எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மேலும் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14, 2018) உத்தரவிட்டுள்ளது.
எட்டுவழிச்சாலை
சேலம் – சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. இதற்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கும் எட்டு வழிச்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வரை 277.3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களில் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். ஏற்காடு, கல்வராயன் மலைப்பகுதிகளை குடைந்தும் இதற்காக வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
இந்த திட்டத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் இடப்பெயர்வுக்கு உள்ளாக நேரிடும் என்பதோடு, முப்போகம் விளையக்கூடிய விளை நிலங்களை இழக்கும் அபாயமும் உள்ளது. மேலும், வனவளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலேயே எட்டு வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும், அவற்றில் உள்ள பலன் தரத்தக்க மரங்களுக்கும் கொடுக்கப்படும் இழப்பீடு தொகையில் முதல்வரும், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொன்னதாலும் இத்திட்டத்தின் மீது மக்களிடையே நம்பகத்தன்மையை குறைத்தது.
அத்துடன், சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல ஏற்கனவே மூன்று சாலை வழித்தடங்கள் மட்டுமின்றி ரயில் வழித்தடங்கள் இருப்பதால் எட்டு வழிச்சாலை தேவையற்றது என்ற கருத்தும் பரவலாக நிலவியது.
இந்த நிலையில்தான், பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை எதிர்த்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, புவுலகின் நண்பர்கள் இயக்கம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 21, 2018ம் தேதி, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டு வழிச்சாலைக்காக மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்த தடை விதித்ததோடு, வழக்கு விசாரணையை செப்., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக அதிகாரிகள் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துவிட்டு, மரங்களை வெட்டி வருகின்றனர்,’ என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அதிகாரிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர்.
மேலும், இந்த திட்டப்பணிக்காக தமிழக அரசு நிலம் அளவீடு செய்தது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.
இடைக்கால தடை
அதன்படி, எட்டு வழிச்சாலை வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 14, 2018) நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் சில மாறுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டமும் உள்ளது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதுவரை நிலம் எடுப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்,” என்றனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”ஒரு மரத்தை வெட்ட அனுமதி பெற்றுவிட்டு, அதிகாரிகள் 109 மரங்களை வெட்டி உள்ளனர்,” என்றனர்.
அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”மரங்களை வெட்டியது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,” என்றனர்.
பின்னர் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், ”எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன,” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ”மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இரண்டு வார காலத்திற்கு எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தவும், அது தொடர்பான இதர பணிகளை மேற்கொள்ளவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,” என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மரங்களை வெட்டிய 5 பேரின் குற்றப்பின்னணிகளை அறிக்கையாக தாக்கல் செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அறிக்கையை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
– பேனாக்காரன்.