணாமல் போனதன் பின்னணியில் அலுவலக ஊழியர்கள் நால்வருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ‘ஹின்ட்’ கொடுத்திருந்தார். இந்த நால்வரும், ஒரே பிரிவில் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் பணியாற்றுவதுதான் அத்தனை முறைகேடுகளுக்கும் காரணம் என்று பல்கலை வட்டாரத்தில் இப்போதும் கடும் சலசலப்புகள் உண்டு.

 

ஸ்ரீதர்

 

 

”தற்கொலைக்குக் காரணமானவர்கள் யார் யார் என்று முன்னாள் பதிவாளர் தெளிவாக மரண வாக்குமூலம் எழுதி வைத்துள்ளார்.

அதன்பேரில் பெரியார் பல்கலையின் இப்போதைய துணைவேந்தர் கொழந்தைவேல் இதுவரை ஏன் உள் விசாரணை செய்யவில்லை?. லஞ்ச ஒழிப்புப்பிரிவு விசாரணையும் மந்தமாக நடக்கிறது,” என்கிறார் பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு போல் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைக்கவே, அதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்.

 

இளங்கோவன்

 

அங்கமுத்து வழக்கு குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சிலரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார்கள்.

”முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மையினராக உள்ள வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இந்த மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் நேரடி ஆசி எப்போதும் உண்டு.

அதுமட்டுமில்லாமல் ஈரோட்டை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவர். அவருக்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் நல்ல செல்வாக்கு இருப்பதால்தான் அங்கமுத்து வழக்கை காவல்துறையினரும் அப்படியே ஆறப்போட்டு விட்டனர்.

அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம் என்று அப்போதே எங்களிடம் உயரதிகாரிகள் நேரடியாகவே கூறிவிட்டனர். தற்கொலை கடிதம் உடனடியாக கண்டெடுத்திருந்தால் இந்த வழக்கின் தன்மை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஒரு வாரம் கழித்துதான் கடிதம் கிடைத்தது.

 

சடலமாக அங்கமுத்து…

 

அதனால் அதன் உண்மைத்தன்மை அறிய ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இது தற்கொலை வழக்கு என்ற அளவோடு முடிந்துவிட்டது. இதன் மூல வழக்கு, சேலத்தில்தான் நடக்கிறது,” என்றார்கள்.

இதுபற்றி சேலம் சூரமங்கலம் காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ”தற்கொலை செய்து கொண்ட அங்கமுத்துவும் நிறைய முறைகேடுகள் செய்துள்ளார். அவரை கைது செய்யும் முடிவில் இருந்தபோதுதான் தற்கொலை செய்து கொண்டார்.

அரசியல் அழுத்தம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், இப்போதுள்ள பதிவாளர், முன்னாள் துணைவேந்தர் ஆகியோருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது,” என்றார்.

பெரியார் பல்கலை பதிவாளர் மணிவண்ணனிடம் பேசினோம்.

”அங்கமுத்து தற்கொலை தொடர்பாகவும், ஆவணங்கள் மாயமானது குறித்தும் காவல்துறை தரப்பில் இருந்து இரண்டு மூன்று முறை சில ரிப்போர்ட்டுகளை கேட்டனர். கொடுத்து இருக்கிறோம்.

 

பதிவாளர் மணிவண்ணன்

 

அங்கமுத்து எழுதியதாகச் சொல்லப்படும் தற்கொலை கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்துதானா? என்பதை உறுதிப்படுத்த பல்கலையில் அவர் ஏற்கனவே கைப்பட எழுதிய சில ஆவணங்களை கேட்டனர். அதையும் கொடுத்துள்ளோம்.

காவல்துறையில் வழக்கு விசாரணை நடந்து வருவதால், கோப்புகள் மாயமானது குறித்து இப்போதைக்கு உள் விசாரணை நடத்த தேவையில்லை என்று விட்டுவிட்டோம்,” என்றார் மணிவண்ணன்.

அர்த்தமற்ற காலதாமதம்கூட நீதியை மழுங்கடித்து விடும்.

 

– பேனாக்காரன்.