Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

– சிறப்பு செய்தி –

 

சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் பலியாகின்றனர் என்பது போக்குவரத்துத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவது போக்குவரத்துத்துறைக்கு கடும் சவாலாக விளங்குகிறது. சாலை விபத்துகளில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவது பெரும் சவாலாக உள்ளது.

இதையடுத்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.

 

கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளனர். தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் சாலை விபத்து மரணங்கள் வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில், ஜுன் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 6650 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் விபத்து மரணம் 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துத்துறை (ஆர்டிஓ) அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதில் சில நுட்பமான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரன், கிழக்கு ஆர்டிஓ கதிரவன் ஆகியோர் சாலை விபத்துகள் குறித்த ஆய்வுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்ததில் சில தரவுகளை சேகரித்துள்ளனர்.

”சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 2018, ஜூன் மாதம் வரை சாலை விபத்து மரணங்களை 45% வரை குறைத்து இருக்கிறோம். எல்எல்ஆர்&க்கு விண்ணப்பிக்க வரும்போதே, அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கிறோம்.

 

பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் வீதி நாடகங்கள் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதன் கட்டாயம், மது அருந்திவிட்டோ, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதுபோன்ற முயற்சிகளால்தான் சாலை விபத்து மரணங்கள் கணிசமாக குறைந்திருக்கலாம் என நம்புகிறோம்.

 

அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கெல்லாம் உயர்மட்டப் பாலங்கள் கட்டவும் பரிந்துரை செய்யப்படுகிறது. கிழக்கு ஆர்டிஓ எல்லைக்குள் மின்னாம்பள்ளி ஜங்ஷன், ராமலிங்கபுரம் ஜங்ஷன், ராயல் பார்க் பள்ளி ஜங்ஷன், சன்னியாசிகுண்டு ஜங்ஷன், பெருமாள் கோயில் மேடு ஜங்ஷன், மாசிநாயக்கன்பட்டி ஆகிய ஆறு இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் பாலம் கட்ட பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,” என்கிறார் சேலம் கிழக்கு ஆர்டிஓ கதிரவன்.

சாலை விதிகள் குறித்து சேலம் மாவட்ட போக்குவரத்துத்துறையினர் ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு ஜனரஞ்சகமான உத்திகளையும் கையாண்டு வருகின்றனர். எமதர்மன், சித்ரகுப்தன் ஆகியோரைப்போல் வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் சென்று வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இன்னும் சில இடங்களில், ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வரும் எம்ஜிஆர் போல் வேடமிட்டு டிரம்பெட் கருவி வாசித்தும், பாட்டுப்பாடியும் விழிப்புணர்வு பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர். முன்பெல்லாம், ஆண்டுக்கு ஒருமுறை சாலை பாதுகாப்பு வாரவிழாவில் மட்டுமே இடம்பெற்ற இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை இப்போது தொடர்ச்சியாக மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது போக்குவரத்துத்துறை.

 

கிழக்கு ஆர்டிஓ எல்லையில் மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விதிகளை மீறிய 3364 இருசக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 99 பேரின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இனி அவர்களால் நாட்டின் எந்த மூலையிலும் லைசென்ஸ் பெற இயலாது.

சாலை விபத்து மரணங்கள் பற்றிய ஆய்வில் இரண்டு முக்கிய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. முதலாவது, இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால் விபத்தில் சிக்கியிருக்கின்றனர். இரண்டாவது, அதிவேகம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாலும் விபத்துகள் அதிகரிக்கின்றன.

 

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் ரொம்பவே மெனக்கெடும் சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரனிடம் பேசினோம்.

 

”டீன் ஏஜ் முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 820 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணியாததால் தலைக்காயம் ஏற்பட்டு பலியானவர்கள் 330 பேர். ஹெல்மெட் அணிந்திருந்தும் 27 பேர் தலையில் அடிபட்டு இறந்துள்ளனர்.

ஹெல்மெட் போட்டிருந்தாலும் விபத்தில் மரணம் நிகழத்தானே செய்கிறது என்ற கேள்வி வரக்கூடும். ஹெல்மெட் போட்டிருந்தும் விபத்தில் இறக்க நேர்ந்தால்… அந்த ஹெல்மெட் தரமற்றவையாக இருக்கும். அல்லது, ஹெல்மெட்டை ‘லாக்’ செய்யாமல் வெறுமனே தலையில் கவிழ்த்து இருப்போம். அதிவேகமாக ஒரு விபத்தைச் சந்திக்கும்போது ‘லாக்’ செய்யப்படாத ஹெல்மெட் முதலில் கழன்று ஓடிவிடும். அப்போது தலையில் அடிபட்டு இறப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

காரில் செல்லும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அப்படி அணிந்திருந்தும் சாலை விபத்தில் சிக்கியதில் 4 பேர் இறந்துள்ளனர். அதேநேரம், சீட் பெல்ட் அணியாதவர்கள் 27 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். சீட் பெல்ட் சரியாக அணியாவிட்டாலும், விபத்தின்போது உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 

சேலம் மாவட்டம் முழுவதும் அடிக்கடி விபத்து நிகழக்கூடிய 108 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’களாக கண்டறிந்து இருக்கிறோம். அந்த இடங்களில் எல்லாம் சாலைகளில் இரவில் மினுங்கும் விளக்குகள், சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்கள், ஒளிரும் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாலையின் அகலத்தைக் குறைப்பதற்காக தடுப்புகளும் வைத்துள்ளோம். இதுபோன்ற பணிகளுக்காக அரசு ரூ.2.80 கோடி ஒதுக்கியுள்ளது.

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் வாகன ஓட்டிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து இப்போது சாலை விதிகள் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் டிஜிட்டல் திரை மூலம் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறோம். இதுமட்டுமின்றி, வாகன ஓட்டுநர்களுக்கென பிரத்யேகமாக மருத்துவ முகாம்கூட நடத்தி வருகிறோம்,” என்றார் ஆர்டிஓ தாமோதரன்.

 

சேலம் மேற்கு ஆர்டிஓ எல்லையில், சாலை விதிகளை மீறியதாக 3800 பேரின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்துத்துறையினர் இப்போதெல்லாம் விழிப்புணர்வு பிரச்சார பயணங்களை சாலை விதிகளோடு நிறுத்திக் கொள்வதில்லை. டெங்கு காய்ச்சல் குறித்தும், நிலவேம்பு கசாயம் குறித்தெல்லாம்கூட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.